இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் கனமான கலையாக்கம்!
‘பகை எப்படி ஆரம்பிச்சுதுன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கலாம்; ஆனா, பகை எப்படி முடிஞ்சுதுனு யாருக்கும் தெரியக்கூடாது.’ இந்த ஒற்றை வசனத்தை வைத்து ஓராயிரம் கதைகள் எழுதலாம். இன்றைய தேதியில் ‘பேட்டைக்காளி.’
காலம்காலமாக ஏழை எளிய மக்களை தங்கள் அதிகாரத் திமிருக்கு அடிபணிய வைத்து சுகம்கண்ட பரம்பரையின் வாரிசு பண்ணையார் செல்வசேகரன். அவரை வீழ்த்த, பழிவாங்க நியாயமான சிலபல காரணங்களோடு காத்திருக்கும் முத்தையா. அவருக்கு தளபதியாக பாண்டி. இந்த இருதரப்புக்கும் இடையே நடக்கும் மோதலோடு ஜல்லிக்கட்டும் கைகோர்க்க ‘பேட்டைக்காளி’யின் ஒவ்வொரு காட்சியும் குருஷேத்ரம்; வன்மமும் வன்முறையும் கைகோர்த்து சமர்செய்கிற ரத்தசரித்திரம்!
கதையே ஹீரோவாக இருக்கிற இந்த தொடரில் தான் தூக்கி வளர்த்த பெண்ணை திடுதிப்பென கூட்டிப் போய் வயது வித்தியாசம் பார்க்காமல் மனைவியாக்கிக் கொள்வது, தன் சொந்த மகனுக்குக்கூட அதிகாரத்தை பங்கிட்டுக் கொடுக்க மனமில்லாதது, தன் காளையை ஜல்லிக்கட்டில் அடக்கியவனை ஜென்ம விரோதியாகப் பார்ப்பது, மனைவியாலேயே நுட்பமாக பழிவாங்கப்படும்போது இயலாமையில் தவிப்பது என செல்வசேகரன் கேரக்டரில் வரும் வேல ராமமூர்த்தி காட்சிக்கு காட்சி காட்டியிருக்கும் கெத்து அத்தனை கம்பீரம்.
ஏற்கும் கேரக்டரில் வாழ்ந்துவிடுகிற கிஷோர் இந்த படத்தில் முத்தையா என்ற பாத்திரத்தில் அதையே செய்திருக்கிறார். மகனைப் போல் நினைத்து வளர்ப்பவனை எதிர்தரப்பு இரையாக்கிக் கொள்ள அவனைப் போலவே பலரை உருவாக்குவது கதையோட்டத்தின் ஆழமான அஸ்திவாரம்!
எப்பேர்ப்பட்ட காளைகளையும் ஜல்லிக்கட்டில் அடக்கியாளும் வீரன் பாண்டியாக கலையரசன். ஆயிரம் காளைகளின் பலத்தை தன் நடிப்பு பங்களிப்பில் கொண்டு வந்திருப்பது தனித்துவம்!
ஆற்றில் அடித்துவரப்படும் கன்றுக்குட்டியைக் காப்பாற்றி ஜல்லிக்கட்டுக்குத் தயார் படுத்துவது, அந்த காளை களத்திலிறங்கும்போது குழந்தையாய் குதுகலிப்பது என தன் பங்குக்கு கவர்கிறார் ஷீலா ராஜ்குமார்!
படத்தில் திரள்திரளான கூட்டத்துக்கும், நடிகர் நடிகைகளுக்கும் பஞ்சமில்லை. அத்தனைப் பேரின் பங்களிப்பும் குறையில்லாமல் குவிந்திருப்பது படத்தின் பலம்!
ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாயும் காட்சிகள் சிலிர்ப்பு!
வழக்கமான பழிவாங்கல் கதைதான் என்றாலும் கதைக்களத்தை அதனதன் தன்மை மாறாமல் அதனதன் பிரமாண்டத்தோடு, துளியும் விறுவிறுப்பு குறையாமல் படமாக்கியிருக்கும் இயக்குநர் ல. ராஜ்குமாரின் உழைப்புக்கு எழுந்து நின்று சல்யூட் அடிக்கலாம்!
வேகமெடுக்கும் காட்சிகளுக்கு வீரியமூட்டுகிறது சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை. ஒளிப்பதிவாளரின் உழைப்புக்கு தனி பாராட்டு!
‘ஆஹா’ தமிழ் ஓடிடி தளத்தில் 4 எபிசோடுகளை கடந்து 5-வது எபிசோடையும் நெருங்கியிருக்கிற பேட்டைக்காளி யதார்த்த சினிமா ரசிகர்களுக்கு ஃபுல்மீல்ஸ்; ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு வரப்பிரசாதம்!
அடுத்தடுத்த எபிசோடுகளில் காத்திருக்கிறது வேறலெவல் வெறித்தனம்!
-சு. கணேஷ்குமார், 99415 14078