Home சினிமா இந்த படத்தின் டிரெய்லர் ஆங்கிலப் படத்தின் டிரெய்லரைப் போலிருக்கிறது! –‘பருந்தாகுது ஊர் குருவி’ படத்தின் பத்திரிகையாளர்...

இந்த படத்தின் டிரெய்லர் ஆங்கிலப் படத்தின் டிரெய்லரைப் போலிருக்கிறது! –‘பருந்தாகுது ஊர் குருவி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு

சர்வைவல் திரில்லராக, நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பருந்தாகுது ஊர் குருவி.’

இந்த படத்தில் நாயகியாக மும்பை மாடல் காயத்ரி ஐயர் நடிக்க மற்ற பாத்திரங்களில் ‘ராட்சசன்’ வினோத் சாகர், அருள் டி சங்கர், ‘வாதகோடங்கி’ வடிவேல், இ. ராம்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனபாலன் கோவிந்தராஜ் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media தனது முதல் படைப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது. சுரேஷ் EAV, சுந்தர கிருஷ்ணா P.வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சில தினங்கள் முன் சென்னையில் நடந்தது.நிகழ்வில் இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் பேசும்போது, ”இந்தப்படம் நண்பர்களால் உருவானது. படத்தின் விஷுவல் நன்றாக வந்ததற்குக் காரணம் அஷ்வின் நோயல். மாஸ்டர் ஓம் பிரகாஷ், இசையமைப்பாளர் ரெஞ்சித் உண்ணி சிறப்பாக பணியாற்றியுள்ளனர். நடிகர்கள் படக்குழுவில் பணியாற்றிய அனைவரும் அவர்கள் படம் போல் வேலை செய்தார்கள். எல்லோருக்கும் நன்றி. என் உதவியாளர்கள் நாளைய இயக்குநர்கள். இந்தப்படம் ஒரு சிறப்பான அனுபவம் தரும். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து, ஆதரவளியுங்கள் நன்றி” என்றார்.

திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் பேசும்போது, ”இந்த படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது ஆங்கிலப் படத்தின் டிரெய்லரைப் போன்று உள்ளது. ஒளிப்பதிவு அருமையாக உள்ளது. பருந்தாகுது ஊர் குருவி படம் வெளியான பின்னர் நாம் அனைவரும் இவர்களை மேலே தான் பார்க்க முடியும்” என்றார்.

நாயகன் நிஷாந்த் ரூஷோ பேசும்போது, ”பட விழாவிற்கு வந்திருக்கும் வெற்றி இயக்குநர்கள் தான் எங்களின் நாயகர்கள். என்னை ஏமாற்றிய, எனக்குத் துரோகம் செய்த, பாடம் கற்பித்துத் தந்த அனைவருக்கும் நன்றி. உங்கள் முன்னால் நான் ஜெயித்துக் காட்டுவேன். எப்போதும் கதைதான் முக்கியம். இந்த படம் சிறந்த அனுபவம் தரும். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி” என்றார்.

நாயகி காயத்ரி பேசும்போது, ”எனக்கு இப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் தனபாலன் சாருக்கு நன்றி, மற்ற படங்களைப் போல் இல்லாமல் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. அதை  நான் நன்றாகச் செய்துள்ளேன் என்று நினைக்கிறேன” என்றார்.

நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது, ”எழுத்துக்களால் உலகின் அனுபவத்தை நமக்கு விட்டுச் செல்பவர்கள் எழுத்தாளர்கள். அப்படிப்பட்ட எழுத்தாளர்களால் இந்த மேடை நிறைந்திருப்பது மகிழ்ச்சி. இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடித்த அனுபவமாக இருக்கும். இந்தப்படத்தில் வாய்ப்பளித்த குழுவிற்கு உடன் பணியாற்றிய நண்பர்களுக்கும் நன்றி” என்றார்.

நடிகர் வாத கோடங்கி வடிவேல் பேசும்போது, ”நான் பேச நினைத்ததையெல்லாம் அனைவரும் பேசி விட்டனர். இயக்குநருக்கு நன்றி. ஏனென்றால் ஆறு நாள் எனக்குப் படப்பிடிப்பு என்று கூறி, ஆறு நாளும் என்னை வைத்துப் படத்தை எடுத்தார். சில இயக்குநர்கள் 10 நாள் எனச் சொல்லி ஒரு நாள் தான் எடுப்பார்கள். இந்த படத்தில் உதவி இயக்குநர்கள் அனைத்து வேலைகளையும் மிகவும் ஈடுபாட்டோடு செய்தனர். இந்த பெரும் காட்டில் என்னையும் ஒரு சிறு அணிலாக இணைத்துக் கொண்டதற்கு நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் சுந்தர் கிருஷ்ணா பேசும்போது, ”இந்த படத்தை நான், சுரேஷ் மற்றும் வெங்கி சந்திரசேகர் மூவரும் இணைந்து தயாரித்துள்ளோம். இங்கு வந்துள்ள திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் சந்திரன் அய்யாவிற்கு நன்றி. வெற்றி பெற்ற இளம் இயக்குநர்களை வைத்து இந்த விழாவை துவங்க நினைத்து எல்லோரையும் அழைத்தோம். பல நாட்கள் இந்த மேடைக்காக ஏங்கியுள்ளேன், இப்போது அது நிறைவேறியுள்ளது. படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள், இந்த படம் மார்ச் 24ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை மக்களிடம் கொண்டு செல்லுமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் பஜார் திருநாவுக்கரசர் பேசும்போது,
”கதாநாயகன் நிஷாந்த்தின் முந்தைய படமான ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தை நாங்கள்தான் வெளியிட்டோம். அது நல்ல வரவேற்பைப் பெற்றது. நாம் அனைவரும் ஊர் குருவி தான், அனைவரும் பருந்தாகத்தான்  முயற்சி செய்கிறோம். அந்த வகையில் படத்தின் தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பலரிடமும் நான் அதைச் சொல்லிக்கொண்டிருந்தேன். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் சிறப்பாக இருந்தது, தயாரிப்பாளருக்கு இந்த படம் பெரும் வெற்றிப் படமாக இருக்கும்” என்றார்.

சிறப்பு விருந்தினர்கள் பேசியதன் விவரம்

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, ”தனபாலன் அண்ணா, ரஞ்சித் அண்ணா, நான் எல்லாம் ஒன்றாக வேலை பார்த்ததாகச் சொன்னார்கள். ஆனால் அவர் உதவி இயக்குநராக இருக்கும்போது, நான் ஆபிஸ் பாயாக இருந்தேன். எனக்கு முன்பே அவர் இயக்குநராக வேண்டியவர். அவரை அறிமுகப்படுத்தும் அளவு நான் பெரிய ஆளில்லை. சினிமாவை ஆழமாகப் புரிந்து கொண்டவர். இவர்களிடம் இருந்து தான் சினிமாவே கற்றுக்கொண்டேன். இத்தனை நீண்ட கால போராட்டத்தைக் கடந்து இந்த மேடையை தனபாலன் அண்ணா கையாண்டது விதம் ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அண்ணாவுக்கு நான் சொல்ல ஒன்றுமில்லை. அவர் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறுவார். மேலும் இந்த படக்குழுவிற்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் விருமாண்டி பேசும்போது, ”படத்திற்கு தலைப்புதான் முக்கியம். அதைப் பார்த்துத் தான் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள். இந்த தலைப்பை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. படத்தின் கதைக்களம் பெட்டி கேஸை பற்றி பேசுவதாகத் தெரிகிறது, படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் முத்துக்குமார் பேசும்போது, ”புது இயக்குநர்களின் படைப்பு பல விதமான அனுபவங்களை அளிக்கும், அது போல இப்படமும் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தைத் தரும். இந்தப் படத்தை  மக்களிடம் கொண்டு சேர்க்கும் நடிகர் பிரசன்னா அவர்களுக்கு நன்றி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்