‘அருவி’, ‘வாழ்’ என உணர்வுபூர்வமான படங்களை இயக்கிய அருண் பிரபுவிடமிருந்து தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிற பெட்ரோல் கிணற்றில் தீப்பற்றியதுபோல் பரபரப்பு கூட்டும் பொலிடிகல் ஆக்சன் திரில்லர்.
பெரும் பணக்காரர்களாக இருக்கிற கெட்டவர்களிடமிருந்து பணத்தை சாமர்த்தியமாக தட்டித் தூக்கி, ஏழை எளியவர்களுக்கு உதவுகிற ஹீரோக்களை பல படங்களில் பார்த்துள்ளோம். அதே பாணியில் செயல்படுகிறவர் இந்த கதையின் நாயகன் கிட்டு. அப்படி அவர் தட்டித் தூக்கும் பணம் ஒரு கோடி, இரு கோடியல்ல; பல கன்டெய்னர்களில் ஏற்றினாலும் இடம் பத்தாது என்கிற அளவிலான பல்லாயிரம் கோடி.
அவர் அத்தனை கோடியை பலரிடமிருந்து சுருட்டியபின் சுதாரித்துக் கொள்ளும் காவல்துறையினரும் அவரிடம் பணத்தை பறிகொடுத்தவர்களும் அவரை கண்டுபிடித்து பணத்தை மீட்க, மீட்டபின் போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போட அதில் அவர் சிக்குகிறார், தப்பிக்கிறார். இரண்டும் எப்படி நடக்கிறது என்பது கதையின் மீதி… பெரியாரின் சிந்தனைகள் துவப்பட்டிருக்கும் காட்சிகளால் பிளாஷ்பேக் பலமாகியிருக்கிறது. இயக்கம் அருண் பிரபு புருஷோத்தமன்
கிட்டுவாக வருகிற விஜய் ஆண்டனிக்கு தலைமைச் செயலகத்தில் தரகராக இருந்தபடி யாருக்கு என்ன வேண்டுமோ அதை லஞ்சம், கமிஷன் என வாங்கிக்கொண்டு செய்து கொடுக்கிற வேலை. அது டிரான்ஸ்பராக இருந்தாலும் சரி, யாரையாவது கொன்று தீர்க்க வேண்டியிருந்தாலும் சரி… அதற்காக திட்டமிடுகிற மாஸ்டர் மைண்ட் பிரசன்டேசன் ஆச்சரியமூட்டுவதாக இருக்க, நடிப்புப் பங்களிப்பில் கம்பீரமும் தெனாவட்டும் கலந்துகட்டி கவனம் ஈர்க்கிறார்.
பணபலமும் அரசியல் பலமும் வாய்ந்த, இந்திய அரசியலையே ஆட்டிப்படைக்கிற சக்தியாக வந்து வில்லத்தனத்தில் வெளுத்து வாங்கியிருப்பவர் ‘காதல் ஓவியம்’ பட நாயகன் கண்ணன். தோற்ற மாற்றமும் ஆங்கில உச்சரிப்பும் உடல்மொழியும் ‘அட அவரா இவர்?’ என பிரமிப்பூட்டுகிறது.
ஏழை எளிய நல்லவர்களுக்கு கடவுளாகவும் கெட்டவர்களுக்கு பகையாளியாகவும் சட்டத்தின் முன் மாபெரும் குற்றவாளியாகவும் இருக்கிற ஒருவனுக்கு மனைவி என்றால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும்; மிரட்டலை எதிர்கொள்ள வேண்டும்; அடி உதை வாங்கி ரத்தம் சிந்த வேண்டும். அதையெல்லாம் திருப்தியாக செய்திருக்கிறார் விஜய் ஆண்டனியின் மனைவியாக வருகிற த்ருப்தி ரவீந்திரா.
விஜய் ஆண்டனி செயல் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு துணையாக நிற்கிற செல் முருகன், விஜய் ஆண்டனியை வளர்த்து சமூகத்தின் களைகளை அகற்றும் போராளியாக உருவாக்குபவராக வாகை சந்திரசேகர், மத்திய குற்றப் புலனாய்வு விசாரணை அதிகாரியாக கிரண் குமார், அதிகாரத் திமிரில் மிதக்கும் பெண்மணியாக ஷோபா விஷ்வநாத் என இன்னபிறர் ஏற்ற கேரக்டருக்கேற்ற நடிப்பை பொருத்தமாக தர, பரபரப்பான காட்சிகளுக்கு சுறுசுறுப்பூட்டும் பின்னணி இசையை வழங்கியிருக்கிறார் விஜய் ஆண்டனி.
ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஆர். காலிஸ்ட்டின் ஈடுபாடுமிக்க உழைப்பு அத்தனை பிரேமிலும் பிரமாண்டமாக தெரிகிறது.
கதையோட்டம் விறுவிறுப்புதான்; மாற்றுக் கருத்தில்லை. கதைநாயகன் செய்வதெல்லாம் மிரட்டலாக, சுவாரஸ்யமாக இருக்கிறதுதான்; மறுப்பதற்கில்லை. அதே நேரம் ‘இப்படியெல்லாம் ஒருவன் செயல்பட முடியுமா?’, ‘நடக்கும் சம்பவங்களெல்லாம் சாத்தியமா?’ என்பதுபோல் கேள்வியெழுப்புகிற மூளை உங்களுக்கு இருக்குமானால் படம் அதிருப்தி தரலாம்.
சக்தித் திருமகன் _ அதிகாரத் திமிருக்கு ஆப்பு வைத்தவன்!


