Home பொது ‘பண்டமாற்று’ குறும்பட விமர்சனம்

‘பண்டமாற்று’ குறும்பட விமர்சனம்

நம்மூரில் ‘எளியாரை வலியார் வாட்டினால், வலியாரைத் தெய்வம் வாட்டும்’ என்ற பழமொழி இருக்கிறது. அதற்கு, ‘எளிய மனிதர்களை பலமானவர்கள் கொடுமைப்படுத்தினால், அவர்களை தெய்வம் தண்டிக்கும்’ என்று அர்த்தம். இந்த கதை, ‘எளிய மனிதர்களை பலமானவர்கள் கொடுமைப்படுத்தினால் அவர்களைத் தண்டிக்க பல மடங்கு பலசாலி எங்கிருந்தாவது வருவான்’ என கருத்து சொல்கிறது.

பெரிதாய் வளமில்லாதது போல் தோற்றமளிக்கிற அந்த கிராமத்தில் ஒரு இளம்பெண் நகை, பைக், சைக்கிள் உள்ளிட்ட பொருட்களை அடமானத்துக்கு பெற்றுக்கொண்டு வட்டிக்கு கடன் கொடுப்பதை தொழிலாக செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாளராக ஒரு இளைஞன். இருவருமாகச் சேர்ந்து, ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கிற காட்டுப் பகுதியில் ஜாலியாக இருப்பதற்காக ஒதுங்கும் காதலர்களைக் கொன்று, அவர்களிடமுள்ள நகைகளையும் பணத்தையும் அபகரிக்கிறார்கள்.

இப்படி அதிரடியாக துவங்கும் கதை, கொலை செய்பவர்களின் நோக்கம் நகை பணம் மட்டும்தானா, அவர்கள் செய்கிற குற்றங்களுக்கு எப்படியான தண்டனை கிடைக்கிறது என்பதையெல்லாம் பரபரப்பாக எடுத்துக்காட்டி நிறைவுக்கு வருகிறது.

நாயகியாக ஜெயசுதா. கிராமத்துப் பின்னணியில் நடக்கும் கதைக்கேற்ற நிறமும் முக வெட்டும் இயல்பாக அமைந்திருக்கிறது.

அவருக்கு வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாதவர்களிடம் நெருப்பு வார்த்தைகளைக் கொட்டுவது, இழுத்துப் போட்டு மிதிப்பது,  தாலிச்செயினை அறுத்து கையிலெடுத்துக் கொண்டு ‘கடன திருப்பிக் கொடுத்துட்டு செயின வாங்கிக்கோ’ என திமிர் காட்டுவது, கொலைகளை குரூரமாகச் செய்வது… இதை தவிர வெறெந்த வேலையுமில்லை. அப்படியொரு கேரக்டரை உள்வாங்கி மனிதாபிமானமற்ற மனுஷியாய் காட்டுக்கத்தல் பேச்சும் வெறியேறிய முகபாவமுமாய் மிரட்டியிருக்கிறார்.

நாயகி செய்கிற சம்பவங்களுக்கு துணை நிற்பவராக (இந்த படத்தை இயக்கியிருக்கிற) கண்ணன் சாவித்ரி. வெடவெட தேகமும் படபட செயல்பாடுகளுமாக வலம் வருகிறார்.

காதல் ஜோடிகள் காட்டுப் பகுதிக்குள் செல்வதை நோட்டமிட்டுச் சொல்கிற கடமையை, அலட்டலில்லாமல் செய்திருக்கிறார் பாஷா. செய்த வேலைகளின் விளைவாக அவர் மனம் நொறுங்கும் சம்பவம் நடக்கும்போது கத்தித் கதறுவார் என்று பார்த்தால், உம்ஹூம் அதற்கு பதிலாக வேறொன்றைச் செய்கிறார். அதுவே கதையின் டிவிஸ்ட்’டாகிறது.

காதல் ஜோடிகள், ஜெயசுதாவிடம்  வட்டிக்கு பணம் வாங்கி அவமானப்படுகிறவர்கள் என மற்றவர்கள் கதைக்கேற்ற தேர்வு.

அர்ஜுன் வி.அக்ஷயாவின் பின்னணி இசை பய உணர்வைக் கூட்டுகிறது. கதைக்களமான அறந்தாங்கியின் சுற்று வட்டாரத்தை, யூகலிப்டஸ் மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியை பாண்டியன் அருணாச்சலத்தின் தெளிவான ஒளிப்பதிவில் சுற்றிப் பார்க்க முடிகிறது.

ஒளிப்பதிவாளரே எடிட்டிங் பணியையும் கவனித்திருக்கிறார். படத்தின் நீளம் நீட் அன்ட் கிளீனாய் 30 நிமிடங்கள்.

படத்தில் அழுத்தமான கதை இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லும்விதமாக மண்புழு, தூண்டில் என அமைத்திருக்கும் ஆரம்பக் காட்சி கண்ணன் சாவித்திரியிடம் கமர்ஷியல் திரைப்படங்கள் இயக்குவதற்கான திறமை இருக்கிறது என்பதற்கு உதாரணம்.

ஊரில் தொடர்ந்து கொலைகள் நடக்க போலீஸ் எட்டிக்கூட பார்க்காமலிருப்பது ஏன்? என்பதிலிருந்து மனதில் உருவாகும் சில கேள்விகளுக்கு பதிலில்லை என்பது படத்தின் பலவீனம். அத்தகைய கேள்விகளுக்கான பதில்களோடு திரைக்கதையை விரிவுபடுத்தினால் இந்த குறும்படம் முழு நீள திரைப்படமாவதற்கு வாய்ப்புண்டு.

பண்டமாற்று – குற்றமே தண்டனை!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்