Home விமர்சனம் பறந்து போ சினிமா விமர்சனம்

பறந்து போ சினிமா விமர்சனம்

‘தங்கமீன்கள்’ தந்தவரிடமிருந்து மற்றுமொரு தரமான படைப்பு; குழந்தைகளின் உலகத்தை முன்வைத்து பேரன்பாய் சுற்றிச் சுழலும் ‘பறந்து போ.’

சிவா _ கிரேஸ் ஆண்டனி தம்பதி தங்கள் மகனை நன்றாக வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கான பொருளாதாரத்துக்காக ஓடுகிறார்கள், ஓடுகிறார்கள், ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். மகனை ஆன்லைன் வகுப்புகளில் சேர்த்துவிட்டு வீட்டிலேயே அடைத்து வைக்கிறார்கள்.

பெற்றோரின் அரவணைப்பு அவ்வளவாக கிடைக்காமல் தனிமையில் தவிக்கும் அவன் ஒரு கட்டத்தில் வீட்டுச் சிறையிலிருந்து வெளியேறி வெளியுலகில் சிறகடித்துப் பறக்க விரும்புகிறான். மகனது ஆசையை நிறைவேற்ற நினைக்கும் தந்தை அவனை பைக்கில் அழைத்துக் கொண்டு ‘டிரிப்’ புறப்படுகிறார்.

அந்த பயணம் மகனை உற்சாகமாக்குகிறது; அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மகனது மனதை, அவன் விரும்பும் உலகத்தைப் புரியவைக்கிறது. அந்த புரிதல் எப்படியெல்லாம் நிகழ்கிறது என்பதை படு சுவாரஸ்யமாக்கியிருக்கிறது இயக்குநர் ராமின் திரைமொழி…

சிவாவுக்கு முந்தைய படங்களைப் போலில்லாமல் ஒரு மகனுக்கு தந்தை என்ற பொறுப்பைச் சுமக்கிற வேலை. வழக்கமான மேனரிஸம், கலகலப்புப் பேச்சு என எதையும் விடாமல் களமாடியிருப்பவர், உணர்வுகளைப் பரிமாறும் தருணங்களில் நடிப்பில் மெச்சூரிடி காட்டி தன் கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்.

தொழில் நிமித்தம் கணவனையும் மகனையும் பிரிந்து வெகுதூரத்திலிருந்தாலும் எந்நேரமும் கணவனுடன் போனில் பேசி மகனைப் பற்றி விசாரிப்பதாகட்டும், மகனைக் காண ஓடிவந்து காணாமல் தவிப்பதாகட்டும், காண்கிறபோது பரவசத்தில் மிதப்பதாகட்டும், தன் வருமானத்தை தன்னிடம் பணிபுரியும் பெண்ணின் அவசரத் தேவைக்காக அள்ளிக் கொடுப்பதாகட்டும் சிவாவுக்கு மனைவியாக வருகிற கிரேஸ் ஆண்டனியின் நடிப்பு அடிப்பொலி.

மகனாக வருகிற மிதுன் மனதில் துளியும் பயமின்றி அங்குமிங்கும் ஓடுவது, ஓங்கி உயர்ந்த மலைகளில் ஏறிவிட்டு இறங்க முடியாமல் தவிப்பது என காலில் ‘சக்கரம்’ கட்டிக்கொண்டு ‘பறந்து போ’கிற காட்சிகள், சேட்டைகள் அத்தனையும் கலகலப்புக்கு கேரண்டி தருகிறது; ஆடியன்ஸில் சிரிப்புச் சத்தத்தில் தியேட்டர் குஷி மூடுக்கு டிரான்ஸ்பராகிறது.

அஞ்சலி வருகிற கொஞ்ச நேரம் கொஞ்சல் நேரமாக இனிமை தந்து கடந்துபோகிறது. அவருக்கு கணவராக வருகிற அஜு வர்கீஸ் அஞ்சலி _ சிவாவின் கிரஸுக்கு தருகிற மரியாதை கவனம் பெறுகிறது.

விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் என இன்னபிறர் பொருத்தமான நடிப்பைத் தந்திருக்க, கதையின் முதல் ஹீரோ சிறுவன் மிதுன் என்றால் ஏகாம்பரத்தின் கேமரா கண்கள் உயர்ந்த மலைகள், பசுமை பரந்த காடு மேடுகள், நெடுஞ்சாலைகள் என பலவற்றின் அழகையும் பிரமாண்டத்தையும் துளிகூட சிந்தாமல் சிதறாமல் திரைக்குள் அடக்கி இரண்டாவது ஹீரோவாகியிருக்கிறது.

குழந்தைகளின் உலகத்தை விசாலமாக உற்றுநோக்கி மதன் கார்க்கி எழுதிக் குவித்த வரிகளுக்கு சந்தோஷ் தயாநிதி தந்திருக்கும் இசையில் படம் முழுக்க பரவசம் சூழ்கிறது. கதையோட்டம் தருகிற ஃபீல்குட் உணர்வை அதிகரிக்கிறது யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை.

பணத்தை தேடி ஓட வேண்டியது அவசியமாகிவிட்ட சூழ்நிலையில், பெற்றோர்கள் இயந்திரத்தனமாக மாறியிருக்கும் காலகட்டத்தில் ஒருபாவமும் அறியாத மழலை மலர்கள் இன்பங்களை நாட வழியில்லாமல் வாடிப்போகிற வேதனையை எடுத்துக் காட்டி, தீர்வும் சொல்லியிருக்கிற ‘பறந்து போ’வை தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என மனம் திறந்து சொல்லலாம்.

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்