‘பத்து தல’ சினிமா விமர்சனம்

ராட்சசன் ரட்சகனாக கொண்டாடப்படுகிற கதை… கன்னட ‘மப்டி’யின் ரிமேக். தமிழுக்கு ஏற்றபடி, சிலம்பரசன் டி.ஆரின் ரசிகர்களுக்கு பிடிக்கும்படியான திரைமொழியில் ‘பத்து தல.’

தன்னுடைய லாரிகள் கடந்துபோகும்போது ரயிலையே நிறுத்தி வைக்கிற அளவுக்கு செல்வாக்கு மிகுந்தவர் மணல் கடத்தல் பிஸினஸில் தாதாவாக இருக்கிற ஏ.ஜி. ராவணன் என்கிற ஏஜிஆர்.! அவருக்கு, மாநிலத்தை யார் ஆள வேண்டும் என தீர்மானிக்கிற சக்தியும் உண்டு; மக்கள் கொண்டாடும் மாமனிதனாக இன்னொரு முகமும் உண்டு.

இப்படியான கதையில் அப்படிப்பட்டவரை வேரோடும் வேரடி ‘மண்’ணோடும் வீழ்த்த வியூகங்கள் வகுக்கப்படும்தானே? வழக்கம்போல் இந்த கதையிலும் அப்படியான வியூகங்கள் வகுக்கப்படுகின்றன… வகுப்பது யார் யார்? அவற்றை எப்படி எதிர்கொள்கிறார் ஏஜிஆர்? அம்புட்டுத்தான் கதை… இயக்கம் ஓபிலி கிருஷ்ணா

அடர் தாடி, அம்சமான உடை, அசத்தல் நடை, மிரட்டலான வசன உச்சரிப்பு, சண்டைக் காட்சிகளில் சூரிய வெப்பத்தின் ஆக்ரோஷம் என தான் ஏற்றிருக்கும் முரட்டுத்தனமான பாத்திரத்துக்கு உச்சபட்ச தெம்பூட்டியிருக்கிறார் சிம்பு! ‘அக்கரயில’ பாடலுக்கான அவரது நடனத்தில் அத்தனை எனர்ஜி!

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கிற கெத்தான வேடத்தில் கெளதம் கார்த்திக். கல்லூரிக் காலத்தில் அந்த வயதுக்கேயுரிய அத்தனை அம்சங்களோடும் வலம் வருவது, சூழ்ச்சி வலைவிரித்து ஏஜிஆருடன் கை கோர்ப்பது என நடிப்புப் பங்களிப்பில் படத்தின் முன்பாதி முழுக்க சுற்றிச் சுழன்றிருக்கிறார்!

பிரியா பவானி சங்கருக்கு எளிமையான பாத்திரம். அதற்கு எது தேவையோ அதை செய்திருக்கிறார்!

இயக்குநர் கெளதம் மேனனின் அலட்டலற்ற வில்லத்தனம் நேர்த்தி!

கவனிக்க வைக்கும் பாத்திரத்தில் வந்து போகிறார் கவிஞர் மனுஷ்யபுத்திரன்!

சிம்புவின் சகோதரியாக அனு சித்தாரா, சிம்புவின் தளபதியாக மதுகுருசாமி, ஜோ மல்லூரி, செளந்தர்ராஜா, சந்தோஷ் பிரதாப், ரெடின் கிங்ஸ்லி, கண்ணன் பொன்னையா, காவல்துறை உயரதிகாரியாக தீரஜ் கெர், நமோ நாராயணன், சென்ராயன் என மற்ற பாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பில் அர்ப்பணிப்பு தெரிகிறது. அந்த குட்டிக் குழந்தை ஹர்ஷிதாவின் புன்னகை அழகு!

இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா தனக்கு பொருந்தும்படியான கம்பீரமான பாத்திரத்தில் வருகிறார்; குறிப்பிட்டுச் சொல்லும்படியான நடிப்பைத் தருகிறார்.

சாயிஷாவின் ஒட்டுமொத்த இளமையும் செழுமையும் வளைவு நெளிவுகளும் கூட்டணியமைத்து விருந்து படைக்கிற ‘ராவடி’ பாட்டு அத்தனை ‘ஹாட்’டு; ஹார்மோனுக்குள் கலவரம் தூண்டுகிற வேட்டு!

விவேக்கின் வார்த்தைகளை கடித்து நசுக்கிப் பாடினாலும் அந்த ‘அக்கரயில’ பாடலை ரசிக்க வைத்திருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். பின்னணி இசை காட்சிகளின் வேகத்திற்கு வெறியேற்றிருக்கிறது!

கண்களை அகல விரிக்கச் செய்யும் ஃபரூக் ஜெ பாஷாவின் ஒளிப்பதிவின் பிரமாண்டம் வியப்பு!
காட்சிகள் சீறிப்பாய உதவியிருக்கிறது பிரவீன் கே எல்.லின் எடிட்டிங்!

கிளைமாக்ஸில் கத்தி, ரத்தம், துப்பாக்கி என வன்முறை வெறியாட்டம் மிரள வைக்கிறது!

கொஞ்சம் கொஞ்சமாக பில்ட் அப் ஏற்றிக்கொண்டேபோய் கதாநாயகனை எப்போது காட்டுவார்கள் என எதிர்பார்க்க வைப்பதெல்லாம் சரிதான்… ஆனால், அந்த யுக்தி பொறுமையைச் சோதிப்பதாக இருப்பது , இதெல்லாம் நடக்க சாத்தியமேயில்லை என்கிற காட்சிகளை திணித்திருப்பது அயர்ச்சி.

அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சிம்புவின் ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழாவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, ‘பத்து தல’ – பெரிதாய் குவிக்கும் வெற்றிகள!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here