இலங்கையில் ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தினரால் அனுபவித்த சித்ரவதைகளை, கொத்துக் கொத்தாய் மனித உயிர்கள் பறிக்கப்பட்ட கொடுமைகளை எத்தனையோ ஆவணப் படங்களில், திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம், பதறியிருக்கிறோம். அந்த படங்களில் தரையெங்கும் கண்ணிவெடிகள், விமானங்களிலிருந்து சீறிப் பாயும் வெடிகுண்டுகள், பதுங்கு குழிக்குள் தஞ்சமடையும் மக்கள் என நீளும் காட்சிகளைக் கண்டு அதிர்ந்திருக்கிறோம்.
ஆங்கிலத்தில் உருவாகியிருக்கிற ‘பேர்ல் இன் தி பிளட்’ (PEARL IN THE BLOOD) திரைப்படமும் அதே வகைதான். ஆனாலும், எடுத்துக் காட்டியிருக்கும் சம்பவங்கள் கூடுதலாய் மனதை உலுக்குபவை!
தன்னை அந்த நாட்டு அரசின் சோஷியல் ஒர்க்கர் என சொல்லிக் கொள்ளும் மிடுக்கான நடுத்தர வயது ஆசாமி இரண்டு மூன்று இளைஞர்களை அழைத்துக் கொண்டு ஜீப்பில் அல்லது வெள்ளை நிற வேனில் பயணிக்கிறார். அக்கம் பக்கத்தில் ஜனநடமாட்டமில்லாத பகுதியில் எங்காவது ஒரு இடத்தில் இறங்குகிறார். ஏதாவது ஒரு வீட்டை நோட்டமிட்டு நெருங்குகிறார். அந்த வீட்டிலுள்ள தமிழனை சுட்டுக் கொன்று விட்டு, அங்கிருந்து கிளம்புகிறார். இன்னொரு தமிழனை வேறு விதமாக சடலமாக்குகிறார்.
வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருக்கும் பெண்ணை அங்கேயே பலவந்தப்படுத்துகிறார்; காமப்பசியை தீர்த்துக் கொண்டு கழுத்தை முறுக்கி கொல்கிறார். சில பெண்களை கடத்திச் சென்று ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் பாழடைந்த கட்டடத்தில் அடைத்து வைத்து துன்புறுத்துவதும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதும் தொடர்கிறது.
அவருடன் வருபவர்கள் ஒரு வார்த்தைகூட பேசாமல் அவரது செயல்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களில் ஒருவர் வெகுண்டு எழ துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகிறார்.
படம் நெடுக இப்படியான சம்பவங்கள் மட்டுமே தொடர்ச்சியாக அரங்கேறுகின்றன. அவை, அந்த சிங்களனின் நோக்கம் தினமும் ஒன்றிரண்டு தமிழர்களையாவது கொல்வது, ஒன்றிரண்டு பெண்களிடமாவது பாலியல் வன்முறையில் ஈடுபட்டு அவர்களை சாகடிப்பது என்பது மட்டுமே என நமக்கு புரிய வைப்பதாக இருக்கிறது.
சிங்கள ராணுவ அதிகாரியாக சம்பத்ராம். உடனிருப்பவர்களிடம் கண்களாலேயே உத்தரவுகளைப் பிறப்பிப்பது, மனித உயிர்களை வேட்டையாட பதுங்கிப் பாய்வது, டீ குடிப்பது போல் மிக எளிமையாக கொலை செய்வது, தங்கப் பல் மின்ன குரூரமாகச் சிரிப்பது (சிங்கள ராணுவத்தினருக்கு தங்கப் பல் பொருத்திக் கொள்வதில் ஆர்வமுண்டாம்) என அலட்டலில்லாமல் மிரட்டியிருக்கிறார். பேசுவது குறைவென்றாலும் அவருக்கான வசனங்களில் ஆங்கிலம் தங்கு தடையின்றி சரளமாக வந்து விழுகிறது.
கல்பனா ஸ்ரீ, காட்வின், ஷாலினி மலர், ஜெயசூர்யா என படத்தில் மிகச்சில கதாபாத்திரங்கள் மட்டுமே. அவர்களின் நடிப்புப் பங்களிப்பு கதையோட்டத்திற்கு போதுமானதாக இருக்கிறது.
காட்சிகள் படமாக்கப்பட்ட இடங்கள் கதைக்களத்திற்கு பொருத்தமான தேர்வு. அந்த இடங்கள் தமிழகத்தில்தான் இருக்கின்றன என்பது ஆச்சரியம்.
ஈழத் தமிழர்கள் பற்றிய படங்களில் காட்டப்படுகிற போர் விமானங்களின் இரைச்சல், வெடி குண்டுகளின் பாய்ச்சல், கண்ணி வெடிகளில் சிக்கிச் சிதறும் மனித உடல்கள் என வழக்கமான காட்சிகளை முற்றிலுமாக தவிர்த்து, ‘ஒயிட் வேன் ஸ்டோரி’ என்கிற ஈழத்தில் அமைதியாக நடந்தேறிய கொடூர நிகழ்வுகளை ஆழமாக ஆவணப் படுத்தியிருக்கும் இந்த படம், வரும் ஆகஸ்ட் மாதம் முன்னணி ஓடிடி தளமொன்றில் வெளியாகவிருக்கிறது.
‘படத்தில் காட்டப்படுபவை இலங்கையில் 2008-ம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவங்களின் பதிவு. இதை இதுவரை யாரும் எந்த படத்திலும் காட்சிப்படுத்தியதில்லை. ஈழ மண்ணில் மட்டுமல்ல வேறு சில நாடுகளிலும் இதுபோன்ற இன அழிப்பு கொடுமைகள் நடந்தன, இப்போதும் நடக்கின்றன.’ கனடா வாழ் ஈழத் தமிழரும் படத்தின் இயக்குநருமான கென் கந்தையா பேட்டியொன்றில் தெரிவித்த தகவல் இது.
உருவாக்கத்தில் உறுதுணை:-
தயாரிப்பு: இயக்குநர் கென் கந்தையாவின் ‘செவன்ஹில் பிக்சர்ஸ் யுனிவர்சல் மூவிடோன்’ நிறுவனம்
ஒளிப்பதிவு – சதிஷ் எம்.எஸ்
இசை – செஞ்சு லக்ஷ்மி
படத்தொகுப்பு – கணேஷ்
கலை இயக்கம் – ராஜ்குமார்
ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் – ராண்டிராஜ்
5.1 மிக்ஸிங் – சுரேஷ்
லைன் புரொடியூசர் – ஜெயசூர்யா
மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ்