இருபது தமிழர்களை சுட்டுக் கொன்ற ஆந்திர வனத்துறை… உயிரை உலுக்கும் உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்ட ‘ரெட் சாண்டல்வுட்’ செப்டம்பர் 8 தியேட்டர்களில்…

நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் வெற்றி தற்போது நடித்திருக்கும் படம் ‘ரெட் சாண்டல்வுட்.’கடந்த 2015-ம் ஆண்டு செம்மரம் வெட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட தமிழர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் குரு ராமானுஜம்.கதாநாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். மற்றும் கேஜிஎப் ராம், எம் எஸ் பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத், வினோத் சாகர், பாய்ஸ் ராஜன், லட்சுமி நாராயணன், சைதன்யா, விஜி, அபி, கர்ணன் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் ஜெ.பார்த்தசாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.படம் பற்றி இயக்குநர் குரு ராமானுஜம் பேசியபோது, ‘‘இந்த கதை 2015-ல் தமிழகத்தின் ஜவ்வாது மலை , படவேடு மலைப்பிரதேசங்களில் இருந்து ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டப் போனதாக சொல்லி திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர வனத்துறையினரால் 20 தமிழர்களை சுட்டு கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.படத்தில் நாயகன் வெற்றி கதாநாயகியின் அண்ணனான கருணாகரன் என்னும் நபரை தேடி ரேணிகுண்டாவிற்கு செல்கிறார். அங்கு வெற்றி செம்மரம் கடத்த வந்திருப்பதாக சொல்லி வனத்துறையினரால் கைது செய்யப்படுகிறார். அவருடன் இணைந்து இன்னும் சில தமிழர்களை கைது செய்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறான் வெற்றி. அவர்களுக்குப் பின்னால் இருக்கும் கடத்தல்காரர்கள் யார் என்பதை விசாரிக்கிறார்கள். கடத்தல்காரர்கள் யார் என்பது விசாரணையில் தெரிய வராதபோது அவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.கடத்தல்காரனை ஏன் பிடிக்க நினைத்தார்கள்? என்கவுண்டர் செய்ய சொன்னது யார்? சாதாரண சிறை தண்டனை கொடுக்கக்கூடிய செம்மரம் வெட்டுக்கு மனித உரிமை மீறலை செய்து எல்லோரையும் என்கவுண்டர் செய்தது எப்படி? இதில் பிரபாவிற்கும் கர்ணாவிற்கும் என்ன நடந்தது என்பது உண்மைக்கும் மனதிற்கும் நெருக்கமான காட்சிகளுடன் விவரிக்கிறது திரைக்கதை.படப்பிடிப்பு ரேணிகுண்டா, தலக்கோணம், தேன்கனிகோட்டை உள்ளிட்ட ஊர்களின் காட்டுப் பகுதிகளில் நடைபெற்றது” என்றார்.

‘ஜெ என் சினிமாஸ்’ படநிறுவனம் சார்பில் ஜெ.பார்த்தசாரதி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 8-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகம், கேரளா, கர்நாடகாவில் ‘ஸ்ரீ சுப்புலக்ஷ்மி மூவீஸ்’ கே. ரவி வெளியிடுகிறார்.

உருவாக்கத்தில் உறுதுணை:-
ஒளிப்பதிவு – சுரேஷ் பாலா
இசை – சாம் சி எஸ்
பாடல்கள் – யுகபாரதி
சவுண்ட் டிசைன் – ஆஸ்கர் நாயகன் ரெசுல் பூக்குட்டி
எடிட்டிங் – ரிச்சர்ட் கெவின்
சண்டைப் பயிற்சி – மிராக்கில் மைக்கேல் .
தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன்
மக்கள் தொடர்பு – மணவை புவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here