அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்க, சாந்தகுமார் இயக்கியுள்ள படம் ‘ரசவாதி.’ இந்த படம் வரும் மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் ப்ரீ- ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் சாந்தகுமார், “என்னுடைய படம் சிறப்பாக உள்ளது என்று நீங்கள் சொன்னால் அதற்கு முக்கிய காரணம் என்னுடைய குழு தான். நடிகர்கள், தொழில்நுட்ப குழுவை சேர்ந்தவர்கள், பப்ளிசிட்டி என எல்லாருமே தங்கள் சிறந்த உழைப்பை கொடுத்துள்ளனர். ‘ரசவாதி’ சிறப்பாக வந்துள்ளது. ‘மகாமுனி’, ‘மெளனகுரு’ படத்திற்கு அடுத்தபடியாக இந்தப் படம் வேறொரு அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும். படம் மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
நடிகர் அர்ஜூன் தாஸ், “எனக்கு இந்த படத்தில் சூப்பரான கதாபாத்திரம். கோவாவில் படப்பிடிப்பில் இருந்தபோது என்னை சாந்தகுமார் சார் அழைத்தார். அவர் என்னை தாஸ் என்றுதான் கூப்பிடுவார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெளியாக இருக்கிறது. சாந்தகுமார் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியது மகிழ்ச்சி. மே 10 அன்று படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்” என்றார்.
நடிகர் ஜி.எம்.சுந்தர், “‘ரசவாதி’ என்ற டைட்டிலே பிரமாதமான விஷயம். தனக்குள் ஏற்படும் விஷயத்தால் ஆளே மாறிப்போகும் ஒருவனின் கதைதான் இது. ‘மகாமுனி’ படத்தில் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்தார். அதேபோலதான், இந்தப் படத்திலும். அர்ஜூன் தாஸ், தான்யா என உடன் நடித்தவர்கள் எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர்” என்றார்.
நடிகைகள் தான்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா, தீபா, நடிகர்கள் சுஜித், அருள்ஜோதி, ரிஷிகாந்த், எடிட்டர் சாபு ஜோசப், ஒளிப்பதிவாளர் சரவணன் இளவரசு, இணைத் தயாரிப்பாளர் கோவர்தன் உள்ளிட்டோரும் நிகழ்வில் படம் பற்றி பேசினார்கள்.