ஓவியப் போட்டி நடத்தி குழந்தைகள் தின கொண்டாட்டம்! ‘ரவுண்ட் டேபிள் இந்தியா’ அமைப்பு அசத்தல்!

குழந்தைகள் தினத்தையொட்டி ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பினர் தாரே ஜமீன் பர் எனும் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தினர். சென்னை தி.நகரிலுள்ள குருத்வாராவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 3000 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆற்காடு இளவரசரின் திவான் நவாப்சாதா முகமது ஆசிப் அலி சான்றிதழ், பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் (சென்னை பகுதி 2) தலைவர் விஜயராகவேந்திரா, ஆண்டு தோறும் இந்த போட்டிகள் நடத்தப்படுவதாக தெரிவித்தார். இந்தாண்டு குருத்வாராவில் நடைபெற அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்த அவர், இப்போட்டிகள் மூலம் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்துவதோடு, சகோதரத்துவதையும் ஊக்குவிப்பதாக கூறினார்.
ரவுண்ட் டேபிள் இந்தியாவின் திவ்யா சேத்தன் கூறும்போது, இந்நிகழ்வின் முக்கிய குறிக்கோள் கல்வியை ஊக்குவிப்பது என்றார். ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் மூலம் பராமரிக்கப்படும் பள்ளிகளில் இருந்து 3000 மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
பின்னர் பேட்டியளித்த ஆற்காடு இளவரசரின் திவான் நவாப்சாதா முகமது ஆசிப் அலி, இந்நிகழ்ச்சி மூலம் குழந்தைகளின் கற்பனைத்திறன் வெளிப்படுத்தப்பட்டதாக கூறினார். தற்காலத்தில் குழந்தைகளை பெற்றோர் அளவுக்கு மீறி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிவித்த அவர், இது போன்ற நிகழ்ச்சிகள் அவர்களின் தனித்தன்மையை வெளிக்கொண்டுவரும் என்றார்.
இந்தியா முழுவதும் 2000 பள்ளிகளில் 5736 வகுப்பறைகளை பராமரித்து வரும் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் மூலம் 6.3 மில்லியன் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here