இளைஞன் கதிரும் இளம்பெண் வேணியும் காதலிக்கிறார்கள். அதை பார்க்கும்போது அந்த காதலுக்கு எதிர்ப்பு வரும்; காதலர்களின் சந்தோஷம், நிம்மதியெல்லாம் பறிபோகப் போகும்; உயிரிழப்புகூட நேரலாம் என எதிர்பார்க்கிறோம். ஆனால், அப்படி எதுவுமில்லாமல் அவர்கள் ஹேப்பியாக கோவிலில் வைத்து கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.
கதிர் வேலை செய்யும் நிறுவனத்தில் வேலைக்கு சேரும் வேணியை முதலாளி காமப் பார்வை பார்க்கிறார். அவர் எப்படியும் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்வார்; பாலியல் வன்முறையில் ஈடுபடவும் வாய்ப்பிருக்கிறது என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது. ஆனால், அப்படியெல்லாம் நடக்காமல் அவர் வேணியிடம் நாம் கல்யாணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்கிறார். வேணி ஏற்கனவே கதிரை காதலிப்பதால் அவரது விருப்பத்தை மறுக்கிறாள். அவர் அமைதியாக ஒதுங்கிக் கொள்கிறார்.
கதிரின் தோற்றத்தைப் பார்த்தால் பொறுப்பற்றவராக, வேலை வெட்டிக்குப் போகாதவராக தெரிகிறது. ஆனால், அப்படியில்லாமல் அவர் விசைத்தறி இயக்கும் வேலைக்குப் போகிறார்; வேலையில் கில்லாடியாக இருக்கிறார். குடி, கூத்தடிப்பு என எதிலும் ஈடுபடுவதில்லை. யாரையும் இழுத்துப் போட்டு அடிப்பதில்லை; வெட்டுக்குத்து ரத்தச்சகதி என எந்த வில்லங்க விவகாரத்திலும் சிக்குவதில்லை.
பூமியில்தான் இருக்கிறோமா? வேற்றுக்கிரகத்துக்கு தாவி விட்டோமா? நம்மூரில் இப்படியான படங்களையெல்லாம் யாரும் எடுக்க மாட்டார்களே? எடுத்தாலும் ஓடாதே? இது முழுக்க முழுக்க வித்தியாசமாக இருக்கிறதே; பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கை, பிரச்சனை செய்யாத மனிதர்கள் என்பதெல்லாம் சாத்தியமே இல்லையே; அப்படி இருந்தாலும் அதில் எந்த சுவாரஸ்யமும் இருக்காதே என்றெல்லாம் தோன்றுகிறது.
அப்படியொரு வித்தியாசமான படைப்பாக ‘ராட்ட’யைச் சுழற்றியிருக்கிறார் கதைநாயகனான நடித்து படத்தை தயாரித்து இயக்கியுள்ள சக்திவேல் நாகப்பன்.
காதல் நிறைவேறுகிறது; வேலை தந்திருக்கும் முதலாளி நல்லவர். அப்புறமென்ன காதலர்களாக இருந்து கணவன் மனைவியாகிவிட்ட கதிர் _ வேணி ஜோடி ஜாலியாக பொழுதைக் கழிக்கலாம்; குழந்தை குட்டி பெற்றுக் கொண்டு உற்சாகமாக வாழலாம். ஆனால், விதி யாரை விட்டது?
வேணி கர்ப்பம் தரித்தபின், மருத்துவப் பரிசோதனை அதுஇதுவென செலவு அதிகரிக்கிறது. அதை சமாளிக்க முடியாமல் கடன் வாங்கி, அதை திருப்பிச் செலுத்த முடியாமல் செத்துப் போய்விடலாமா என்று யோசிக்கிற அளவுக்கு கதிரின் நிலைமை மோசமாகிறது. அதிலிருந்து கதிரால் மீண்டு வர முடிந்ததா இல்லையா என்பது மீதிக் கதை…
ராட்ட என்ற தலைப்பைப் பார்த்து, நெசவுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளிகள் எதிர்கொள்கிற கஷ்ட நஷ்டங்களை எடுத்துக் காட்டும் படமோ என்ற நினைப்பு வேண்டாம். இந்த படத்தின் நோக்கம் வேறு.
வேலையில் திறமை, முதலாளியிடம் விசுவாசம், காதலில் பரவசம், காதலி மனைவியானபின் பாச நேசம் என உணர்வுகளை சினிமா ஹீரோவாக இல்லாமல் சாமானிய மனிதனாக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் கதிராக வருகிற சக்திவேல்.
சக்திவேலின் மனதுக்கு சக்தி தருபவராக ஹெலன். எளிமையான பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் இருக்கும் அவர், அழகாக சிரிக்கிறார்; அளவாக நடிக்கிறார். மனமுடைந்த கணவனிடம் ‘எது நடந்தாலும் பார்த்துக்கலாம்’ என்று சொல்லி ஊக்கப்படுத்தி தன் கேரக்டரின் மதிப்பை உயர்த்துகிறார். கோயில் தேரை வைத்து அவர் சொல்லும் கருத்து சிறப்பு.
விசைத்தறி நிறுவன முதலாளியாக சித்தா தர்சன், ஆரம்பக் காட்சிகளில் வில்லன் போல் முகபாவம் காட்டி போகப்போக ‘அநியாயத்துக்கு நல்லவம்பா அவன்’ என்கிற ரேஞ்சுக்கு மாறி நிற்கிறார்.
சாப்ளின் பாலு, சந்திரன், கிருஷ்ணன், முத்துராஜா, பம்பாய் சுப்ரமணி, கல்பனா, வசந்தி, ஜெயஸ்ரீ, ரத்னா, செல்லம்மா என இன்னபிற கேரக்டர்களில் வருகிறவர்களின் நடிப்பில் குறையுமில்லை; குறிப்பிட்டுச் சொல்கிற அளவில் விசேசமாக ஏதுமில்லை.
மணி கிருஷ்ணன் இசையில் ‘ஏ வான்முகிலே’ டுயட் பாடல், ‘வாடாமல்லி வாடாம வாசம் வீசுதடி’ என்ற முதலிரவு பாடல், ‘கண்மணி நீதாண்டி என் காதலும் நீதாண்டி’ என்ற கிளைமாக்ஸ் பாடல் அத்தனையும் இதம். பின்னணி இசை ஓகே ரகம். படத்தின் துவக்கத்தை நெசவுக் கருவியான ‘ராட்ட’ இயங்கும்போது உருவாகிற ஓசையின் பிரதிபலிப்பாக வழங்கியிருப்பது தனித்துவம்.
நெசவுத் தொழில் அதிகம் நடக்கிற குமாரபாளையமும் அதன் சுற்று வட்டாரமும், கிராமத்து பம்ப் செட்டும், மண் வீடுகளும் கதைக்களமாக அமைந்திருக்க, நிஜமான விசைத்தறிக் கூடத்திலேயே பெரும்பாலான சம்பவங்கள் நடக்க அதனதன் இயல்புத் தன்மை கெடாமல் சுற்றிச் சுழன்று பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி.
கதை இந்த காலத்தில்தான் நடக்கிறது. ஆனால், ஒருவரிடம்கூட செல்போன் இல்லை. ‘திட்டமிட்டே தவிர்த்துள்ளோம்’ என படம் முடியும்போது சொல்கிறார் இயக்குநர் சக்தவேல். அப்படியான தவிர்ப்புகளால் படத்துக்கு எந்த பயனும் இருப்பதாக தோன்றவில்லை.
‘சுவாரஸ்யமான படமா?’ என்றால் ‘ஆம்’ என்று சொல்ல முடியாது. ‘வித்தியாசமான படமா?’ என்றால் உம்ஹூம், இல்லை. ‘பரிச்சயமான நடிகர் நடிகைகள் இருக்கிறார்களா?’ என்றால் அதுவுமில்லை. இயக்குநர் தன் மனதுக்கு தோன்றுவதையெல்லாம் எடுத்து வைத்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதிலிருந்து நல்லவர்கள் மட்டுமே வாழ்கிற உலகை பார்க்க முடிகிறது; ‘நல்லவனுக்கு நல்லது நடந்தே தீரும்’ என்ற முடிவுக்கு வர முடிகிறது. அந்த விதத்தில் இது பாஸிடிவ் வைபரேசன் தருகிற படைப்பு. அதில் மாற்றுக் கருத்தில்லை.
ராட்ட _ எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான ராஜபாட்டை!
-சு.கணேஷ்குமார்


