ராஜா வீட்டு கன்னு குட்டி சினிமா விமர்சனம்

காதலும் காதல் சார்ந்தும் சுற்றிவருகிற கதை.

தமிழ்நாட்டுக்காரர் (ஆதித் சிலம்பரசன்) முரளி சிங்கப்பூரில் வசதியாக வாழ்ந்து வருகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் சொந்த ஊருக்கு திரும்பும் அவர், தனது காதலிக்கு திருமணம் நடந்து முடிந்த விவரம் தெரிந்து மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அந்த நிலைமையிலிருந்து அவரை மீட்க அவரது நண்பர், தன் தங்கையை அவருக்கு கல்யாணம் செய்து வைக்கிறார்.

மண வாழ்க்கை நல்லபடியாக போய்க் கொண்டிருக்கும்போது, முரளிக்கு தனது காதலியைப் பற்றிய ஒரு அதிர்ச்சியான தகவல் தெரியவருகிறது. அந்த தகவல் முரளியின் மனைவிக்கும் தெரிய கணவன் மனைவிக்குள் பிரச்சனை உருவாகிறது. இது ஒருபக்கமிருக்க, மீண்டும் தனது காதலியை முரளி சந்திக்கிறார். அந்த சந்திப்பு என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்குகிறது என்பது இயக்குநர் ஏ.பி. ராஜீவ் இயக்கியிருக்கும் ராஜா வீட்டு ‘கன்னுக்குட்டி’யின் மீதிக் கதை. கிளைமாக்ஸ் கலங்கடிக்கிறது.

கதைநாயகன் ஆதித் சிலம்பரசனுக்கு காதலின் பரவசத்தை, காதலிக்கு கல்யாணமாகிவிட்டதை அறிந்தபிறகான வருத்தத்தை, காதலியுடன் நெருக்கமாக உறவாடிவிட்டு தவிக்கவிட்டு சென்றதை நினைத்து தன் மீது தனக்கு ஏற்படும் கோபத்தை என பலவித உணர்வுகளைப் பிரதிபலிக்கும்படியான கதாபாத்திரம். அதை புதுமுக நடிகரான அவர் பாஸ்மார்க் போடும் விதத்தில் செய்திருக்கிறார்.

மாடு மேய்க்கும் பெண் என்பதால் தன்னை கேவலமாக பார்க்கும் இளைஞர்களின் நண்பரான முரளி, தன்னிடம் பேசிப் பழகும்போது காட்டும் வியப்பும் உற்சாகமும், காதலித்தவரை பிரிந்து வாழ்க்கையில் சிலபல நிகழ்வுகள் நடந்து முடிந்தபின் பரிதாபமான சூழ்நிலையில் காதலரை சந்திக்கும்போது வெளிப்படுத்தும் உணர்வும் காயத்ரி ரெமாவை கவனிக்க வைக்கிறது.

ஆதித்தின் உயிர் நண்பனாக வருகிற தம்பி சிவன் நண்பனுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிற கேரக்டருக்கு பொருத்தமான செயல்பாடுகளால் உயிரூட்டியிருக்கிறார். அவரது பளீர் தோற்றமும் மலர்ந்த சிரிப்பும் தனி அடையாளத்தைக் கொடுக்கிறது. அவருக்கு மனைவியாக வருகிற, பல படங்களில் நாம் பார்த்துள்ள அனுகிருஷ்ணாவின் புன்னகையும் கதைக்கேற்ற துடிப்பான நடிப்பும் கவர்கிறது.

ஆதித்தின் மனைவியாக வருகிற வர்ஷிதா அழகாக, செழுமையான இளமை நிரம்பியவராக இருக்கிறார்; கணவனுக்கும் அவரது காதலிக்கும் இருந்த நெருக்கம் பற்றி தெரிந்து உணர்ச்சிவசப்படுகிறபோது அவருக்கு நன்றாக நடிக்கவும் வரும் எனபது தெரிகிறது.

கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்றிருப்பவர்களைப் போலவே இன்னபிற வேடங்களை ஏற்றிருப்பவர்களும் புதுமுகங்கள்தான். அவர்களின் நடிப்பில் குறையாக ஏதுமில்லை.

இசையமைப்பாளர் டைசன் ராஜின் பெயருக்கு முன் ‘இசை தளபதி’ என்ற பட்டத்தை சேர்த்திருக்கிறார்கள். அதை வைத்து பெரிதாக எதிர்பார்த்தால் பின்னணி இசையாலும் பாடல்களுக்கான இசையாலும் ஓரளவு திருப்தியையே அவரால் தர முடிகிறது.

கதைநாயகன் தன் காதலியை தவிக்கவிட்டு வெளிநாட்டுக்கு போய் அங்கேயே வாழ்வதற்கான சூழலை உருவாக்கிக் கொள்கிறார். அதற்கான காரணத்தை விளக்கியிருக்கலாம். அதேபோல் இன்னும் சிலவற்றிலும் விளக்கங்கள் தேவைப்படுகிற அளவுக்கு தெளிவில்லாத திரைக்கதை படத்தின் பலவீனம்.

பெரிய பெரிய இயக்குநர்களின் படங்களே குறைகளின் குடோன்களாக இருக்க, புதியவர்களின் முயற்சியில் இருக்கும் குறைகளைப் பொருட்படுத்தாமல் கதையிலிருக்கும் கருத்தை பாராட்டி வரவேற்கலாம்.

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here