வேடுவன் வெப் சீரிஸ் விமர்சனம்

தனித்துவமான கதைகளை வெப் சீரிஸாக்கி வழங்குகிற Zee 5 அதே தனித்துவத்துடன் வெளியிடுகிற ‘வேடுவன்.’

சூரஜ் பிரபலமான நடிகர்; அவர், காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக இருந்து இறந்துபோன அருண் என்ற அதிகாரியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் (பயோபிக்) கதைநாயகனாக நடிக்கிறார். அருண் மரணமடைகிற கிளைமாக்ஸ் காட்சி எடுக்கும்போது, கதையில் சொல்லியிருக்கும்படி அருண் இறந்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லி அதில் நடிக்க மறுக்கிறார். அருணுக்கு உண்மையில் என்ன நடந்திருக்கும் என்பதை தெரிந்துகொள்ள களமிறங்குகிறார். அவர் என்னென்ன தெரிந்துகொள்கிறார் என்பது கதையின் மீதி.

ஒரு கேரக்டருக்கு ஸ்டைலிஷ் லுக், இன்னொரு கேரக்டருக்கு கம்பீரம் என வகை பிரித்து கொண்டு சூரஜாகவும் அருணாகவும் கண்ணா ரவி. ஒரு ரவுடியை என்கவுண்டரில் போட்டுத்தள்ளுவதற்காக ஆளே அடையாளம் தெரியாதபடி பிச்சைக்காரனாக மாறியிருப்பது, இன்னொரு அடாவடிப் பேர்வழியை சுட்டுத்தள்ள அவரது மனைவியின் நண்பனாக உறவாடி பதுங்கிப் பாய்வது, செய்த என்கவுண்டர் நியாயமற்றது என்பதறிந்து குற்றவுணர்ச்சியில் தவிப்பது, முன்னாள் காதலியின் பிள்ளைகளோடு தானும் ஒரு பிள்ளையாக மாறி விளையாடி மகிழ்வது, என்கவுண்டருக்கு முன்னும் பின்னுமான மனநிலை குழப்பங்களை வெளிப்படுத்துவது என தனது கனமான கேரக்டருக்கு பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார்.

கணவனின் கஷ்ட நஷ்ட தருணங்களில் ஆறுதல் தருகிற பங்களிப்பை பக்குவமாக செய்திருக்கிறார் கண்ணா ரவிக்கு மனைவியாக வருகிற ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த்.

போலீஸ் பார்வைக்கு ரவுடி, கொலைக் குற்றவாளி; தன்னைச் சுற்றியிருக்கிற மக்களுக்கு சாமி. அப்படியொரு கதாபாத்திரத்தில் சஞ்சீவ் வெங்கட். தன் மனைவியிடம் நட்பு காட்டி, தன் பிள்ளைகளிடம் பாசம் காட்டிப் பழகுகிறவன் தன் உயிரைப் பறிக்க வந்த போலீஸ் அதிகாரி என்பதை தெரிந்து மனதுக்குள் லேசாக அதிர்கிற, அதிர்ந்தாலும் பதறாமல் கத்தி, ரத்தம், வன்முறையின்றி சூழ்நிலையை சமாளிக்கிற, தன் முன் துப்பாக்கியோடு நிற்கிற அதிகாரியை மிதமான உடல்மொழியில் மிரட்டுகிற அனைத்தும் கவனம் ஈர்க்கிறது.

அவருக்கு மனைவியாக சில நிமிடங்களே வந்தாலும் நடை, உடை, பார்வை, உட்காரும் விதம் என ஒவ்வொன்றிலும் ஐஸ்வர்யா ரகுபதி பதித்திருப்பது அழுத்தமான முத்திரை.

கதையில் எடுக்கப்படும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ரகுபதியின் கதாபாத்திரத்தை ஏற்கிற வினுஷா கணவன் மீதான பிரியத்தால், நட்புக்கு தருகிற மரியாதையால் மனதில் பதிகிறார்.

தன் ரவுடி கணவனை என்கவுண்டர் செய்த போலீஸை பழி வாங்காமல் ஒய மாட்டேன் என சபதம் ஏற்று ஆத்திர ஆவேசம் காட்டும் கதாபாத்திரத்தில் ரேகா நாயரின் தோற்றம் அட்டகாசம் என்றால் நடிப்பு அதிரடி.

காவல்துறை உயரதிகாரியாக வருகிற ஜீவா ரவியிலிருந்து இன்னபிறரின் நடிப்பு நேர்த்தி.

விபின் பாஸ்கர் இசையில் கருப்புசாமி திருவிழா பாடல் சிலிர்ப்பூட்டுகிறது; பின்னணி இசை கதையோட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்திருக்கிறது.

ஒரு நடிகர் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்திற்கான நபரைப் பற்றிய வரலாற்றை தோண்டித் துருவதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராதது என்றாலும், அப்படி அலசி ஆராய்ந்தால் எப்படியிருக்கும் என சிந்தித்து உருவாக்கியிருக்கும் திரைக்கதையில் சுவாரஸ்யங்களுக்கும் தாறுமாறான சம்பவங்களுக்கும் பஞ்சமில்லை.

என்கவுண்டர் என்ற பெயரில் நடக்கும் படுபாதகச் செயல்களை வெளிச்சம்போட்டுக் காட்டுவதுதான் தொடரின் நோக்கம் என்றாலும் ஆவணப்படம் போல் காட்சிகளைக் குவித்து சலிப்பூட்டாமல் துப்பாக்கியிலிருந்து சீறும் தோட்டாக்களாய் சீன்களை சித்தரித்து வேடுவனை தேடிப் பார்க்கும்படி இயக்கியிருக்கிற பவனை பாரபட்சமின்றிப் பாராட்டலாம்!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here