ஒரு விவசாயி, அவன் பிழைப்பில் மண்ணள்ளிப் போடும் படுபாவி. இந்த ஒன்லைனில் கருவாகி உருவான ‘மருதம்.’
எளிய மனிதன் கன்னியப்பன் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வாழ்நாளை மகிழ்ச்சியாக நகர்த்திக் கொண்டிருக்கிறார். திடீரென ஒருவர், அவரது விளைநிலத்தில் நுழைந்து, அதை தான் வாங்கிவிட்டதாக சொல்லி வேலி போட்டு ஆக்கிரமிக்கிறார். அப்படி வாங்கியதற்கான சரியான ஆவணம் அவரிடம் இருக்கிறது.
அதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியடையும் கன்னியப்பன், ‘தான் விற்காத தனது நிலத்தை எப்படி ஒருவர் வாங்க முடியும்?’ என்பதை அலசி ஆராய்வதும், நடந்திருக்கும் மோசடியைக் கண்டுபிடிப்பதும், பறிபோன தனது நிலத்தை மீட்கப் போராடுவதுமாய் கடந்தோடுகின்றன அடுத்தடுத்த காட்சிகள்… போராட்டத்தின் பலன் என்ன என்பது கிளைமாக்ஸ். இயக்கம் வி கஜேந்திரன்
தனது நிலத்திற்கு திடீரென வந்து உரிமை கொண்டாடுபவர் மீது ஆத்திரமாய்ப் பாய்வது, மோசடி செய்த வங்கி அதிகாரிகளைப் பார்த்து ஆவேசமாய் சீறுவது, சூழ்ச்சியால் நிலம் பறிபோயிருப்பதை அறிந்து மனம் நொறுங்குவது, மோசடி செய்தவர்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் புத்திசாலித்தனத்தையும் சுறுசுறுப்பையும் வெளிப்படுத்துவது, நீதிமன்றத்தில் தனக்கான வழக்கறிஞராக தானே ஆஜராகி துணிச்சலாய் வாதாடுவது, மனைவி மீது பாசம், மகன் மீது நேசம் என காட்சிகள் அத்தனையிலும் கன்னியப்பனாக வரும் விதார்த்தின் நடிப்பில் ததும்புகிறது யதார்த்தம்.
விதார்த்தின் மனைவியாக ரக்சனா. விவசாயப் பணியில் ஈடுபடுகிற கிராமத்துப் பெண் கேரக்டருக்கு அவரது பளீர் நிறம் சற்றே பொருத்தமாக இல்லாதது போல் தோன்றினாலும் நடை உடையில், பாசம், பதட்டம், பரிதவிப்பு என வெளிப்படுத்தும் நடிப்பில் தேறி விடுகிறார்.
அப்பாவி விவசாயிகளின் நிலத்தின் மீது அவர்களுக்கே தெரியாமல் லோன் பெற்று, பெற்ற லோனை அடைக்காததை காரணம் காட்டி, அந்த நிலத்தை ஏலம் மூலம் விற்கிற நூதன மோசடியை அரங்கேற்றும் நபராக சரவண சுப்பையா, மிடுக்கான தோற்றத்தில் மெல்லிய வில்லத்தனம் காட்டி கடந்துபோகிறார்.
ஆளைப் பார்த்தால் கோக்குமாக்காக தெரிவது, நிலத்தை மீட்கும் வழி தெரியாமல் திணறும் கதாநாயகனுக்கு வழிகாட்டியாக இருந்து அவரையே கோர்ட்டில் வாதாட தயார்படுத்துவது என கெஸ்ட் ரோலாக இருந்தாலும் பெஸ்ட் ரோல் ‘தினந்தோறும்’ நாகராஜுக்கு.
வழக்கமான லொள்ளுக்கு அவ்வளவாக வாய்ப்பில்லை என்றாலும் கிடைக்கிற கேப்பில் டைமிங் காமெடியால் சிரிப்பூட்டுகிற மாறன், ‘கடன் தருகிற ருசிக்குப் பழகினால் கடைசியில் இதுதான் கதி’ என பாடமும் நடத்தியிருக்கிறார்.
விதார்த் _ ரக்ஷனா தம்பதியின் மகனாக வருகிற சிறுவனின் கள்ளமில்லா சிரிப்பு மனதில் நிரம்பும்.
அருள்தாஸ், மேத்யூ வர்கீஸ் உள்ளிட்ட மற்றவர்களின் நடிப்பு நேர்த்தி.
என் ஆர் ரகுநந்தன் இசையில் உருவாகிற பாடல்கள் என்றாலே ரம்மியம்தான்; தென்றலின் குளிர்ச்சிதான். அந்த நற்பெயரை இந்த படத்தின் ‘நெல்லு விளையிற பூமி’, ‘உன்னால தானே உன்னால தானே’ பாடல்கள் மூலமாகவும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். பின்னணி இசையில் காட்சிகளுக்குத் தேவையான உயிரோட்டமிருக்கிறது.
அருள் கே சோமசுந்தரத்தின் ஒளிப்பதிவில் கதைக்கேற்ற கச்சிதமான பங்களிப்பு தெரிகிறது.
மனதை ரணப்படுத்தும் காட்சிகள் அதிகமாகவும் உற்சாக தருணங்கள் குறைவாகவும் இருப்பதை மனதில் வைத்து படத்தின் நீளத்தை 102 நிமிடங்களில் அடக்கியிருக்கிறார் எடிட்டர் சந்துரு.
பலமான ஏமாற்றுப் பேர்வழிகளை சாமானியன் ஒருவன் எதிர்க்க நினைத்தால் அவன் எப்படியான கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பான் என்கிற கதைக்களம் பழக்கப்பட்டதுதான் என்றாலும்,
உணர்வுபூர்வமான காட்சிகளாலும் விவசாயக் கடன் என்ற பெயரில் விவசாயிகள் இப்படி கூட ஏமாற்றப்படலாம் என்ற விழிப்புணர்வை தந்த விதத்திலும் படம் தரம் உயர்கிறது.
மருதம் _ மோசடிகள் பலவிதம்; இது புதுவிதம்!
-சு.கணேஷ்குமார்


