‘ஜாலியா வாங்க; சிரிச்சுட்டுப் போங்க’ என்பது மாதிரியான படங்கள் வருவது அரிதாகிப்போன சூழலில் ஆறுதல் வரவாக ‘ராயர் பரம்பரை.’
மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருப்பதற்குத் தேவையான பணபலம் கொண்டவர் ராயர். அவரோடு சுற்றித்திரிய முரட்டுப் பீசு, முட்டாபீசு என கலந்துகட்டிய அல்லக்கைகளுக்குப் பஞ்சமில்லை.
அந்த ராயர் ஊரிலுள்ள இளைஞர்களின் ஜாதகத்தையெல்லாம் திரட்டி, அதில் யாரெல்லாம் காதலித்து கல்யாணம் செய்து கொள்வார்கள் என ஜோதிடரை வைத்து கணித்து, அவர்களில் யாரும் தன் மகளை காதலித்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களை நாடுகடத்தி நல்லவிதமாக வாழவைக்கிற அளவுக்கு காதலுக்கு எதிரி.
அவருக்கு ஒரு மகள். அவள்தான் ஹீரோயின் என்பதை தனியாக சொல்லத் தேவையில்லை. இது ஒரு பக்கம் இருக்கட்டும்…
ஹீரோ மியூசிக் டீச்சர். காதலுக்கு எதிரி போல் காட்டிக் கொள்பவர். அவரை இரண்டு பெண்கள் போட்டி போட்டு காதலிக்கிறார்கள். இப்படியான கதையில் அந்த இருவரில் ஒருவர் ராயரின் மகளாகத்தானே இருக்க முடியும்? அதுதான் இல்லை…
கதைக்களம் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கிறதுதானே? உண்மையிலேயே சுவாரஸ்யம்தான். அதை இன்னும் கொஞ்சம் அதிகமாக்க மொட்டை ராஜேந்திரன். நான்கைந்து எடுபிடிகளை வைத்துக் கொண்டு, காதல் ஜோடிகள் கண்ணில் பட்டால் பிரித்துவிடுவது, இல்லாவிட்டால் உடனடியாக கல்யாணம் செய்து வைப்பது அவரது முழுநேரப் பணி…
சரி ஹீரோயினுக்கு என்னதான் வேலை? அப்பா சாதாரண ஆசாமியாக இருந்தாலே ஹீரோயின் எனப்படுபவள் யாரையாவது காதலிப்பதை கடமையாக கொண்டிருப்பாள். இதில் அப்பா காதலுக்கு எதிரி. அப்படியிருக்க அவரது மகள் காதலில் விழாவிட்டால் கதை எப்படி நகரும்? தமிழ் சினிமா வழக்கப்படியே, ஹீரோ அவளுக்கு உள்ளத்தை அள்ளித்தர அந்த காதல் கல்யாணத்தில் முடிகிற வரை நடக்கிற கலவர களேபரங்கள் அத்தனையும் கலகலப்பு. இயக்கம் ராம்நாத் டி
துறுதுறு பார்வை, உற்சாகப் புன்னகை, கலர்ஃபுல்லான காஸ்டியூம் என கெத்தாக வருகிற கிருஷ்ணாவின் துடிப்பாக நடிப்பு அவரது குஷியான கேரக்டருக்கு எனர்ஜி சார்ஜ் ஏற்றியிருக்கிறது!
நாயகி சரண்யா அழகாக இருக்கிறார்; அழகாக சிரிக்கிறார்; நடிப்பையும் அதேபோல் செய்திருக்கிறார்!
காமெடி வில்லன் என்றால் ஆனந்த்ராஜ் எப்படி நடிப்பார் என்பது தெரிந்தகதை. ‘ஐ நோ, ஆல் டோன்ட் நோ; ஆல் டோன்ட் நோ, ஐ நோ’ என பஞ்ச் டயலாக் பேசி ஆங்கிலத்தை பஞ்சராக்குவதிலிருந்து அவர் பண்ணுகிற ரவுசு அத்தனையும் ரசிக்க வைக்கிறது!
இளம்பெண்கள் கிருத்திகாவும், அன்ஷுலா ஜித்தேஷ் தவானுக்கும் கிருஷ்ணாவிடம் வழிந்தும், வலிந்தும் காதலிக்க வேண்டிய வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்!
ஒரு முடிகூட எட்டிப் பார்க்காத வழவழா மண்டைக்கு எட்டுப் பத்து சீப்பு வாங்கி வைத்திருப்பது, அந்த மண்டையை வைத்துக் கொண்டு குலதெய்வத்துக்கு மொட்டைபோட வேண்டிய கட்டாயத்திலிருப்பது, ராயரை டிராயர் என உச்சரிப்பது என நான் கடவுள் ராஜேந்திரனின் அலப்பரை; சிரிப்பலை. அவரோடு கோர்த்துவிட்டிருக்கும் ஷாலு ஷம்முவின் ஊட்டச்சத்து உடல்வாகு கொஞ்சமே கொஞ்சம் சூடேற்றிக் கொள்ள பயன்பட்டிருக்கிறது!
ஜோதிடராக மனோபாலா, அடியாட்களாக பாவா லெஷ்மணன், சேஷு என பலரும் அவரவர் பங்குக்கு கிச்சுக்கிச்சு மூட்ட, ஹீரோவுக்கு நண்பனாக கல்லூரி வினோத், ராயருக்கு தங்கையாக கஸ்தூரி என இன்னபிறரின் பங்களிப்பும் நேர்த்தி. வயதுக்கேற்ற பாத்திரத்தை பக்குவமாக சுமந்திருக்கிறார் ‘புன்னகை அரசி’ கே ஆர் விஜயா!
படத்துக்கு என்ட் கார்டு போடும்போது என்ட்ரி கொடுத்தாலும் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிற வேடம். ‘சீமான் செங்கல்வராயன்’ என்ற அவரது பெயருக்கான வியாக்கியான விளக்கம் லகலக!
‘போட்டுக்க போட்டுக்க நீ மில்லியே’ காலத்துக்கு போய்வர வைத்தாலும் கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் இதம்தந்து கடந்து போகின்றன!
பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தின் பசுமையை வளைத்துச் சுருட்டியிருக்கிறது விக்னேஷ் வாசுவின் கேமரா!
ராயர் பரம்பரை – சுந்தர் சி ஸ்டைலில் ஒரு முயற்சி; பாஸ்மார்க்கில் தேர்ச்சி!
-சு. கணேஷ்குமார் / WhatsApp: 99415 14078 / startcutactionn@gmail.com


