வித்தியாசமான கண்ணோட்டத்தில் விழப்புணர்வுப் பாடம் நடத்தியிருக்கும் படம்.
தொலைக்காட்சி செய்திகளில் அங்குமிங்கும் நடந்த குற்றச் சம்பவங்கள் பற்றி தெரிவிக்கும்போது, அந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதை அல்லது எப்படி நடந்திருக்கும் என்பதை காண்பிப்பதற்காக சிலரை நடித்து வைத்து, அதை காட்சியாகத் தொகுத்து ‘சித்தரிக்கப்பட்டவை’ என்று ஒளிபரப்புவார்கள்.
கதையின் நாயகன் அர்ஜுன், பல்வேறு களங்களில் நடித்துக் கொண்டிருப்பவர். சித்தரிக்கப்படுகிற காட்சித் தொகுப்புகளிலும் நடிப்பவர்.
அவருக்கு சிறுவயதிலிருந்தே ஒரு பெண் மீது பாசம். வயது கூடகூட அந்த பாசம் நேசமாகி இருவரும் உற்சாகமாக பொழுதைக் கழிக்கிறார்கள். ஆடிப் பாடுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் அர்ஜுனிடம் இருக்கும் நடிப்புத் திறமையை சிலர் தங்கள் சுயலாபத்துக்கு பயன்படுத்துகிறார்கள். நடிப்பதாக நினைத்து தன்னை அறியாமலே குற்றங்களைச் செய்கிறார் அர்ஜுன்.
சட்டத்தின் பிடிக்குள் சிக்கும் சூழலில்தான், அவருக்கு தான் சூழ்ச்சிக்கு பலியாகியிருக்கிறோம் என்று தெரிகிறது. அதிலிருந்து மீண்டுவர வழக்கறிஞர் ஒருவரிடம் ஆலோசனை கேட்கிறார். அவர் நடந்த விவரங்களையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டு நீதிமன்றத்தில் வாதாடுகிறார். ஆனாலும், பலனில்லாமல் போகிறது.
அப்படியான சூழலில், அர்ஜுனை குற்றவாளியாக்கியவர்களை பழிவாங்க வழக்கறிஞர் திட்டமிடுகிறார். அந்த திட்டமென்ன? அர்ஜுன் காதலியோடு மணவாழ்க்கையில் இணைந்தாரா? இந்த கேள்விகளுக்கான பதில்களே கதையோட்டம்… இயக்கம் றாம்குமார் (ராம்குமார் அல்ல றாம்குமார்தான்.)
அர்ஜுனாக ராம்குமார். விதவிதமாக நடிக்கிறார். காதலியிடம் செல்லம் கொஞ்சுகிறார். நடிப்புக்காக இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுத்திருந்தால் உணர்வுகளை கடத்த வேண்டிய காட்சிகள் உயிரோட்டமாக இருந்திருக்கும்.
தீக்காயம், ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்களின் தோல்பகுதி எப்படியிருக்குமோ அதேபோல முகத்தில் பாதி சருமம் பாதிக்கப்பட்டவராக பிரீத்தி. முகத்தின் சரிபாதியை துப்பட்டாவால் மறைத்தபடி வந்தாலும் அவரது லட்சணமாக முகவெட்டு ஈர்க்கிறது. தன் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடித்திருக்கிறார். கதையோட்டத்தின் ஒருபக்கம் அவரது சரும சிகிச்சையும் அதன் பலனும் என காட்சிகள் விரிகின்றன.
வழக்கறிஞராக கணேஷ்குமார், வில்லனாக குமரேஷ் பாபு மற்ற கதாபாத்திரங்களில் துர்கா, மணி, மதன், ஜெயஸ்ரீ ‘பரவாயில்லை’ என்று சொல்லும்படியான பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.
குற்றவாளியை தண்டிக்க வழக்கறிஞர் தீட்டும் திட்டமும் அதை செயல்படுத்துவதும் கவனிக்க வைக்கிறது.
தியாகுவின் இசையில் அந்த டூயட் பாடலும் பாடல் படமாக்கப்பட்ட இடத்தின் சூழலும் மனதுக்கு இதம்.
சுதன், குருமூர்த்தி இருவரின் ஒளிப்பதிவு காட்சிகளை வளப்படுத்தியிருக்கிறது.
படத்தில் குறைகள் இருந்தாலும், ‘இது எல்லோரிடமும் மொபைல்போன், எங்கு பார்த்தாலும் சிசிடிவி பரவியிருக்கிற காலம்; அப்படியிருக்கும்போது ஒரு செயலை செய்யும்முன் அக்கம் பக்கம், இடம் வலம், மேலே கீழே என எல்லா விதத்திலும் கவனிக்க வேண்டும்; இல்லாவிட்டால் பிரச்சனையில் சிக்க வாய்ப்புகள் அதிகம்’ என்ற விழிப்புணர்வை விதைத்திருப்பதற்காக படக்குழுவுக்கு பாராட்டுக்கள்.


