ரெட்ரோ சினிமா விமர்சனம்

பிறந்ததிலிருந்து வாலிபப் பருவத்தை எட்டிப் பிடிக்கும்வரை சிரிக்காத ஒருவன், ஒரு கட்டத்தில் சிரிக்கிறான். சிரிப்பதற்கு வாய்ப்பின்றி  அடிமைகளாக வாழ்ந்துவரும் தன் மக்களையும் சிரிக்க வைக்கிறான்.

அவனது பிறப்பு, வளர்ப்பு, தொழில், பகை, காதல் என கலந்துகட்டிய காட்சிகளில் காட்டுத் தீ பரவுவது போன்ற வேகம் தொற்றிக்கொண்டிருக்க,

அடிமைகளை அவன் மீட்கும் விதத்தில் உச்சபட்ச பரபரப்பை கொண்டுவந்திருக்கிறது கார்த்திக் சுப்பராஜின் திரைக்கதை.

காதலியை மனைவியாக்கிக் கொண்டு நல்வாழ்க்கையில் ஈடுபடுவது அவனது நோக்கம். அதற்காக அதுவரை பார்த்துக் கொண்டிருந்த கேங்ஸ்டர் தொழிலை கைவிடுகிறான். சந்தர்ப்ப சூழ்நிலை அவனை பழையபடி அடிதடி வெட்டுக்குத்து சமாச்சாரத்துக்குள் இழுத்து விடுகிறது. முன்னர் செய்த வெட்டுக்குத்து சுயநலத்துக்காக என்றிருக்க, இரண்டாம் இன்னிங்ஸ் பொதுநலத்துக்காக என்றாகிறது.

இப்படியொரு கனமான கதாபாத்திரத்தில்,

வளர்ப்பு அப்பாவின் அடியாளாக எதிராளிகளை சுளுக்கெடுப்பது, ஆவேசம் தாறுமாறாக பொங்க அதே அப்பா மீது அரிவாள் வீசுவது, மக்களை அடிமைகளாக்கி கொடுமைபடுத்துபவர்களை போட்டுப் பொளப்பது, பரலோகத்துக்கு பார்சல் செய்வது என படம் முழுக்க வெறியேறிய சிங்கமாக ஆட்டம் போட்டிருக்கும் சூர்யா, மனதில் காதல் சூழ்ந்திருக்கும் தருணங்களில் இதமான தென்றலாய் வேறொரு பரிமாணத்துக்கு தாவியிருக்கிறார்.

சிரிப்பை முழுமையாகத் தொலைத்து, ரத்தவெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் ஹீரோவை மீட்டெடுத்து சராசரி மனிதனாக்க முயற்சிக்கிற பூஜா ஹெக்டே புன் சிரிப்பாலும் மென் கோபத்தாலும் ஏற்ற கேரக்டருக்கு உயிரூட்டியிருக்கிறார். கனிமா பாட்டுக்கு ஆடும்போது ரசிகர்களை உற்சாக மூடுக்கு டிரான்ஸ்பர் செய்கிறார்.

வளர்ப்பு மகனை விசுவாசமான அடியாளாக்கி கட்டுக்குள் வைத்திருப்பது, அந்த கட்டுப்பாட்டை அவன் மீறும்போது எதிரியாக எகிறியடிப்பது என அதட்டல் உருட்டலாய் வந்துபோகிறார் ஜோஷு ஜார்ஜ்.

மக்களை அடிமைகளாக்கி கொடூரமாக துன்புறுத்துகிற வேலையை அலட்டலாகவும் ஆர்ப்பாட்டமாக செய்திருக்கிறார்கள் விதுவும் அவருக்கு அப்பாவாக வருகிற நாசரும்.

பல படங்களில் காட்டிய தன் கம்பீரமான வில்லத்தனத்தின் சிலதுளிகளை சிந்தியிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

லப்பர் பந்து ஸ்வாசிகா, இயக்குநர் தமிழ், ஜெயராம் என சிலருக்கு குறிப்பிடும்படியான கேரக்டர்கள் தரப்பட்டிருக்க சிங்கம்புலி, கருணாகரன் என சிலர் என்ணிக்கையளவில் திரையில் தோன்றி நகர்கிறார்கள்.

ரகளையான பாடல்கள், வன்முறையால் வட்டம் கட்டப்பட்டிருக்கும் கதைக்களத்துக்கேற்ற மிரட்டலான பின்னணி இசை என தன் பங்களிப்பை பக்காவான செய்திருக்கும் சந்தோஷ் நாராயணன் அசத்தலாக போட்டிருக்கும் ஆட்டத்தையும் ரசிக்க முடிகிறது.

இடம் விட்டு இடம், ஊர் விட்டு ஊர், மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு, கடலுக்குள்ளும் பாய்ச்சல் என கதை நிகழ்விடங்கள் அங்கும் இங்குமாய் பரவிக்கிடக்க அனைத்தையும் தன் கேமராவின் கழுகுப் பார்வையில் வளைத்துப் பிடித்து மெருகேற்றியிருக்கிறார் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா.

கிச்சா கம்பாக்டேவின் ஆக்சன் கோரியோகிராபியில் கைகளைத் துண்டிப்பது, சரமாரியாக கழுத்தறுத்து வீசுவது, தாறுமாறாய் சுட்டுப் பொசுக்குவது என காட்சிக்கு காட்சி தெறிக்கும் ரத்தம் பயங்கரத்தின் உச்சம்.

கலை இயக்குநர்கள் ஜாக்கி, மாயபாண்டி இருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்பதை ஏகப்பட்ட காட்சிகள் எடுத்துக் காட்ட, அந்தமானில் சுற்றிச் சுழலுக் காட்சிகளில் அது பல மடங்காக பிரதிபலிக்கிறது.

‘கெட்டவன் நல்லவனாக மாற நினைக்கும்போது சந்திக்கும் கஷ்ட நஷ்டங்கள்’ என்ற பார்த்துப் பழகிய கதையை கார்த்திக் சுப்பராஜின் மேக்கிங்கில், உயர்தர தொழில்நுட்பப் பங்களிப்பில் பார்ப்பது வித்தியாசமான அனுபவம்… படத்தில் சூர்யா இறக்கியிருக்கும் எனர்ஜியால் ரசிகர்களுக்கு ஊறுகிறது புது ரத்தம்!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here