மாஸான ஆக்சன் திரில்லராக ‘ரெட்டதல.’
இளைஞன் காளி தன் காதலியின் பணத்தாசையை நிறைவேற்ற, தனது ஜெராக்ஸ் போலிருக்கிற உபேந்திரா என்ற பணக்காரனைக் கொலை செய்கிறான். கொலை செய்தபிறகு ஆள் மாறாட்டம் செய்து உபேந்திராவுக்கு சொந்தமான கோடிக்கணக்கான பணத்தை அபகரிப்பது காளியின் திட்டம். அதற்கான நடவடிக்கைகளில் இறங்கும்போது உபேந்திராவே ஒரு கொலைக் குற்றவாளி என்பதும், அவன் தன்னைத் தன்னை தீர்த்துக் கட்ட திட்டமிட்டிருந்ததும் காளிக்கு தெரியவருகிறது.
காளியின் திட்டம் நிறைவேறியதா? காதலியை திருப்திபடுத்த முடிந்ததா? உபேந்திரா காளியை போட்டுத்தள்ள திட்டமிட்டிருந்தது எதற்காக? என்பதையெல்லாம் பரபரப்பாக காண்பித்து நிறைவுக்கு வருகிறது இயக்குநர் கிரிஷ் திருக்குமரனின் திரைக்கதை.
ஸ்டைலிஷ் லுக்கில் காளியாகவும் உபேந்திராவாகவும் அருண் விஜய். ஹீரோயிஸத்தையும் வில்லனிசத்தையும் கலந்துகட்டி மிரட்டலான கேங்ஸ்டர், டெரரான கேங்ஸ்டர் என ஆக்சன் அதிரடியில் வித்தியாசம் காட்டி தெறிக்கவிடுகிறார்.
சித்தி இத்னானி தன் காதலன் காளியிடம் ‘என்கூட காலம் முழுக்க இருக்கணும்னு ஆசைப்படுறேல்ல; அது நடக்கணும்னா நான் எதிர்பார்க்கிற அளவுக்கு பணத்தை கொண்டு வா; அதன்பிறகு என்னை கல்யாணம் பண்ணிக்கிறது பத்தி யோசிக்கலாம்’ என்பதுபோல் டயலாக் விடுகிறார். அப்போதே அவர் இந்த கதையின் ஹீரோயின் அல்ல; வில்லி என்றாகி விடுகிறது. கிளைமாக்ஸிலாவது அவர் ஹீரோயினாகி விடுவார் என எதிர்பார்த்தால் ம்ஹூம்…
ஜான் விஜய்க்கு வழக்கம்போல மோசமான போலீஸ் கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்க, அவரும் வழக்கம்போலவே வளைந்து நெளிந்து நடந்து திமிர் தெனாவட்டு காட்டுகிறார்.
ஹரீஷ் பேரடி, யோகேஷ், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கேங்ஸ்டர் கும்பலாக கூடி பழிவாங்கும் வெறியோடு அங்குமிங்கும் பாய்கிறார்கள். ஒருசில காட்சிகளில் வந்துபோகிறார் பாலாஜி முருகதாஸ்.
சாம் சி.எஸின் பின்னணி இசை அதிரடியான கதையோட்டத்துக்கு தேவையான டெஸிபலில் பயணிக்கிறது. ‘கண்ணம்மா’ பாடலை ரசிக்க முடிகிறது.
கதையின் முக்கியச் சம்பவங்கள் முழுக்க இருள் சூழ்ந்த பகுதிகளிலேயே நடந்துகொண்டிருக்க, தன் கேமரா கண்கள் வழியாக வெளிச்சம் பாய்ச்சி காட்சிகளை தரம் உயர்த்தியிருக்கிறார் டிஜோ டோம்னி. பி சி ஸ்டண்ட்ஸ் குழுவின் ஆக்சன் கோரியோகிராபி படத்தின் பலம்.
காளி தன் காதலியுடன் சேர்ந்து உபேந்திராவை கொலை செய்து, ஆள் மாறாட்டம் செய்ய திட்டமிடும்போது நிமிர்ந்து உட்காரும் நாம், உபேந்திரா பற்றிய அதிர வைக்கும் உண்மைகள் தெரியும்போது, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் சீட்டின் நுனிக்கு போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்த எதிர்பார்க்கான தீனி திரைக்கதையில் குறைவாக இருந்தாலும் ஆக்சன் அதகளத்தாலும் பிரமாண்டமான மேக்கிங்காலும் நிமிர்ந்து நிற்கிறது ‘ரெட்டதல.’
-சு.கணேஷ்குமார்
