R M V – The King Maker ஆவணப்படம் ஒரு பார்வை

அரசியல்களத்தை எடுத்துக் கொண்டால் எம் ஜி ஆரின் வளர்ச்சிக்கு அசுரபலமாக இருந்தவர். எம் ஜி ஆர் படுத்துக் கொண்டே ஜெயித்ததன் பின்னணியில் வேகமும் விவேகமும் புத்திசாலித்தனமும் கலந்து உழைத்தவர்.

எம் ஜி ஆரின் அமைச்சரவையில் இடம்பெற்று திறம்பட பங்களித்தவர். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் அவர் செயல்பாடுகள் இன்றளவும் முன்னுதாரணமாக இருக்கிறது.

திரைத்துறை என்று எடுத்துக் கொண்டால் தெய்வத்தாய், காவல்காரன், நான் ஆணையிட்டால், ரிக்‌ஷாகாரன், இதயக்கனி உள்ளிட்ட எம் ஜி ஆர் நடித்த படங்களைத் தயாரித்தவர்.

எம் ஜி ஆருக்கு பிறகு அவரது மனைவி ஜானகி தமிழ்நாட்டின் முதலமைச்சரானதன் பின்னணியில் அவரது தியாகமிருக்கிறது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையிலும் துணை நின்றிருக்கிறார்.

இலக்கிய ஈடுபாடுள்ளவர்; கம்பன் கழக நிகழ்வுகளை வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறச் செய்தவர்.

அரசியல் மேடைகளில் அதற்கேற்ற பேச்சு, இலக்கிய மேடைகளில் கருத்தாழமிக்க உரைகள் என தன் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க வைத்தவர்.

அவரைப் பற்றிய அருமை பெருமைகளை இந்த ஆவணப்படத்தில் இன்றைய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவங்கி நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், புரட்சித் தமிழன் சத்யராஜ், கவிஞர் வைரமுத்து என பலரும் எடுத்துச் சொல்லி வியக்க வைக்கிறார்கள். பாட்ஷா பட விழாவில் ரஜினிகாந்தின் பேச்சு அவரது அமைச்சர் பதவியைப் பறித்திருக்கிறது என்கிற இந்த தலைமுறைக்கு தெரியாத வரலாறையெல்லாம் தெரிந்து கொள்ள முடிகிறது. பத்திரிகையாளர் ரா கண்ணன் எடுத்துச் சொல்லும் தகவல்கள் அத்தனையிலும் ஆர் வி யின் கம்பீரம் தெரிகிறது.

அரசியல்வாதிகளில் ஜெகத்ரட்சகன், ஏ சி சண்முகம் உள்ளிட்டோர் அவரைப் பற்றி பகிர்ந்துகொள்வதைப் பார்க்கும்போது ஆச்சரியத்தின் எல்லைக்கு போய்வர வாய்ப்பிருக்கிறது.

பார்ப்பது ஆவணப்படம் என்ற உணர்வு ஏற்படாத அளவுக்கு பிரபலங்களின் கருத்துக்களையும் அவர்கள் சொல்லும் வரலாற்றுச் சம்பவங்களுக்கேற்ற புகைப்படங்களையும், காட்சிகளையும், வீடியோ பதிவுகளையும் சுவாரஸ்யமாக தொகுத்திருக்கிறது ஆவணப்பட உருவாக்கக் குழு.

ஏராளமானோரின் கருத்துக்களைத் திரட்டி, ஆவணப் படத்தை முழுநீள திரைப்படம் போல் தனித்துவமான படைப்பாக வழங்கி அருளாளர் ஆர் எம் வி எனும் வரலாற்று நாயகருக்கு பெருமை சேர்த்திருக்கிற இயக்குநர் பினு சுப்ரமணியம், படத்தை தயாரித்திருக்கிற ஆர் எம் வீரப்பனின் மகன் தங்கராஜ் வீரப்பன் உள்ளிட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்!

-சு.கணேஷ்குமார் 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here