Home விமர்சனம் சிறை சினிமா விமர்சனம்

சிறை சினிமா விமர்சனம்

காவல்துறை அதிகாரிகளின் அராஜக அக்கிரமங்களை பல படங்களில் பார்த்திருக்கிறோம். பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த ‘சிறை’யிலிருந்து எட்டிப் பார்ப்பது காவல்துறை அதிகாரி ஒருவரின் அதிகாரம் குறையாத அன்பான முகம்.

வயதில் கால் நூற்றாண்டைக்கூட தொடாத இளைஞன் அப்துல் கொலைக் குற்றவாளி. வேலூர் சிறையிலிருக்கும் அவனை, சிவகங்கை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்று நீதிபதி முன் நேர்நிறுத்தும் பொறுப்பை ஏற்கிறார் கான்ஸ்டபிள் கதிரவன். அதற்கான பயணத்தின் இடையில் அவன் காணாது போகிறான். போலீஸே போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கும்படி பரபரப்பாகிறது நிலைமை.

கதை இப்படி டாப் கியரில் வேகமெடுக்க, அப்துல் எங்கே போனான்? அவன் எதற்காக கொலை செய்தான்? அவனை சட்டம் என்ன செய்கிறது என்பதையெல்லாம் விறுவிறுப்பாக விவரிக்கிறது திரைக்கதை…

அப்துலாக (இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரின் மகன்) எல் கே அக்ஷய் குமார். கதையம்சமுள்ள படத்தில் அறிமுகமாகியிருப்பதற்காக வாழ்த்தை சொல்லிவிடலாம். அந்த முகவெட்டும் உடல்வாகும் அப்பாவி இஸ்லாமிய இளைஞன் பாத்திரத்திற்கு அத்தனை பொருத்தம்.

இந்த மத பெண்ணுடன் காதல், காதலியின் தந்தையால் தாக்கப்படுதல், தன் மீது கனிவு காட்டும் காவல்துறை அதிகாரியிடம் உண்மையாக நடந்து கொள்ளுதல், கோர்ட்டில் காதலியைக் கண்டதும் உற்சாகத்தில் மிதத்தல் என நீளும் காட்சிகளில் உணர்வுகளால் உயிரூட்டியிருப்பதற்காக பாராட்டுக்களை வாரி வழங்கலாம்.

டாணாக்காரனில் வலி சுமக்கும் போலீஸாக தரமான நடிப்பைத் தந்த விக்ரம் பிரபு, மீண்டும் போலீஸ் யூனிஃபார்ம் அணிந்திருக்கிறார்.  தான் அழைத்துச் செல்லும் கைதியிடம் ஆரம்பத்தில் கடுமையாக நடந்துகொள்பவர் அவனது காதல் பற்றியும் கொலைப்பழிக்கு ஆளான பின்னணி குறித்தும் தெரிந்துகொண்டபின் ஆதரவும் அரவணைப்பும் தந்து அவனது விடுதலைக்காக ரிஸ்க் எடுக்கும்போது கதாபாத்திரத்தின் மீதான மதிப்பைக் கூட்டுகிறார். உடல்மொழி, பார்வை, வசன உச்சரிப்பு என கச்சிதமான நடிப்பால் கரியருக்கு பெருமை சேர்க்கிறார்.

அப்துலை காதலிக்கும் அனிஷ்மா அனில்குமாருக்கு காதல், பயம், பதற்றம், பரிதவிப்பு, உற்சாகம், வேதனை என எல்லா உணர்வுகளையும் உயிரோட்டத்துடன் வெளிப்படுத்தும் நடிப்புத் திறன் இருக்கிறது. அதை அளவாகவும் அழகாகவும் காட்டியிருக்கிறார். தோற்றத்தின் எளிமையும் கவர்கிறது.

போலீஸ் உயரதிகாரியாக வந்து, தவறு செய்த போலீஸ் அதிகாரிகளை கண்டிக்கும் மூணாறு ரமேஷின் நடிப்பு மிரட்டல். போலீஸ் உயரதிகாரிகள் கீழ்நிலை அதிகாரிகளை எப்படி நடத்துவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு.

விக்ரம் பிரபுவுடன் உதவிக்கு என இணைந்து உபத்திரவமாக மாறுகிற அதிகாரிகள் இருவரின் நடிப்பும் போலீஸ் அதிகாரிகள் எப்படியெல்லாம் திமிர்த்தனமாக, அலட்சியமாக நடந்துகொள்வார்கள் என்பதற்கு உதாரணம்.

ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும் பிலோமின் ராஜின் எடிட்டிங் பங்களிப்பும் கதையிலிருக்கும் வேகத்திற்கு வெறியேற்றுவது போலிருக்கிறது.

வேலூரிலிருந்து சிவகங்கை வரையிலான இரவு நேரப் பயணம், பகல் நேரப் பயணம், கோர்ட் வளாகம், போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட கதை நிகழ்விடங்களின் நீள அகலம் அனைத்தையும் பரபரப்புச் சூழலில் பதிவு செய்திருக்கிறது மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா கோணங்கள்.

இந்த படத்துக்கு ‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் எழுதியிருக்கும் கதையாலும் திரைக்கதை பங்களிப்பாலும் காவல்துறையில் உயரதிகாரிகளாக இருப்பவர்கள் அதிகாரத்தை தங்களுக்கு ஏற்றபடி வளைத்துக் கொண்டு கெத்துகாட்ட, அவர்களிடம் மாட்டிக்கொண்டு அவர்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள் படும்பாட்டை, சட்டதிட்ட நடைமுறைகளால் விசாரணைக் கைதிகள் சந்திக்கிற அடக்குமுறைகளை,குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிபதியிடம் நேரடியாக பேசுவதற்கு இருக்கிற வாய்ப்பை, காவல்துறை அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டு அதிகாரத்தைப் பயன்படுத்தினால் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழும் என்பதை, குற்றவாளிகளின் மதத்துக்கேற்ப சட்டத்தின் பார்வை மாறுபடும் என்பதை… இப்படி ஏகப்பட்ட விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

சுரேஷ் ராஜகுமாரியின் இயக்கம் படத்தை தமிழ் சினிமாவின் தரமான படைப்புகளில் ஒன்றாக உயர்த்தி நிறுத்துகிறது!

-சு.கணேஷ்குமார் 

REVIEW OVERVIEW
சிறை சினிமா விமர்சனம் https://www.startcutaction.in/sirai-movie-review/
Previous articleR M V – The King Maker ஆவணப்படம் ஒரு பார்வை
Next articleபருத்தி சினிமா விமர்சனம்
sirai-movie-reviewகாவல்துறை அதிகாரிகளின் அராஜக அக்கிரமங்களை பல படங்களில் பார்த்திருக்கிறோம். பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த 'சிறை'யிலிருந்து எட்டிப் பார்ப்பது காவல்துறை அதிகாரி ஒருவரின் அதிகாரம் குறையாத அன்பான முகம். வயதில் கால் நூற்றாண்டைக்கூட தொடாத இளைஞன் அப்துல் கொலைக் குற்றவாளி. வேலூர் சிறையிலிருக்கும் அவனை, சிவகங்கை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்று நீதிபதி முன் நேர்நிறுத்தும் பொறுப்பை ஏற்கிறார் கான்ஸ்டபிள் கதிரவன். அதற்கான பயணத்தின் இடையில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்