இந்திய விமானப் படையில் பணியாற்றிய அதிகாரி கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி, சூர்யா நடிப்பில் தமிழில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று.’ இந்த படத்தை இயக்கியதற்காக சுதா கொங்கராவுக்கு தேசிய விருது என்ற பெரும் அங்கீகாரம் கிடைத்தது.
அந்த படம் அக்சய் குமார் கதையின் நாயகனாக நடிக்க, சுதா கொங்கரா இயக்கத்திலேயே இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ‘புரொடக்சன் 27’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

படத்தில் நடிகை ராதிகா மதன், பரேஷ் ரவால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த அறிவிப்பால் அக்சய் குமாரின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
படத்தை அபன்டன்சியா என்டர்டெய்ன்மென்ட், கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அருணா பாட்டியா, ஜோதிகா, சூர்யா, விக்ரம் மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தி திரையுலகில் முதல் முறையாக தயாரிப்பாளராக அறிமுகமாகியிருக்கும் சூர்யா – ஜோதிகா தம்பதி, தமிழில் பெற்ற வெற்றியை விட கூடுதலான வெற்றியை பெறுவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது!

