இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ‘ஸ்டார்’ திரைப்படம் மே 10-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக மே 2; 2024 அன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
தயாரிப்பாளர் சாகர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் பாபின், இணை தயாரிப்பாளர் தீபக், இயக்குநர் இளன், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், நாயகன் கவின், நடிகைகள் அதிதி பொஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன், நடிகர்கள் ‘ராஜா ராணி’ பாண்டியன், தீப்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நடிகர் கவின் பேசியபோது, ” டாடாவிற்கு பிறகு ஸ்டார். இயக்குநர் இளன் கதை சொல்ல வரும்போது அவருடன் எதனையும் எடுத்துக் கொண்டு வரவில்லை. பொதுவாக கதை சொல்ல வரும் இயக்குநர்கள் தங்களது கைகளில் லேப்டாப்… ஒன்லைன் ஆர்டர்.. ஸ்கிரிப்ட் புக்.. என ஏதாவது ஒன்றை கையில் வைத்திருப்பார்கள். மூன்று மணி நேரம் பொறுமையாக.. விரிவாக கதையை சொன்னார். அவர் இதயத்தில் இருந்து கதையை சொல்கிறார் என்று கதையை கேட்டு முடிந்த பிறகு தான் தெரிந்தது. அவர் சொன்ன கதையில் ஜீவன் இயல்பாகவே இருந்தது. பெரிதாக எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்.
படத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை.. என்னை தேடி வந்து கதை சொன்ன பிறகு வைத்த நம்பிக்கை.. என அனைத்தையும் காப்பாற்றி இருக்கிறேன் என நினைக்கிறேன்.
படத்தின் இணை தயாரிப்பாளர் தீபக் வெளிநாட்டில் தான் இருப்பார். ஆனால் படப்பிடிப்பு பணிகளை நேர்த்தியாக அங்கிருந்தே ஒருங்கிணைத்து விடுவார்.
இந்தப் படத்தின் கதையை கேட்டு முடித்தவுடன் மிகவும் பொறுமை தேவை என்பதை உணர்ந்தேன். படைப்பும் பெரிது. அதற்கான உழைப்பும் நேரமும் அதிகம். அனைவரும் இதனைப் புரிந்து கொண்டு பொறுமையாக இருந்து பணியாற்றியதற்காக இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் விக்ரம் பிரபுவுடன் இணைந்து ‘ஷத்ரியன்’ என்றொரு படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் யுவன் இசையில் எனக்கொரு பாடல் காட்சியும் இருந்தது. அது படமாக்கப்பட்டது. பிறகு படத்தொகுப்பில் நீக்கப்பட்டது. நான் நடித்த முதல் படம். அதில் பாடல் காட்சி நீக்கப்பட்டதால்.. மனதில் வலி இருந்தது. யுவனை நேரில் சந்திக்கும் போது இதைப்பற்றி விவரித்தேன்.
பொதுவாக ஆறுதலுக்காக சொல்வார்கள் அல்லவா… ‘இன்று நடக்கவில்லை என்றால், நாளை இதைவிட பெரிதாக நடக்கும் என்று’… அதைப் பற்றிய தவறான புரிதல் எனக்குள் இருந்தது. ஆனால் அந்த வார்த்தைகள் எல்லாம் உண்மைதான் என்பது இப்படத்தில் தெரிந்து கொண்டேன். யுவன் சங்கர் ராஜா இசை என்றவுடன் என்னுடைய ஆசையும், கனவும் நிறைவேறிவிட்டது. இந்த படத்திற்காகவே யுவன் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். அதை நீங்கள் முன்னோட்டத்திலேயே பார்த்து ரசித்திருக்கலாம். படம் பார்க்கும்போதும் அவருடைய உழைப்பு உங்களுக்கு தெரிய வரும் என நினைக்கிறேன்.
எழில் அரசு தான் ஒளிப்பதிவு என்றவுடன்.. எனக்கு முழு நம்பிக்கை வந்து விட்டது. ஏனென்றால் ‘டாடா’ படத்திற்கு அவர்தான் ஒளிப்பதிவாளர்.
படத்தின் கதை யதார்த்தமாக இருக்கும். அதில் இடம்பெறும் சின்ன சின்ன சண்டை காட்சிகளும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் விக்கி மாஸ்டர் கடினமாக உழைத்திருக்கிறார்.
எனக்கு டான்ஸ் மாஸ்டர் என்றால் பயம் தான். எனக்கு நடிப்பின் மீது இருக்கும் நம்பிக்கை… நடனத்தின் மீது இல்லை. நிறைய ஒத்திகையை பார்ப்பேன். இந்தப் படத்தில் மூன்று டான்ஸ் மாஸ்டர்களும் எனக்காக பொறுமையுடன் சொல்லிக் கொடுத்து நடனமாட வைத்தார்கள்.
லால் மற்றும் கீதா கைலாசம் இருவரும் நடித்திருக்கும் காட்சிகள் உயிரோட்டமாக இருக்கும். அதில் அவர்களின் அனுபவிக்க நடிப்பு மேலும் யதார்த்தமாகவும், அழகாகவும் இருக்கும். இது ரசிகர்களிடமும் சரியாக பிரதிபலிக்கும் என நம்புகிறேன்.
படத்தில் நடித்த சக நடிகைகளான பிரீத்தி மற்றும் அதிதிக்கும் நன்றி. உடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் நடித்த அனைவரும் திரையுலகத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. ஏனெனில் நல்ல கன்டென்ட் இருந்தால் அந்தப் படத்திற்கு நீங்கள் அபரிமிதமான ஆதரவை தருவீர்கள். இதற்கு ‘டாடா’ உட்பட பல படங்களை உதாரணமாக சொல்லலாம்.
இவற்றையெல்லாம் கடந்து ஒரே ஒரு சிறிய விசயத்தை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ‘சினிமாவை வைத்து சினிமா எடுத்தால் ஒடாது’ என பொதுவாக சொல்வார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என எனக்குத் தெரியவில்லை. படம் நன்றாக இருந்தால் ஓடும். ஓடியிருக்கிறது. ஆனால் இது போன்ற விசயம் எப்படி உருவாகிறது என தெரியவில்லை. ஒருவேளை ஒட்டுமொத்த சதவீதத்தின் அடிப்படையில் சொல்லி இருக்கலாம் என நினைக்கிறேன்.
இந்தப் படத்திற்கும் அது நடந்தது. தயாரிப்பாளர் சாகரிடம் கதை செல்வதற்கு முன் சிலர் இந்த விசயத்தை சொன்னார்கள். அதுவரைக்கும் நான் மிகவும் நம்பிக்கையாக தான் இருந்தேன். தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகரும் கதையைக் கேட்டு விட்டு .. இது போன்ற கருத்தை சொல்லி விடுவாரோ..! என பயந்தேன். ஆனால் இந்த படத்தை தயாரிக்க ஒரே நாளில் அவர் ஒப்புக்கொண்டவுடன் எனக்கு இருந்த பயம் விலகி, நம்பிக்கை அதிகரித்து விட்டது. கலையை கலையாக பார்க்கிற.. அதை மிகவும் நேசிக்கிற.. பட குழு மீது தயாரிப்பாளர் நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கை தான் இந்த படத்தை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது என நினைக்கிறேன். அந்த விசயங்களை எல்லாம் கடந்து இந்த படைப்பின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைதான் வெற்றியை தரும் என நம்புகிறேன்.
இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல முறையில் ஓடி.. சினிமாவைப் பற்றி சினிமா எடுத்தால் ஓடும் என்கிற பட்டியலில் இந்த திரைப்படம் இடம் பெறும். இதை நான் ஆத்மார்த்தமாக நம்புகிறேன்.
ரசிகர்கள் மீதும் பெரும் நம்பிக்கை இருக்கிறது. தயாரிப்பாளர்களின் முதலீட்டிற்கும், ரசிகர்களின் முதலீட்டிற்கும் நியாயமாக உழைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய குரு எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். இதற்காகவே ஒட்டுமொத்த பட குழுவும் நம்பிக்கையுடன் பணியாற்றியிருக்கிறது” என்றார்.