கிளைமாக்ஸ் உருவாக்கியிருக்கும் பரபரப்பு; ரசிகர்களிடம் பெருகிய வரவேற்பு; அதிகரித்த தியேட்டர்கள்… ‘ஸ்டார்’ படக்குழு உற்சாகம்!

கவின் நடிப்பில், இளன் இயக்கத்தில், யுவன் இசையில் உருவான ‘ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரமான எதிர்பார்ப்பிற்கு இடையே உலகம் முழுவதும் கடந்த மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கவினுடன் லால், பிரீத்தி முகுந்தன், அதிதி பொஹங்கர், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், இப்படத்தைக் காண முதல் நாள் முதல் காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டனர்.

எட்டு நிமிடத்திற்கு மேல் நீடிக்கும் உணர்வுபூர்வமான படத்தின் உச்சகட்ட காட்சி.. சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதை கண்டு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி பாராட்டினர்.

‘தமிழ் சினிமாவில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட நீளமான ( எட்டு நிமிடம் 21 வினாடி) கிளைமாக்ஸ் காட்சி இதுதான்’ என்று குறிப்பிட்டிருக்கும் படக்குழுவினர், இதற்காக உழைத்த ஒட்டுமொத்த படக் குழுவினருக்கும், இதனைக் குறிப்பிட்டு பாராட்டிய ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெறும் என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் படத்தை திரையிடும் திரையரங்குகளில் எண்ணிக்கை இன்று முதல் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ‘ஸ்டார்’ திரைப்படம் மே 11 அன்று முதல் கூடுதலாக நூற்றெண்பது  (180) திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

படத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் கவினின் நடிப்பையும், யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையையும் வெகுவாக பாராட்டினர்.

‘ஸ்டார்’ திரைப்படம்- பெரிய வெற்றியை பெற்றுள்ளதால் கோடை விடுமுறைக்கு குடும்பங்களுடன் திரையரங்கிற்கு வருகை தந்து ரசிக்கும் படைப்பாக மாற்றம் பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ‘ஸ்டார்’ திரைப்படத்தை  திரையிடும் திரையரங்குகளின் எண்ணிக்கை  உயர்ந்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here