Home Uncategorized கதைக்குத் தேவையான இடத்தில் ஹீரோயிசத்தையும் கதையின் எடையையும் சமநிலைப்படுத்தி எடுத்திருக்கிறார்! – ‘சட்டென்று மாறுது வானிலை’...

கதைக்குத் தேவையான இடத்தில் ஹீரோயிசத்தையும் கதையின் எடையையும் சமநிலைப்படுத்தி எடுத்திருக்கிறார்! – ‘சட்டென்று மாறுது வானிலை’ பட விழாவில் இயக்குநர் பாபு விஜய் பற்றி பெருமிதமாக சொன்ன நடிகர் ஜெய்

ஜெய் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் ‘சட்டென்று மாறுது வானிலை.’

இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்கியுள்ள இந்த படத்தில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரும் மே 15-ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்களும் கலந்து கொள்ள, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

நடிகர் ஜெய் பேசியதாவது:

“இங்கே வந்திருக்கும் அனைத்துப் பெரியவர்களுக்கும், மீடியா நண்பர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக A.R. முருகதாஸ் சார், சசி சார், சினேகன் சார், எங்கள் ஃபைட் மாஸ்டர், எடிட்டர், இசையமைப்பாளர், கேமராமேன் ரிச்சர்ட் சார் – எல்லோருக்கும் ரொம்ப நன்றி.

இப்போது எல்லாருமே பிஸியானவர்கள். அவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும், ‘இவர்கள் அழைக்கிறார்கள், போய் பார்க்கலாம்’ என்ற அன்போடு இங்கே வந்திருக்கிறீர்கள். அதற்காக நான் உண்மையாகவே மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். நீங்கள் இந்த நேரத்தை எங்களுக்காகச் செலவழிப்பதை நான் மிகவும் மதிக்கிறேன்.

பொதுவாக என் நண்பர்கள், குடும்பத்தினர் எல்லாரும் என்னிடம் ‘உனக்கு பிடித்த இயக்குநர் யார்?’ என்று கேட்பார்கள். நான் எப்போதுமே ஒரே பெயரைத் தான் சொல்வேன் — முருகதாஸ் சார். பின்னாளில் அவர்கள் கூட ஆப்ஷன்ஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள் — மணிரத்னம் சார், ஷங்கர் சார், முருகதாஸ் சார்… யார் பிடிக்கும்? என்றாலும், நான் ‘முருகதாஸ் சார் தான்’ என்பேன்.

ஏனென்றால் அவருடைய படங்களையும், அவருடைய கேரக்டரையும், பேசும் விதத்தையும் நான் அந்த அளவுக்கு ரசித்திருக்கிறேன். அவருக்கே தெரியாமல் நிறைய விஷயங்களை நான் அவரிடமிருந்து ஃபாலோ பண்ண ஆரம்பித்தேன். ஒரு விஷயத்தை மிகவும் இனிமையாக, சரியாகப் புரியும்படிச் சொல்வார்.

ஒருநாள் காலை ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னிடம் சொன்ன ஒரு விஷயம் இன்னும் என் வாழ்க்கையில் நான் பின்பற்றிக்கொண்டிருக்கிறேன்.

‘ஷூட்டிங் டைம்ல மட்டும் கொஞ்சம் சீக்கிரம் தூங்குங்க. லேட்டா தூங்கினா டார்க் சர்கிள்ஸ் வரும். அதை மறைக்க மேக்கப் போடுவாங்க. அந்த மேக்கப்புக்கு கேமராமேன் லைட்டிங் மாற்றணும். அதனால் உங்க ஒரு சின்ன தூக்கமின்மை பின்னாடி நிறைய பேரோட வேலையைப் பாதிக்கும்’ என்றார்.

அது எனக்குப் பெரிய பாடம் தந்தது. அன்றிலிருந்து இன்று வரை நான் சீக்கிரம் தூங்கும் பழக்கத்தைப் பின்பற்றுகிறேன். இன்னைக்கும் மறுநாள் காலை ஷூட்டிங் என்றால் இரவு 10:30 ஆனாலே முருகதாஸ் சார் ஞாபகம் வந்துவிடுவார். அந்த ஒரு பழக்கம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றம் செய்தது.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், முதலில் வேறு ஒருவர் பற்றிப் பேச்சு நடந்தது. பின்னர் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இசையமைப்பாளர்தான் நமக்கு வேண்டும் என்று இயக்குநர் சொன்னார். முதல் பாடலின் முதல் 30 விநாடிகள் கேட்டவுடனே புரிந்துவிட்டது — ‘சரியான ஆள் கிடைத்துட்டார்’ என்று.

அந்தப் பாடல் AirPods-ல் கேட்கும்போது அவ்வளவு தரமாக, புதுசாக இருந்தது. அதனால் தான் பாடல் வெளியான உடனே மில்லியன் கணக்கில் பார்வைகள் போனது.

எடிட்டரும் அதே மாதிரி மிக நேர்த்தியாக வேலை செய்திருக்கிறார். இந்தப் படம் அவருக்கு ரொம்ப சவாலான படம். படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்.

முக்கியமாக ரிச்சர்ட் சார்… ரொம்ப நன்றி சார். உங்கள் உழைப்பை நினைத்தாலே எனக்குக் கஷ்டமாக இருக்கும். நாங்கள் ‘9 to 6 ஷூட்டிங்’ என்று சொல்வோம். ஆனால் காலை 8 மணிக்குப் போய், மாலை 5:30-க்கு ‘சன்செட்டில் இன்னொரு ஷாட் எடுத்தா நல்லா இருக்கும்’ என்று ஆரம்பித்து, அது ஒரு முழு சீனாக மாறி, இரவு 10 மணி ஆகிவிடும்.

நான் வீட்டுக்குப் போகும்போது கூட, ‘இன்னும் ஷூட் முடியல சார், வேறு லொக்கேஷனுக்கு போயிருக்காங்க’ என்பார்கள். அவர்கள் இரவு 12, 1 மணி வரை வேலை செய்து, மறுநாள் காலை 7 மணிக்கே மீண்டும் ஸ்பாட்டில் இருப்பார்கள். அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு.

அவரை கேமராமேனாக அறிவித்த உடனே எனக்கு ரொம்ப சந்தோஷம். ஏனென்றால் அப்போதுதான் ‘மாநாடு’ படம் வந்திருந்தது. அந்தப் படம் கேமராமேன், எடிட்டர் இருவருக்கும் மிகச் சவாலான படம். அதைப் பார்த்தவுடன் ‘வாவ்’ என்று தோன்றியது. அதே தரமும், ஃப்ரேமிங்கும் இந்தப் படத்திலும் இருக்கிறது.

இப்போது தயாரிப்பாளர் பாபு விஜய் பற்றிச் சொல்லணும். ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் என்ன என்று இந்தப் படத்தில்தான் எனக்கு நெருக்கமாகத் தெரிந்தது. ஒரு நடிகனாக இருந்தால், பணம் எங்கிருந்து வருகிறது, என்ன வட்டி கொடுக்கிறார்கள் — இதெல்லாம் தெரியாது. ஆனால் இங்கே நான் நேரில் பார்த்தேன்.

ஒரு ஷாட்டுக்காக கூட அவர் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பார். தேவையான இடத்தில் செலவு செய்வார். தேவையில்லாத இடத்தில் வீண் செலவு செய்ய மாட்டார். அது ஒரு நல்ல தயாரிப்பாளரின் குணம்.

இயக்குநர் பாபு விஜய் பற்றிச் சொன்னால், சில சமயம் ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குப் போன பிறகும் கனவில் கூட ‘டார்லிங் ரெடி டார்லிங்’ என்று கூப்பிடுவார் போல இருக்கும். அந்த அளவுக்கு அவர் நம்மைச் சோர்வடைய விடமாட்டார்.

ஒரு நாளில் 150 சீன்கள் எடுத்த மாதிரி வேலை நடக்கும். ஆனால் நம்மை எங்கும் டயர்ட் ஆக விடாமல், ஒரு எனர்ஜிக்குள் வைத்திருப்பார். அவருக்கு வேலை என்ன வேண்டும் என்று தெளிவாகத் தெரியும். அதே நேரத்தில் யாராவது ஒரு நல்ல சஜெஷன் சொன்னால் அதை அழகாக ஏற்றுக்கொள்வார்.

கதை சொன்ன உடனே எனக்கு மிகவும் பிடித்தது. ஏனென்றால் அவர் முழுக்க ஒரு பேக்கேஜாக இந்தப் படத்தை யோசித்திருந்தார். முதல் பாதியில் கொஞ்சம் விஜய் சார் ஃபேன் மொமெண்ட்ஸ் இருக்கும். உடல் மொழி, டயலாக் டெலிவரி — அந்தச் சாயல் இருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில் கதை முழுக்க வேறு ஒரு இம்பாக்ட்டுக்கு போய்விடும்.

அது ஒரு முதல் இயக்குநருக்கு ரொம்ப சவாலான ஸ்கிரிப்ட். அவர் நினைத்திருந்தால் சாதாரண கமர்ஷியல் பாதைக்கு போயிருக்கலாம். ஆனால் கதைக்குத் தேவையான இடத்தில் ஹீரோயிசத்தையும், கதையின் எடையையும் சமநிலைப்படுத்தி எடுத்திருக்கிறார்.

அதனால் இந்தப் படத்தை நீங்கள் திரையரங்கில் பார்த்தால் கண்டிப்பாக ரசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”

இயக்குநர் பாபு விஜய் பேசியதாவது:

“முதலில் ஆண்டவனுக்கு நன்றி. இப்படி ஒரு அற்புதமான தருணத்தையும், உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் கொடுத்ததற்கு. என் பெற்றோருக்கு என் மனமார்ந்த அன்பும் நன்றியும். அதைவிட முக்கியமாக என் மனைவி லக்ஷ்மி சர்மாவுக்கு நான் பெரிய நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் இல்லையென்றால் இன்று நான் இந்த இடத்தில் இருக்க முடியாது. எல்லா வகையிலும் என்னை முழுமையாக ஆதரித்தவர் அவர் தான்.

அதேபோல் என் நண்பர் சத்யநாராயணன். நான் சோர்ந்து போன நேரங்களில் எல்லாம் என்னைத் தாங்கிப் பிடித்து, ‘உங்களால் முடியும்’ என்று சொல்லி என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தியவர். அவருக்கும் என் நன்றி.

எனக்கு சினிமா என்றால் மனதில் முதலில் வருவது ஒரே ஒரு பேர் — A.R. முருகதாஸ் சார். எனக்கு ஆரம்பத்தில் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையே இல்லை. ‘ரமணா’ படம் பார்த்ததிலிருந்து முருகதாஸ் சாரிடம் உதவி இயக்குநராக ஒரு படம் வேலை செய்தாலே போதும் என்ற ஆசை மட்டும் தான் இருந்தது. அந்த அளவுக்கு அவர் மீது ஒரு பைத்தியக்காரமான அன்பு. நான் ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தால், அவர்களுடைய வீட்டில் பெரிய பிரச்சனை வந்திருக்கும் அளவுக்கு அவர் மீது காதல் இருந்தது.

சாருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஏனென்றால் அவர் மற்றவர்களுக்காக அதைவிட அதிகமாகச் செய்வார். குறிப்பாக உதவி இயக்குநர்களுக்காக. இன்று நான் இங்கே நிற்பதற்கும், இந்தப் படம் உருவானதற்கும் காரணம் நான் அவரிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள்தான்.

உண்மையில் அவரிடம் இருந்து நான் கற்றது ஐந்து சதவீதம் கூட இருக்காது. அந்த ஐந்து சதவீதத்திற்குத்தான் நீங்கள் இவ்வளவு பாராட்டுகள் சொல்கிறீர்கள். அவரை முழுமையாக யாராலும் கற்றுக்கொள்ள முடியாது.

முருகதாஸ் சார் உதவி இயக்குநர்களை வேலை செய்ய விடுவார். அது சரியா, தவறா என்று முதலில் கேட்க மாட்டார். முதலில் செய்யச் சொல்வார். பிறகு திருத்துவார். உதவி இயக்குநர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கே அவர் ஒரு பெரிய எடுத்துக்காட்டு.

அவருடன் வேலை செய்தால் வெளியுலகமே தெரியாது. அந்த அளவுக்கு எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கற்றுக்கொடுப்பார். நான் படம் தயாரிக்கப் போகிறேன் என்று முடிவு செய்தவுடன் முதலில் தனஞ்செயன் சாரைச் சந்தித்தேன். அவர் சொன்ன ஆலோசனைகள் இந்தப் படத்தில் மிகவும் உதவியாக இருந்தது.

தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி. முதலில் ரிச்சர்ட் சார். உண்மையில் இந்தப் படம் இந்த அளவுக்குத் தரமாக வந்ததற்கு மிகப்பெரிய காரணம் அவர். நான் முதலில் அவரை அணுகவே இல்லை. பெரிய கேமராமேன், சின்ன படம் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கே விஷயம் தெரிந்து அவர் என்னைத் தொடர்பு கொண்டார். ‘நான் இந்தப் படம் பண்ணுறேன்’ என்றார்.

அது பெரிய விஷயம் — இன்று வரை அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. ‘நீங்கள் முதல் முறையாகத் தயாரிக்கிறீர்கள். பணம் முக்கியமில்லை’ என்று சொல்லிவிட்டு முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்தார். ஒரு கேமராமேன் மாதிரி அல்ல, ஒரு தயாரிப்பு நிர்வாகி மாதிரி வேலை பார்த்தார். இந்தப் படத்துக்கு அவர் செய்த உதவியை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.

இசையமைப்பாளர் கிரிஷ், அவர் ஒரு நல்ல லிஸனர் (Listener). நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதைப் பொறுமையாகக் கேட்டு, அதற்குச் சரியான இசையைத் தருவார். நாங்கள் சொல்ல முடியாத உணர்வுகளை இசையாக மாற்றிவிடுவார்.

கதாநாயகி மீனாட்சியை முதலில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். இந்தக் கதைக்குச் சரியானவர் இவர்தான் என்று தோன்றியது. அவரைத் தொடர்பு கொள்வதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. ஆனால் கதை கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டார்கள். அவருக்கும் என் நன்றி.

ஜெய் சாரை அணுகும் முன்பே நிறையப் பேர் என்னிடம் எதிர்மறையாகப் பேசினார்கள். ‘ஜெய்யா? அவர் ஷூட்டிங்கே வரமாட்டார்’, ‘அவரை வைத்து படம் எடுக்க முடியாது’, ‘அது வேலை ஆகாது’ என்று பலரும் சொன்னார்கள். ஒருநேரம் எனக்கே கொஞ்சம் பயமாக இருந்தது.

அப்போது சரவணா சாரிடம் பேசினேன். அவர் என்னிடம் ஒரு விஷயம் சொன்னார் — ‘அவர் ஒரு குழந்தை மாதிரி. சரியாகப் பழகி, அவரைப் புரிந்து கொண்டு நடத்தினால், உங்களைவிட முன்னாடியே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து நிற்பார்’ என்றார்.

அது உண்மையிலேயே அப்படித்தான் நடந்தது. ஜெய் சார் உண்மையில் ஒரு குழந்தை மாதிரி. நடுவில் சில பிரச்சனைகள் வந்தாலும், அமைதியாக விளக்கிப் பேசினால் உடனே புரிந்துகொள்வார். ஒரு ஹீரோவாக ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்த ஈகோவும் காட்ட மாட்டார். கேரவனுக்குப் போனால் நேரம் ஆகிவிடும், லைட்டிங் மாறிவிடும் என்று நினைத்து, அங்கேயே உடை மாற்றிக்கொள்வார். அந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் வேலை செய்தார்.

அவர் ஒரு சிறந்த நடிகர். உண்மையாகச் சொன்னால், அவரை இன்னும் முழுமையாக எந்த இயக்குநரும் பயன்படுத்தவில்லை — என்னையும் சேர்த்துச் சொல்கிறேன். படம் பார்க்கும்போது எனக்கே தோன்றியது, ‘இவரை வைத்து இன்னும் எவ்வளவு பெரிய கதைகள் செய்யலாம்!’ என்று. அந்த அளவுக்கு அற்புதமான பர்ஃபார்மன்ஸ் கொடுத்தார். மிகவும் ஒத்துழைப்பானவர்.

அவரைப் பற்றிச் சிலருக்குத் தவறான எண்ணங்கள் இருக்கலாம். சில சம்பவங்களை வைத்து அவரைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம். ஆனால் உண்மையில் அவர் மிகவும் நல்ல மனிதர். ரொம்ப நல்ல மனசு. “தேங்க் யூ செல்லம்… லவ் யூ,” என்று உணர்ச்சியுடன் பேசினார்.

அனைத்து டெக்னீஷியன்களும் இந்தப் படத்துக்காக மிகவும் கடினமாக உழைத்தார்கள். ஆனால் அது வெறும் வேலை இல்லை — அன்போடு செய்த வேலை. எல்லோரும் மகிழ்ச்சியுடன் வேலை செய்தார்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

“A.R. முருகதாஸ் சாரின் ‘சர்கார்’ படத்தில்தான் என் உதவி இயக்குநர் வாழ்க்கை ஆரம்பித்தது. இன்று சிஎம் விஜய் சாராக அவர் உயர்ந்திருக்கும் நேரத்தில், அவருடைய ‘சர்கார்’ காலத்தில், இன்று என் முதல் படம் வெளிவருகிறது. அதற்கான வாய்ப்பைக் கொடுத்த முருகதாஸ் சாருக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் நான் நன்றி சொல்கிறேன்.

இந்தப் படத்தில் விஜய் சார் ரெஃபரன்ஸ்கள் இருக்கின்றன என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மைதான். ஏனென்றால் நான் அவருடைய ரசிகன். எங்கள் படம் மே 15 வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்