சூரி முதன்மை பாத்திரத்திலும் விஜய்சேதுபதி முக்கியப் பாத்திரத்திலும் நடிக்கும் படம் ‘விடுதலை.’
வெற்றி மாறன் இயக்கும் இந்த படத்துக்கு பெருத்த எதிர்பார்ப்பு இருந்துவரும் நிலையில், படம் இரண்டு பாகங்களாக தயாராவதாகவும், இரண்டு பாகங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ உதயநிதி வழங்குகிறார் எனவும் படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் பட வெளியீட்டுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2-ம் பாகத்தில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவேண்டியுள்ளதாக தெரிவிக்கிறது படக்குழு. தற்போது சிறுமலை, கொடைக்கானலில் விடுதலை 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
சமீபத்தில் அமைக்கப்பட்ட 10-கோடி மதிப்பிலான ரயில் மற்றும் ரயில்வே பாலத்தின் செட் இப்படத்தின் பிரமாண்டத்தை கூட்டியுள்ளது. ரயில் பெட்டிகள் மற்றும் பாலம் ஆகியவை அச்சு அசலாக தோற்றமளிக்க, பாலம் மற்றும் ரயிலின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அதே பொருட்களைக் கொண்டு இந்த செட் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சிறுமலையில் ஜாக்கி தலைமையிலான கலைத்துறை ஒரு கிராமத்தினை அச்சு அசலாக உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது, கொடைக்கானலில் ஆக்ஷன் காட்சியை படமாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரபல ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இந்த ஆக்ஷன் காட்சியை அமைக்கிறார். பல்கேரியாவில் இருந்து ஏற்கனவே தமிழகம் வந்திருக்கும் திறமையான ஸ்டண்ட் டீம் இந்த ஆக்ஷன் ப்ளாக்கில் பங்கேற்கிறார்கள்.
விஜய் சேதுபதி, சூரியோடு பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.