சீதா பயணம் சினிமா விமர்சனம்

சீதா ஒரு விசேசத்தில் கலந்து கொள்வதற்காக பயணம் செய்கிறாள். வழியில் சிலரால் அவள் போக வேண்டிய இடத்துக்கு தாமதமாக போகும்படியாகிறது. சரியான நேரத்துக்கு போயிருந்தால் அவளது உயிர் போயிருக்கும். அப்படியொரு சம்பவம் அந்த இடத்தில் நடந்திருக்கிறது.

சீதா, தான் அந்த இடத்துக்கு தாமதமாக தாமதமாக போய்ச்சேர காரணமாக இருந்தவர்களை சந்தித்து நன்றி சொல்ல நினைக்கிறாள். அதற்காக மீண்டும் பயணிக்கிறாள். அந்த பயணத்தில் இளைஞன் ஒருவனும் இணைந்துகொள்ள அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களே ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் இயக்கியிருக்கிற சீதா பயணத்தின் மீதிக்கதை…

சீதாவாக ஐஸ்வர்யா அர்ஜுன். மனதை ஆக்கிரமிக்கிற அளவுக்கு இல்லாவிட்டாலும் கதைக்கேற்றபடி தன்னால் இயன்றளவு நல்லவிதமாகவே நடித்திருக்கிறார்.

ஐஸ்வர்யாவுடன் கார் பயணத்தில் தொற்றிக்கொள்வதிலிருந்து பின்னர் அவர் மனதையும் பற்றிக் கொள்வது வரை இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார் நிரஞ்சன்.

பாஸிடிவ் வைப்ரேஷனுக்கு கேரண்டி தருகிறார் பிரகாஷ்ராஜ். கேமியோ’வாக எட்டிப் பார்க்கிற ஆக்சன் கிங்கின் கதாபாத்திரமும் நடிப்பும் அசத்தல்.

சத்யராஜ், கோவை சரளா, பிரீத்தி சதி, சரண்ஸ்ரீ ஹனுமந்த், நிவா, மணி சந்தனா, செளமித்ரா, ஷஹஸ்ரா, ராஜ்குமார், சஞ்சய், நாகமகேஷ், முரளி என இன்னபிறரின் பங்களிப்பு நேர்த்தி.

அனுப் ரூபன்ஸ் இசையில் பாடல்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை; குறை சொல்லும்படியும் இல்லை. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜி பாலமுருகனின் ஒளிப்பதிவு பயணம் சார்ந்த கதைக்கேற்றபடி அமைந்திருக்கிறது.

தனித்துவமான கதையை யோசித்து உருவாக்கிய இயக்குநர் திரைக்கதையிலும் அந்த தனித்துவத்தை தக்க வைத்திருந்தால் சீதாவின் பயணத்தை ரசிக்க ஆடியன்ஸ் கூட்டம் கூட்டமாக இணைந்திருப்பார்கள்.

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here