நாட்டுக்கு நல்லது செய்வதை கடமையாக கொண்டவர்கள், சதிகாரர்களாக மாறும்போது இளைஞர் படையொன்று மக்களைக் காப்பாற்றும் ‘சேவகர்’களாக மாறுகிற கதை.
விஜய் இளைஞர். ஒருநாள் மருத்துவ முகாமில் மக்களுக்கு உறுதுணையாக களப் பணியாற்றுகிறார். இன்னொரு நாள் நண்பர்களோடு சேர்ந்து தெருவைப் பெருக்கி சுத்தம் செய்கிறார். அதிலிருந்து அவர் நல்லவர்; மக்கள் நலப் பணிகளில் ஆர்வமுள்ளவர் என்பது தெரிகிறது. அந்த நல்லவரை எம் எல் ஏ ஒருவர் தேடி வந்து உன்னை ஒழித்து விடுவேன் என்கிற ரேஞ்சுக்கு மிரட்டுகிறார். அமைச்சர் ஒருவர், குற்றங்கள் செய்து சட்டப்படி தண்டனை அனுபவித்து வரும் நபர்களை வெளியில் அழைத்து வந்து விஜய்யை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச் போடுகிறார். போலீஸ் உயரதிகாரி ஒருவர் விஜய்யை எதிரியாக நினைக்கிறார்; அவரை எதுவும் செய்யமுடியாமல் போகவே அவரது குடும்பத்தினரை கொடுமைப் படுத்துகிறார்.
இத்தனைப் பேரின் எதிர்ப்பையும் சம்பாதிக்கிற அளவுக்கு விஜய் செய்த குற்றம் என்ன? அவரை அழிக்க நினைத்தவர்களை அவர் என்ன செய்தார்? என்பதற்கான பதில்கள்தான் திரைக்கதை… இயக்கம் சந்தோஷ் கோபிநாத்
விஜய்யாக பிரஜின். தாடியும் மீசையுமாக முரட்டுத்தனமாக இருப்பவர் எம் எல் ஏ. மீது ஆக்ரோஷம் காட்டும்போதும், அமைச்சரை எதிர்த்து நிற்கும்போதும் அதே முரட்டுத்தனத்தை வெளிப்படுத்தி தன் பாத்திரத்தை கம்பீரமாக்கியிருக்கிறார்.
சினிமாவில் அமைச்சர் என்றாலே மனிதாபிமானமற்றவராகத்தான் இருப்பார்; தன்னையும் தனது பதவியையும் காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் போவார். அதை அப்படியே செய்திருக்கிறார் அமைச்சராக வருகிற ஆடுகளம் நரேன்.
கதாநாயகன் என ஒருவன் இருந்தால் கதாநாயகி என ஓருவர் இல்லாமலா? பளபளப்பும் தளதளப்புமாக ஷகானா என்பவர் இருக்கிறார். வருகிற சில காட்சிகளில் அவர் தருகிற நடிப்புக்கு பாஸ்மார்க் போடலாம்.
போலீஸ் உயரதிகாரியாக போஸ் வெங்கட். ‘நீ யாரா வேணும்னாலும் இரு; தப்பு செய்தா குற்றவாளிதான், தண்டனைக்குரியவன்தான்’ என்ற கொள்கையோடு விரைப்பும் முறைப்புமாக தேர்ந்த நடிப்பை பரிமாறியிருக்கிறார்.
மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ், ஹீமா சங்கரி, ரூபா, சுனில், பாலு, ஷாஜி கிருஷ்ணா, சாய் சங்கர், ஜிஷ்னு ஜித், மனோ, ஜமீன்குமார், ஷர்புதீன், சந்துரு, ராஜ்குமார் என இன்னபிற நடிகர் நடிகைகள் கச்சிதமான நடிப்பால் கதையோட்டத்தில் கலந்திருக்கிறார்கள். அவர்களில் மலையாள முகங்கள் அதிகமுண்டு என்பது விசேஷச் செய்தி. அதற்கான அவசியம் என்ன என்பது கேள்விக்குறி.
‘வா வா தமிழா’ என்ற ஹீரோவுக்கான அறிமுகப் பாடலில் புத்துணர்ச்சி தந்திருக்கும் இசையமைப்பாளர் ஆர் டி மோகன் மற்ற பாடல்களில் இதம் தர முயற்சித்திருக்கிறார். பின்னணி இசையில் குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை.
பிரதீப் நாயரின் ஒளிப்பதிவில் எளிமை தெரிகிறது.
அநியாயம் செய்வதை பொழுதுபோக்காக வைத்திருக்கிற கேடுகெட்டவர்களை தேடிப்பிடித்து சுளுக்கெடுக்கிர கதாநாயகன் என்ற வழக்கமான ஒன்லைனில் கதையை யோசித்த இயக்குநர், காட்சிகளில் புதுமையை சேர்த்திருந்தால் தியேட்டர்களில் ரசிகர்களைக் குவித்திருக்கலாம்.
சேவகர் _ செய்நேர்த்தியில் தடுமாறினாலும் செயலில் வல்லவர்!