காதல் கதை, அம்மா மகன் சென்டிமென்ட் கதை, காமெடி கதை, அமானுஷ்ய கதை என எல்லாவற்றையும் ஒரே படத்தில் கலந்துகட்டி பரிமாற ஆசைப்பட்டிருக்கிறார் படத்தின் இயக்குநர் செல்லக்குட்டி. அதன் பலனாக கருவாகி உருவாகியிருக்கிறாள் ‘சாரா.’
சிவில் என்ஜினியரான இளம்பெண் சாரா தன்னுடன் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞனை ஆறு வருடங்களாக காதலிக்கிறாள். வீட்டார் சம்மதத்துடன் கல்யாணத்துக்கு ஏற்பாடாகிறது. அந்த ஏற்பாட்டில் பல தடைகள் உருவாகிறது. சாராவின் பெற்றோர் மனம் உடைந்து போகிறார்கள்.
இது ஒரு பக்கமிருக்க, சாராவின் பள்ளிப் பருவ நண்பனின் அம்மாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அந்த அம்மா ‘சாராவை அழைத்து வந்தால் என் உயிரை காப்பாற்றி விடலாம்’ என்கிறார். இன்னும் 2 நாளில் கல்யாணத்தை வைத்துக்கொண்டு சாராவால் நண்பனின் அம்மாவை போய் பார்க்க முடியாத நிலைமை. அதனால் அவள் வர முடியாது என மறுக்க, அவன் வெறிபிடித்தவனாக மாறுகிறான். அம்மாவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராகிறான்.
கதையின் நகர்வு இப்படியாக இருக்க, அவனிடமிருந்து சாராவால் தப்பிக்க முடிந்ததா? அவளது திருமணத்தில் தொடர்ந்து தடைகள் ஏற்படுவது ஏன்? அந்த தடைகள் நீங்கியதா? திருமணம் நடந்ததா? உடல்நிலை சரியில்லாமலிருக்கும் நண்பனின் அம்மாவுக்கும் சாராவுக்கும் என்ன சம்பந்தம்? அந்த அம்மா உயிர் பிழைத்தாரா? என்பதையெல்லாம் அடுத்தடுத்த காட்சிகளில் பார்க்கிறோம்…
கதையின் நாயகி சாராவாக சாக்ஷி அகர்வால். தொப்புள் தெரிய சேலை அணிகிறார்; காதலன் முத்தத்துக்காக ஏங்கித் தவிக்கும்போது அதெல்லாம் கப்புள் ஆன பிறகுதான் என்று ஒதுங்கிப் போகிறார். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக வீட்டில் எல்லோரும் தயாராகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் புராகஜ்ட் ஒர்க் முடிப்பதற்காக ஆஃபீஸில் சின்சியராக வேலை பார்க்கிறார். சிறுவயது நண்பனின் கொடூர தாக்குதலில் இரத்தம் சிந்துகிறார். திருப்பித் தாக்கும்போது ஆத்திரத்தின் உச்சத்தைக் காட்டுகிறார். பிளாஷ்பேக்கில் பள்ளிச் சீருடையிலும் வருகிறார். மென்மை, தன்மை, உக்கிரம் என உணர்வுகளைப் பிரதிபலித்திருப்பது காட்சிகளுக்குப் பொருத்தமாக இருக்கிறது.
காதலனாக விஜய் விஷ்வா. திருமணத்துக்கு உருவாகிற தடைகளைப் பற்றி அவருக்கு தெரியாமலிருக்காது. ஆனால், அந்த பாதிப்பு எதுவுமின்றி அவர் சாராடன் கொஞ்சிக் கொண்டும், சில்மிசம் செய்ய சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டும் பொழுதைக் கடத்துவதை எப்படி ஏற்றுக்கொள்வதென தெரியவில்லை. எந்தவொரு தாக்கத்தையும் தராத கதாபாத்திரம்.
தொழில் சம்பந்தப்பட்ட விரோதத்தில் சாராவின் கல்யாணத்தை நிறுத்த முயற்சிக்கும் நபராக சண்டைப் பயிற்சியாளர் ‘மிரட்டல்’ செல்வா. தன் பெயரிலிருக்கும் அடைமொழிக்கேற்ப மிரட்டலாக ஒன்றிரண்டு விஷயங்களைச் செய்கிறார். சாராவின் கனவில் சாமியாராக வரும்போது அதிர வைக்கிறார்.
படத்தை இயக்கியிருக்கிற செல்லக்குட்டி சாராவின் நண்பனாக வந்து தாய்ப்பாசம் என்ற பெயரில் அநியாய அக்கிரமங்களை ஆடியன்ஸை வெறுப்பேற்றும்படி செய்கிறார். வசனங்களை ஹை டெஸிபலில் கத்திக் கத்தி பேசுவதும் எரிச்சலூட்டுகிறது. ஜட்டி போட்டு அதன் மீது கோவணம் போல் கட்டிக் கொண்டு தொடை தெரிய ஆட்டமும் போடுகிறார். இடைவேளை வரை காமெடி என்ற பெயரிலும் ஏதேதோ செய்கிறார். எதுவுமே ஈர்க்கவில்லை.
ரோபோ சங்கர் குடிகார செக்யூரிட்டியாக வருகிறார்; அவரது நகைச்சுவையும் அவ்வளவாக கலகலப்பூட்டவில்லை. அவர் ஒருசில நிமிடங்கள் வில்லனாகவும் மாறுகிறார். யோகிபாபுவும் படத்தில் இருக்கிறார்; அவருக்கு வழங்கப்பட்ட காட்சிகளும் சிரிப்பைத் தூண்டவில்லை.
பொன்வண்ணன், சாராவின் அப்பாவாக தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்திருக்கிறார். அஸ்மிதா வழக்கம்போல் குத்தாட்டம் போடாமல், போலீஸ் அதிகாரியாக சில தருணங்களில் அட்டனன்ஸ் போடுகிறார்.
ஒரு வகையில் இது அம்மா மகன் சென்டிமென்ட் படம். அம்மாவாக கனிவான முகத்தையும் கச்சிதமான நடிப்பையும் தந்திருப்பவர் அம்பிகா.
கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை, பாடல்கள், ஜெ லெஷ்மணின் ஒளிப்பதிவு கதையோட்டத்துக்கு போதுமானதாக இருக்கிறது.
சீனியர் நடிகர் நடிகைகள் கிடைத்தும் அவர்களை சரிவர பயன்படுத்தாததால், மனம்போன போக்கில் பயணிக்கும் கதையால், சுவாரஸ்யமில்லாத திரைக்கதையால் ‘எடுத்திருக்க வேண்டாம் இவ்வளவு போரா’ என சொல்ல வைக்கிறாள் சாரா!
-சு.கணேஷ்குமார்

