சாவீ (சாவு வீடு) சினிமா விமர்சனம்

ஒரு மரணமும் அதை சார்ந்த மர்மங்களுமாக டார்க் காமெடியில் பரபரப்பு கூட்டும் ‘சாவீ.’

இரவு நேரம்; ஒருவர் இறந்துபோகிறார். இறந்தவரின் மகளைக் காதலிக்கும் இளைஞனிடம், சடலத்தை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் தூங்கி விடுகிறார்கள். உலகத்தில் எங்குமே இப்படி ஒரு வினோதம் நடக்காது. ஆனால், நடக்கிறது.

ஒரு கட்டத்தில் அவனும் தூங்கிவிட, சடலம் காணாது போகிறது. சடலத்தை யாராவது கடத்திக் கொண்டு போயிருக்கலாம் என்ற கோணத்தில் துவங்குகிறது போலீஸ் விசாரணை. சடலத்துக்கு என்னவானது என்பது கிளைமாக்ஸ்…

சடலம் காணாமல் போன விவகாரத்தில் தன் காதலி உட்பட எல்லோருக்கும் தன் மீது சந்தேகம் உருவாக, தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபிக்க படாதபாடு படுகிறபோது நாயகன் உதய் தீப்பின் நடிப்பு துடிப்பாக இருக்கிறது, காதல் காட்சிகளில் அந்த துடிப்பின் சதவிகிதம் சற்று உயர்கிறது.

நாயகி கவிதா சுரேஷுக்கு களையான முகம்; செழுமையும் இளமையும் நிரம்பிய தேகம். காதல், தவிப்பு, தெளிவு என தனக்கான காட்சிகளை இயல்பான நடிப்பால் நிரப்பியிருக்கிற அவரது விழிகள் கொள்ளை அழகு.

சடலத்தை யார் தூக்கிப் போயிருப்பார்கள் என்பதை கண்டுபிடிப்பதில் வேகத்தையும் விவேகத்தையும் கலந்து, காவல்துறை உயரதிகாரிக்கான கம்பீரத்தை கச்சிதமாக காட்டியிருக்கிறார் ஆதேஷ்பாலா. சடலம் காணாது போனதற்கு அவரும் காரணமாக இருக்கலாம் என சம்பந்தப்பட்ட வீட்டார் சந்தேகப்பட அவரது நடவடிக்கைகள் மீது ஆடியன்ஸின் கவனம் குவிகிறது.

மிச்சமுள்ள பிரதான கதாபாத்திரங்களைச் சுமந்திருப்பவர்களும், இன்னபிற கேரக்டர்களில் வருபவர்களும் குறையில்லாத நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் இந்த கதைக்களத்துக்கு இது போதும் என்ற அளவில் பங்காற்றியிருக்கிறார்கள்.

சடலத்தை பொறுப்பாக பார்த்துக்கொள்ள நியமிக்கப்படுகிற இளைஞர், இறந்த நபரை சிறுவயதிலிருந்து வெறுப்பவர்; அவர் தன் அப்பாவைக் கொன்றவர் என நம்பிக் கொண்டிருப்பவர். அந்த நம்பிக்கைக்கு வலுவான காரணம் இருக்கிறது. அப்படிப்பட்டவரை நம்பி சடலத்தை ஒப்படைத்துவிட்டு அந்த குடும்பமே அசந்து தூங்குகிறது என்பதை ஏற்க முடியவில்லை.

கதாநாயகன் கனவு காண்கிறபடி மரணங்கள் நடப்பதாக கதையை துவங்கி ஆர்வத்தை தூண்டிய இயக்குநர் ஆண்டன் அஜித், அந்த கனவை மையமாக வைத்தே திரைக்கதையில் விறுவிறுப்பு மசாலா சேர்த்திருக்கலாம். அதை கைவிட்டு சஸ்பென்ஸ் என்ற பெயரில் கழுத்தைச் சுற்றி மூக்கைத் தொடுகிறார்.

இப்படி சிலபல குறைகள் தென்பட்டாலும், சடலத்துக்கு என்னவாகியிருக்கும் என்பதை நிறைவுக் காட்சி வரை யூகிக்க முடியாதபடி கதையை நகர்த்தியிருப்பதும்; யாரும் எதிர்பாராத அந்த டிவிஸ்ட்டும் படத்தின் பலமாகியிருக்கிறது.

-சு.கணேஷ்குமார்

 

REVIEW OVERVIEW
சாவீ (சாவு வீடு) சினிமா விமர்சனம்
Previous articleசாரா சினிமா விமர்சனம்
Next articleஅங்கம்மாள் சினிமா விமர்சனம்
saavee-movie-reviewஒரு மரணமும் அதை சார்ந்த மர்மங்களுமாக டார்க் காமெடியில் பரபரப்பு கூட்டும் 'சாவீ.' இரவு நேரம்; ஒருவர் இறந்துபோகிறார். இறந்தவரின் மகளைக் காதலிக்கும் இளைஞனிடம், சடலத்தை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் தூங்கி விடுகிறார்கள். உலகத்தில் எங்குமே இப்படி ஒரு வினோதம் நடக்காது. ஆனால், நடக்கிறது. ஒரு கட்டத்தில் அவனும் தூங்கிவிட, சடலம் காணாது போகிறது. சடலத்தை யாராவது கடத்திக்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here