‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை‘ சினிமா விமர்சனம்
திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளைக் குவித்து வருகிற படம்.
நிஜமான காதலும் சந்தர்ப்ப சூழலால் மோதலும் என்ற வழக்கமான கதை… உணர்வு, உணர்ச்சி என சென்டிமென்ட் மசாலாக்கள் தூக்கலாய் சேர்த்த திரைக்கதை…
எஃப்.எம்.மில் தொகுப்பாளினியாக இருக்கும் அந்த இளம்பெண் காட்டுப் பறவைகளின் ஓசை, அருவிகளின் இரைச்சல் என பலவற்றை அதனதன் இயல்பு மாறாமல் பதிவு செய்யும் பணியில் ஈடுபடுகிறார். அவருக்கு, ‘ஒலி’ப்பதிவு தொழில்நுட்பம் தெரிந்த அந்த இளைஞன் உதவுகிறான். இருவரும் பணி நிமித்தம் காட்டுக்குள் அலைந்து திரிகிறார்கள். நெருங்கிக் கிறங்கி அணைத்துக் கொண்டு உறங்குகிறார்கள். அந்த பெண், தானே முன்வந்து அவனது உடலோடு கலக்கிறாள்.
தனக்கானவள், பணிச்சூழலைக் காரணம் காட்டி வேறொரு ஆணுடன் பழகுவது பிடிக்காமல் அந்த இளைஞன் கோபத்தில் கொந்தளிக்கிறான். ‘நான் அப்படித்தான் இருப்பேன்’ என கெத்து காட்டுகிறாள் அவள். மனதளவில் செத்து போகிறான் அவன்.
அவர்களுக்குள் வீசத் தொடங்குகிறது கருத்து வேறுபாடு என்ற புயல். அதன் வேகத்தை அதிகரிப்பதுபோல் அந்த நேரமாகப் பார்த்து அவளைப் பற்றிய இன்னொரு அதிர்ச்சியான தகவல் கிடைக்க, ‘நாம் பிரிவதே நல்லது என்கிறான் அவன். சமாதானப்படுத்த முயற்சிக்கிறாள் அவள்.
தவறு யார் மீது? அந்த அதிர்ச்சியான தகவல் என்ன? அவர்களது காதல் என்னவானது? தெரிந்துகொள்ளும்போது சக்கரை புன்னகைக்கு விழுகிறது ஃபுல்ஸ்டாப்… இயக்கம் மகேஷ் பத்மநாபன்
நாயகன் ருத்ரா லட்சணமாக இருக்கிறார். வசன உச்சரிப்பில் லேசாக நடிகர் மம்முட்டி எட்டிப் பார்க்கிறார். காதலி வற்புறுத்தியதால் ஜாலியாக குடிக்க ஆரம்பித்து, காதலி கசந்தபின் குடிப்பதையே ஜோலியாக்கிக் கொள்கிற அக்மார்க் அப்பாவி பாத்திரம். அதற்கு அவரது முக’பாவம்’ ஒத்துழைக்கிறது. (இந்த படத்திற்கே சில திரைப்பட விழாக்கள் மூலம் சிறந்த நடிகராக தேர்வாகியிருக்கிறாராம்.) அடுத்தடுத்து அழுத்தமான கதைகளில் நடிக்கிற பட்சத்தில் உயரிய விருதுகளை வசப்படுத்த வாய்ப்புகள் அதிகம்!
வெளிநாட்டில் பிறந்து நவீன கலாச்சாரத்தில் ஊறிப்போன இளம்பெண் பாத்திரத்துக்கு நாயகி சுபிக்ஷா நல்ல பொருத்தம். நிமிர்ந்த நடையும் திமிரும் இளமையுமாய் வருகிற அவர் காதலனை வற்புறுத்தி சேர்ந்துக் குடிப்பது, காதலன் தன்னைப் புரிந்துகொள்ளாதபோது மெல்லிய சோகம் சுமந்து துடிப்பது என நிறைவான நடிப்பால் ஈர்க்கிறார்.
நாயகனுக்கு நண்பனாக ‘ராட்சசன்’ வினோத் சாகர். சிறிய வேடத்தில் வந்தாலும் அவரது அச்சுப்பிச்சு அலப்பரை ரகளை. மனிதர் தொடர்ந்து காமெடியன் வேடத்துக்கு முயற்சிக்கலாம். நல்ல எதிர்காலம் நிச்சயம்!
சுப்புலட்சுமி பாட்டியின் (லெஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘அம்மிணி’ படத்தில் வருவாரே அவர்) கதாபாத்திரம் கதைக்கு அத்தனை அவசியமில்லாதது போல் தோன்றினாலும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. மற்ற நடிகர், நடிகைகள் தேர்வும், அவர்களின் நடிப்பும் கச்சிதம்!
இனிமைக்கு ‘தூயவனே தூயவனே’, இதத்துக்கு ‘பட்டாம்பூச்சி போல’, உற்சாகத்துக்கு ‘நான்தான் கதிரு’, சோகத்தைப் பிழிய ‘எனக்கோ நீயும் இல்லை’ என பாடல்களில் வெரைட்டி காட்டியிருக்கிறார் ராஜேஷ் அப்புக்குட்டன்.
காடு, மலை, அருவி என இயற்கையின் அழகை சுற்றிச் சுழன்று சுருட்டி வந்து மனதை நிறைக்கிறது பிஜு விஸ்வநாத்தின் கேமரா.
திரைக்கதையோட்டத்தில் சிலபல குறைகள் இருந்தாலும் மென்மையான காதல் கதை விரும்பிகளுக்கு சக்கரை புன்னகை சலிக்காத சாக்லேட்!