‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ சினிமா விமர்சனம்

‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ கதையின் ஆன்ட்ராய்ட் வெர்ஷன்; ‘எந்திரன்’ டச்சில் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்.’ பட்டன் போன் தரத்தில் ஸ்மார்ட் போன்!

முரட்டு சிங்கிள்களின் வாழ்வை வசந்தமாக்க, அவர்களின் தனிமையை இனிமையாக்க, அவர்களிடம் மென்மனதுடன் பேசிப்பழக மென்பொருளில் ஒரு இளம்பெண்ணை உருவாக்குகிறார் சாப்ட்வேர் தொழில்நுட்ப சாராம்சங்களை கரைத்துக் குடித்த ஷாரா.

அப்படி அவர் உருவாக்கிய அந்த மென்பொருள் நிறுவப்பட்ட மொபைல் போன், ‘திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குனு வந்துச்சாம் யோகம்’ என்பதுபோல், உணவு விநியோகம் செய்கிற பணியிலிருக்கிற அந்த இளைஞன் கையில் சிக்குகிறது. அவன் அந்த போனிலிருக்கும் பெண்ணின் அறிவியல் தொழில்நுட்ப மூளையைப் பயன்படுத்தி சூதாட்டங்களில் ஜெயிக்கிறான்; பெரும் பணக்காரராகிறான்.

கோடிக்கணக்கில் பேங்க் பேலன்ஸ், ஃபாரின் கார் அதுஇதுவென சொகுசு வாழ்க்கையில் மிதக்கிறான். காதலியோடு பழக்கம், நெருக்கம் என அவனது நாட்கள் உற்சாகமாய் நகர்கிறது.

ஒரு கட்டத்தில் (எந்திரன் படத்தில் ரோபோவுக்கு ஐஸ்வர்யா ராய் மீது காதல் வருவது போல) மொபைல் சாப்ட்வேரில் இருக்கிற அந்த இளம்பெண்ணுக்கு நாயகன் மீது காதல் வருகிறது. அந்த காதலை அவன் மறுக்க அந்த சாப்ட்வேர் அழகி அதுவரையிலான அந்த இளைஞனின் சொகுசு வாழ்க்கைக்கும், அந்த இளைஞனின் நிஜ வாழ்க்கையில் தொடர்கிற காதலுக்கும் ‘ஆப்’கள் மூலம் ஆப்பு வைக்கிறாள்.

சேமித்த பணம், வாங்கிய கார் என அனைத்தும் பறிபோக, காதலியும் விலகும் பரிதாப சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான்அவன். அதையடுத்து என்ன நடக்கிறது என்பது மிச்சசொச்ச கதையோட்டம்.

சிங்கிள் ஷங்கராக சிவா. நடிப்பிலும் டயலாக் டெலிவரியிலும் எந்த மாற்றமும் ஏற்றமும் இல்லை. தனக்கு எது வருமோ அதை ரசிக்கும்படி செய்திருக்கிறார்.

ஸ்மார்ட் போன் சிம்ரனாக மேகா ஆகாஷ். படத்தின் எந்தவொரு கதாபாத்திரங்களுடனும் நேரடி தொடர்பின்றி, மொபைல் போனில் மட்டுமே வந்துபோகிற, காதல் கோபம் உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிற வித்தியாசமான பாத்திரத்தில் கதைக்குத் தேவையானதை நேர்த்தியாக செய்திருக்கிறார்.

நாயகி அஞ்சு குரியனுக்கு ஹீரோவின் வழக்கமான காதலி வேடம். மற்றபடி பெரிதாய் வேலையில்லை.

ஹீரோவின் நண்பனாக மாகாபா, தொழில்நுட்ப ஆராய்ச்சி வல்லுநராக ஷாரா, அவரது பாஸாக பக்ஸ் என இன்னபிற கதாபாத்திரங்களின் வருகிறவர்களின் நடிப்பில் குறையில்லை.

சபலப் பேர்வழியாக வந்து கிச்சுக்கிச்சு மூட்டுகிறார் பாடகர் மனோ.

நாயகனின் முன்னாள் காதலி, நண்பனின் இந்நாள் மனைவியாக இருப்பதும் அவள் மீண்டும் அவன் மீது காதல் வயப்படுவதுமான ‘ஏ’டாகூட கதையமைப்பு ஏகத்துக்கும் வெறுப்பேற்றல். நாயகன் கண்ணியத்தின் எல்லை தாண்டாதவாறு திரைக்கதையமைத்திருப்பது கொஞ்சமே கொஞ்சம் ஆறுதல்!

காலத்துக்கேற்ற கதைக்கருவை எடுத்துக் கொண்டு அதை தன்னால் இயன்றவரை சுவாரஸ்யமாக தர முயற்சித்திருக்கிற இயக்குநர் விக்னேஷ் ஷாவுக்கு பாராட்டுக்கள்.

எழுத்தாளர் சுஜாதாவிடம் இந்த படத்தின் ஒன்லைனை கொடுத்திருந்தால் திரைக்கதை, வசனத்தில் பிரமாதப்படுத்தியிருப்பாரே என்ற நினைப்பு வராமலில்லை!

 

REVIEW OVERVIEW
'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்' சினிமா விமர்சனம்
Previous articleInspired by the actual files of Father Gabriele Amorth, Chief Exorcist of the Vatican, the trailer for ‘The Pope’s Exorcist’ is out!
Next article1st Culture Working Group Meeting Begins in Khajuraho, Importance of Culture to Reshape Global Creative Economy was Highlighted!
single-shankarum-smartphone-simranum-movie-review'அலாவுதீனும் அற்புத விளக்கும்' கதையின் ஆன்ட்ராய்ட் வெர்ஷன்; 'எந்திரன்' டச்சில் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்.' பட்டன் போன் தரத்தில் ஸ்மார்ட் போன்! முரட்டு சிங்கிள்களின் வாழ்வை வசந்தமாக்க, அவர்களின் தனிமையை இனிமையாக்க, அவர்களிடம் மென்மனதுடன் பேசிப்பழக மென்பொருளில் ஒரு இளம்பெண்ணை உருவாக்குகிறார் சாப்ட்வேர் தொழில்நுட்ப சாராம்சங்களை கரைத்துக் குடித்த ஷாரா. அப்படி அவர் உருவாக்கிய அந்த மென்பொருள் நிறுவப்பட்ட மொபைல் போன்,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here