ஒரே ஆண் விதவிதமாக ஏமாற்றி பல பெண்களை திருமணம் செய்த சம்பவங்கள் பற்றி, ஒரே பெண் பலவிதமாக ஏமாற்றி பல ஆண்களைத் திருமணம் செய்து சட்டத்தின் பிடியில் சிக்கியது பற்றி செய்திகளில் படித்திருக்கிறோம்; பார்த்திருக்கிறோம். அப்படியான சம்பவங்களை மையப்படுத்தி, மெல்லிய காதலையும் இணைத்துப் பிணைத்து உருவாகியிருக்கும் படம்.
போலீஸ் உயரதிகாரி அர்ஜுனிடம் அவரது இரண்டு நண்பர்கள், ‘நீதான் அந்த இரு கொலைகளையும் செய்தாய் என்பது எங்களுக்குத் தெரியும்’ என்கிறார்கள். ஆரம்பத்தில் ‘இல்லை’ என மறுக்கும் அர்ஜுன், சிறிது நேரம் கழித்து ‘ஆம், நான்தான் செய்தேன்’ என்று ஒத்துக்கொண்டு, அதற்கான காரணத்தை விளக்குகிறார். அவர் சொல்வதெல்லாம் கதையின் பரபரப்பான பகுதிகளாக விரிய, விதவிதமாக நடக்கும் திருமண மோசடிகளால் அவருக்கு நேர்ந்த பாதிப்புகள், அதற்கு பழிவாங்கும் விதமாக அரங்கேறிய சம்பவங்கள் என ஓடி முடிகிறது ‘சிவ சம்போ’வின் ஸ்க்ரீன்பிளே.
அர்ஜுனாக தில் நட்ராஜ். சினிமா ஹீரோக்களுக்கான இலக்கணம் ஏதுமின்றி கிராமங்களில் சுற்றித்திரியும் உடலுழைப்புத் தொழிலாளர்களில் ஒருவர் போலிருக்கும் அவர் காதல், கோபம், பழிவாங்கும் வெறி என கதைக்குத் தேவையான உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். போலீஸ் உயரதிகாரிக்கான உடற்கட்டும் கம்பீரமும் தென்படாத அவரது நடிப்புக்கு மதிப்பெண் கொடுப்பதாக இருந்தால் பாஸ்மார்க்கை தாண்ட வாய்ப்பில்லை.
ஹீரோ நல்லவர்தான் என்றாலும், நடக்கும் சில சம்பவங்களால் ஹீரோயின் பார்வைக்கு அவர் மோசமானவராகவே தெரிகிறார். அப்படி அவர் தெரிகிற காட்சிகளும், அவள் தெரிந்துகொள்கிற விதமும் ரசிக்கும்படியிருக்க ஹீரோயினாக வருகிற ஷிவானியின் நடிப்பு அழகுணர்ச்சியைக் கூட்டுகிறது. கிளைமாக்ஸில், தன் வாழ்க்கையைப் பாழாக்கி, தன்னைப் போலவே ஏராளமான பெண்களையும் சீரழித்த கும்பலை சம்ஹாரம் செய்யும்போது நடிப்பின் பரிமாணத்தை மாற்றிக்கொண்டு அதிரடி அட்டகாசமும் செய்கிறார்.
படத்தை இயக்கியிருக்கிற பகவதி பாலா, திருமண மோசடி மன்னனாக சின்னச்சின்ன கெட்டப் மாற்றங்களில் வருகிறார். மிதமான உருட்டல் மிரட்டலோடு பங்களிப்பை முடித்துக் கொள்கிறார். அவருடைய மோசடி குழுவில் அங்கம் வகிக்கிற பெண்கள் ரவுடியிஸத்தில் லெப்ட் ரைட் வாங்குகிறார்கள். காமவெறி அமைச்சராக வருகிற முதியவரும் கவனம் பெறுகிறார்.
திரும்பிய பக்கமெல்லாம் புதுமுக நடிகர் நடிகைளாகவே இருக்க காமெடி நடிகர்களில் சீனியரான செந்தில் ஒன்றிரண்டு தருணங்களில் எட்டிப் பார்க்கிறார். வில்லனுக்கு உதவி செய்கிற நபராக வந்து கதாநாயகியை அடைத்து வைத்துக்கொண்டு ‘நான் கொடூரமான வில்லன்’ என சொல்லிக் கொள்கிறார். நடிப்பில் அப்படியான கொடூரத்தைக் காணவில்லை.
இமான் அண்ணாச்சி, திருச்சி சாதனாவோடு சேர்ந்து அடி பம்பில் தண்ணீர் வரவைக்கும் காட்சியில் காமெடி குறைவு ‘காம‘டி அதிகம்.
ஏ சி ஜான்பீட்டர் இசையில் ‘சிவசம்போ’ பாடல் பரவசம் தர, ‘திசையெங்கும் கயவர் கூட்டம்’ பாடலில் அனல் பறக்கிறது. ‘குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்’ என்பது பல அம்சங்களில் வெளிப்படும் இந்த படத்தில் ஒளிப்பதிவும் அதை பிரதிபலிக்கிறது.
நாடகத்தனமான காட்சிகள் படத்தின் பலவீனமாக இருந்தாலும், இயக்குநர் பகவதி பாலா திருமணம் சார்ந்த விஷயங்களில் மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டி சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டியிருக்கும் விதம் பலமாகவே இருக்கிறது. அதற்காக படக்குழுவை பாராட்டலாம்.
-சு.கணேஷ்குமார்


