திகிலும் திருப்பமுமாய் விரிகிற சம்பவங்களால், பயக் கதவுகளைத் திறக்கும் சாவி – சிவி!
விளையாட்டு வினையாகிற கதைக்களத்தில் பேராசைக்கு ரிவிட்டு அடிக்கும் ‘சிவி 2.’
அது அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் இருப்பதாக சொல்லப்படுகிற, உள்ளே போனால் உயிரோடு திரும்ப முடியாது என நம்பப்படுகிற படு பிரமாண்டமான பாழடைந்த மருத்துவமனை. அதற்குள் அடர் இருட்டு வேளையில் இளைஞனும் இளைஞியுமாய் எட்டுப் பத்து பேர் டீமாக நுழைகிறார்கள். அங்கு நடக்கும் சம்பவங்களை சோஷியல் மீடியாவில் லைவாக ஒளிபரப்பி கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பது அவர்களின் திட்டம். அதன்படி குழுவினர் பயத்தோடும் பதட்டத்தோடும் மருத்துவமனையின் ஒவ்வொரு அறையாக திறக்கிறார்கள்.
வெளியிலிருந்து அவர்ளை வழிநடத்தி கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிற அந்த டீமின் லீடர், உள்ளே இதுதான் நடக்கும் என ஒன்றை முன்னமே திட்டமிட்டு அதை எதிர்பார்க்க, துளியும் எதிர்பாராத, ஒருவரும் உயிரோடு திரும்ப முடியாதபடியான சம்பவங்கள் அரங்கேறுகின்றன… அலறல்களால் அந்த இடம் ஆட்டம் காண்கிறது!
குழுவினர் எதிர்பார்த்தது என்ன? குழுவின் லீடர் திட்டமிட்டிருந்தது என்ன? உள்ளே நடந்த சம்பவங்களின் பின்னணி என்ன? லைவ் ரிலே மூலம் பணம் சம்பாதிக்கும் முயற்சிக்கு கிடைத்த பலன் என்ன? உள்ளே சிக்கியவர்கள் தப்பிக்க முடிந்ததா? அடுக்கடுக்காய் கேள்விகள், அதற்கெல்லாம் பதில் சொல்ல நீள்கின்றன அடுத்தடுத்த காட்சிகள்…
அசம்பாவிதம் நடந்த இடத்தில் போலீஸாரிடம் சிக்கிய சிலபல தொலைதொடர்பு சாதனங்களை, அந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட கேமராவில், மொபைலில் பதிவாகிய வீடியோக்களை அலசி ஆராயும்போது கிடைக்கிற ஷாக்கான சம்பவங்களை கத்தரித்துக் கத்தரித்து ‘பிளாஷ்பேக்’காக காண்பிப்பது எதிர்பார்ப்பை எகிற வைக்கும் உக்தி!
ஹாரர் படங்களுக்கான அத்தனை அம்சங்களையும் அளவு பார்க்காமல் அள்ளிப் போட்டு அதகளம் செய்திருக்கிறார் இயக்குநர் கே.ஆர். செந்தில்நாதன்
லைவ் ரிலேவில் ஈடுபடும் டீமீன் லீடராக தேஜ். தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் லைவ் ரிலேவில் வியூஸ் ஏற்றி கரண்சியைக் கறப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட கதாபாத்திரம். அந்த குரூர மனபாவத்தை மூச்சிரைக்க இரைக்க முகபாவங்களில் வெளிப்படுத்துவது நேர்த்தி!
வழக்கமான அச்சுப் பிச்சு காமெடிக்கு பைபை சொல்லியிருக்கிறார் சாம்ஸ். அமானுஷ்ய சக்தியைக் கண்டு அவர் அரண்டு மிரண்டு போகிறபோது நமக்கும் தொற்றுகிறது லேசான பயம் !
‘சிவி’யில் கதாநாயகனாக வந்து கவனம் ஈர்த்த யோகிக்கு இந்த பாகம் 2-ல் கெஸ்ட் ரோல். மனிதர் மழை நேரத்து இடியாய் ஒன்றிரண்டு வசனங்களில் கம்பீரம் காட்டுவதோடு சரி!
அமானுஷ்ய சக்திகளிடம் சிக்கித் தவிக்கிற யூத்துகளின் கலவர களேபரக் கூத்துகள், சின்னச்சின்ன காமெடி கலாட்டாக்கள் ஈர்க்கின்றன!
முக்கிய பாத்திரத்தில் ஸ்வாதி, தாடி பாலாஜி, (முல்லை) கோதண்டம் என இன்னபிற நடிகர் நடிகைகளும் உண்டு. அவர்களின் நடிப்பில் குறையில்லை.
எஃப்.எஸ். ஃபைசலின் பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
கதை இருட்டுக்குள்ளேயே சுற்றிச் சுழல, ஒளிப்பதிவாளர் பி.எஸ். சஞ்சயின் கேமராவுக்கு வேலை அதிகம்; நேர்த்தியும் அதிகம்!
நிறைவாய் சிலவரிகள்… சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘சிவி’ படத்தைப் பார்த்தவர்கள் இதை பார்த்தால், ‘அதிலிருந்த ஈர்ப்பு இதில் இல்லையே?’ என்ற எண்ணம் வரலாம். அதை பார்க்காமல் இதை பார்ப்பவர்களுக்கு புதிதாய் ஒரு பேய்ப்படம். எதிர்பார்ப்பு அதிகமில்லாமல் போனால் ஏமாற்றமிருக்காது!