Home விமர்சனம் ஸ்மைல் மேன் சினிமா விமர்சனம்

ஸ்மைல் மேன் சினிமா விமர்சனம்

சரத்குமார் காவல்துறை அதிகாரியாக கெத்து காட்டுகிற படங்களில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. அவரது இந்த 150-வது படத்திலும் அது தொடர்கிறது.

சரத்குமார் சிபிசிஐடி’யில் உயரதிகாரியாக பணிபுரிகிறபோது, ஒருவன் தொடர்ந்து கொலைகள் செய்து சடலங்களின் வாயைக் கிழித்து சிரித்த முகமாக்கி பொதுவெளியில் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறான். ஒரு கட்டத்தில் அந்த தொடர் கொலையாளியை சரத்குமாரின் உயரதிகாரி கொன்று விட்டதாக சொல்லி வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

அதன் பின்னர் சரத்குமார் விபத்தொன்றில் சிக்கி, பணியிலிருந்து விலகியிருக்கிறார். சில வருடங்கள் கடந்த நிலையில் தான் சந்தித்த சீரியல் கில்லர்களைப் பற்றி புத்தகம் எழுதி வெளியிடுகிறார். அந்த புத்தகம் வெளியானதும் பழையபடியே கொலைகள் தொடர்கிறது.

இந்த புது வழக்கை கையிலெடுக்கிற புதிய அதிகாரிகள், கொலைகளைச் செய்வது புதிய நபர் என்கிற கோணத்தில் விசாரணையை துவங்குகிறார்கள். ஆலோசனைக்காக சீரியல் கில்லர் விஷயத்தில் அனுபவமிக்க சரத்குமாரை அணுகுகிறார்கள். அவர், ‘இப்போது கொலைகளைச் செய்வது புதிய நபரல்ல; பழைய நபர்தான்’ என்கிறார்.

கொலைகளைச் செய்வது பழைய நபர்தான் என்றால், சரத்குமாரின் உயரதிகாரி கொன்றது யாரை? சரத்குமாரின் புத்தகம் வெளியானதும் தொடர் கொலைகள் நடப்பதற்கான காரணம் என்ன? என்றெல்லாம் அதிகாரிகள் குழம்பித் தவித்துக் கொண்டிருக்க, கொலைகள் நிற்காமல் தொடர பொதுமக்களிடம் பயம் அதிகரிக்கிறது.

ஒரு கட்டத்தில் விசாரணை அதிகாரிகள் சரத்குமாரையே சந்தேக வட்டத்துக்குள் கொண்டு வருகிறார்கள்.

உண்மையில் சரத்குமார் பணியிலிருந்தபோது நடந்தது என்ன, புதிய தொடர் கொலைகள் விவகாரத்தில் நடப்பது என்ன என்பதற்கான பதில்களை இயக்குநர்கள் ஷ்யாமுன் பிரவீணும் இணைந்து தங்களது விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்கள்.

சரத்குமாரின் இயல்பான தோற்றத்திலேயே கம்பீரம் தொற்றிக் கொண்டிருப்பதால் காவல்துறை அதிகாரி வேடத்திற்கு காலங்காலமாக கச்சிதமான பொருத்தமாக இருக்கிறார். அப்படி பல படங்களில் பார்த்த அதே வழக்கமான நடிப்போடு, அல்சைமர் பிரச்சனைக்கு ஆளானவராக கூடுதல் பங்களிப்பைத் தந்து கவனம் ஈர்க்கிறார்.

வாலிபப் பருவத்தின் வேகம், பணியில் சுறுசுறுப்பு என வலம் வந்து யார் இவர் என கேட்க வைக்கிறார் விசாரணை அதிகாரி அரவிந்தாக வருகிற ஸ்ரீகுமார்.

கதைப்படி கதாநாயகி, கதைநாயகி என்ற வரையறைக்குள் யாருமில்லை. அந்த குறையைப் போக்குகிறார் அதிகாரிகளில் ஒருவராக இளமைத் துடிப்போடு வருகிற சிஜா ரோஸ்.

சிறிய பாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை தந்திருக்கிறார் இனியா.

கலையரசன் ஏற்றிருப்பது மிரட்டலான வேடம். அதை சரியாக செய்திருக்கிறார்.

தேர்ந்த நடிகர் ஹரீஷ் பெராடியை கறிவேப்பிலை போல் பயன்படுத்தி, சந்தர்ப்பங்களின் சீரியஸ்னெஸ் புரியாமல் கிறுக்குத்தனமாக பேசிக் கொண்டிருக்க ராஜ்குமாரை பிடித்துப் போட்டிருக்கிறார்கள்.

சீரியல் கில்லரிடம் மாட்டிக்கொண்டு மிரளும் காட்சிகளில் பதற்றத்தின் சதவிகிதத்தை ஆடியன்ஸுக்கு கடத்தியிருக்கிறது குழந்தை நட்சத்திரம் ஆலியாவின் நடிப்பு.

கவாஸ்கர் அவினாஷின் பின்னணி இசை சில காட்சிகளில் அதிரடியாக வெளிப்பட்டிருப்பதும், விக்ரம் மோகனின் நேர்த்தியான ஒளிப்பதிவும் கதையோட்டத்தின் பலம்கூட்டும் சக்திகளாகியிருக்கிறது.

ஸ்மைல் மேன் _ படமாக்கல் நிறைவு; பயமுறுத்தல் குறைவு!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்