உலகம் முழுக்க பெண்ணாசையால் சரிந்த சாம்ராஜ்யங்கள் எக்கச்சக்கம். அந்த வரலாற்றில் நம்மூர் தொழிலதிபர் அண்ணாச்சி ஒருவருக்கும் இடமுண்டு. அவரது வரலாற்றைத் தழுவி, சினிமாவுக்கேற்றபடி கமர்சியல் மசாலா பூசியிருக்கிறது தம்பி ராமையா, உமாபதி ராமையா கூட்டணி.
கடுமையான உழைப்பால் முன்னேறி, மாபெரும் தொழிலதிபராகிறார் முருக பக்தரான முருகப்ப சென்றாயர். மனைவி குழந்தை என குடும்ப வாழ்க்கையிலும் குறையில்லை. உடலில் வீரியம் குறைந்தாலும் பணத்திமிர் அதிகமாக இருப்பதால் மனைவியைத் தாண்டி இன்னொரு இளம்பெண் பெண் மீது கவனம் திரும்புகிறது. ‘நாம் வணங்கும் முருகனைப் போலவே நமக்கும் இரண்டு தாரம்’ என அத்தோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம்.
ஆசைக்கு அணை போடுவது சாமானிய மக்களாலேயே முடியாத காரியம் என்கிறபோது, கோடிகளில் புரள்பவர் சும்மாயிருப்பாரா? மூன்றாவதாக இன்னொரு இளம் பெண்ணை பார்க்கிறார்; பரவசமாகிறார்; அந்த பெண்ணுடனும் தனது நாட்களை உற்சாகமாக கழிக்கிறார்.
ஒரு கட்டத்துக்கு பின் அந்த உற்சாகம் அத்தனையும் பறிபோகிறது; கொலைப் பழி, சிறை தண்டனை, சொத்துக்கள் இழப்பு என அடுக்கடுக்கான கொடுமைகளை அனுபவிக்கும் நிலைமை.
அவர் அப்படியொரு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதன் பின்னணி என்ன, அந்த நிலையிலிருந்து அவரால் மீண்டு வர முடிந்ததா இல்லையா என்பதை விவரித்து நகர்கிறது அறிமுக இயக்குநர் (தம்பி ராமையாவின் மகன்) உமாபதி ராமையாவின் திரைக்கதை.
தொழிலதிபராக கரன்சியில் மிதக்கும்போது காட்டும் பந்தா, தடம் மாறி தடுமாறி இரண்டாவது மூன்றாவது துணைவிகளுடன் மயங்கிக் கிடக்கும் தருணங்களில் வெளிப்படுத்தும் கிளுகிளுப்பு, மனநலம் பாதித்து பிச்சைக்காரனைவிட கீழ் நிலைக்கு போனபின் பரிதாபமான தோற்ற மாற்றம் என ஏற்ற பாத்திரத்துகேற்ப தம்பி ராமையா தந்திருக்கும் நடிப்பு தரம். தராதரமில்லாமல் நடந்து கொள்வோருக்கு எச்சரிக்கை தருகிற பாடம்!
முருக்கேறி திரிந்த முருகப்பன் மூளை குழம்புவதற்கு காரணமாக இருக்கிற மூன்றாவது செட்டப் ஸ்வேதா உடைகளில் சிக்கனம் காட்டி தனது செழுமையான இளமையைப் பரிமாறுவதில் வள்ளலாக மாறியிருக்க, இரண்டாவது மனைவியாக வருகிற சுபாவும் தன் பங்கிற்கு கிறக்கம் தருகிறார்.
ஆதரவற்றோர் மீது கரிசனம் காட்டுற பணியை பக்குவமாக செய்திருக்கிறார் சமுத்திரகனி.
தம்பி ராமையாவின் முதல் மனைவியாக வருகிற தீபா சங்கருக்கு அழுது புலம்பி, கத்திக் கதறுகிற பல படங்களில் செய்த அதே வழக்கமான வேலைதான்; கத்தல் கதறலின் சதவிகிதத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டிருப்பது ஆறுதல்.
பழ கருப்பையா, ரேஷ்மா பசுபுலேட்டி, பிச்சைக்காரன் மூர்த்தி, டேனியல் அனி போப், விஜே ஆண்ட்ருஸ், பிரவீன் குமார், வெற்றிக்குமரன் என இன்னபிற நடிகர் நடிகைகள் சரியான அளவில் பயன்பட்டிருக்கின்றனர்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வழக்கறிஞராக பவர்ஃபுல் கேரக்டரில் வந்து போகிறார்.
தம்பி ராமையா இசையில் பாடல்கள் பரவாயில்லை’ என்ற உணர்வைத் தர, சாய் தினேஷின்பின்னணி இசையும் கேதார்நாத், கோபிநாத் இருவரின் ஒளிப்பதிவு காட்சிகளின் தேவையை நிறைவு செய்திருக்கிறது.
எளியவர்களுக்கு உழைத்தால் முன்னேறலாம் என்ற நம்பிக்கை தருபவராகவும், சொந்த தொழில் செய்வோருக்கு தொழில் நேர்த்தியினால் தனித்துவம் பெறலாம் என்பதற்கான வழிகாட்டியாகவும் இருந்த ஒருவரைப் பற்றிய கதையில் அவர் தன் முன்னேற்றத்துக்கான படிகளை எப்படி அமைத்துக் கொண்டார் என காட்டாமல் விட்டது குறையென்றாலும், ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினால் அதன் விளைவு எப்படியிருக்கும் என எடுத்துச் சொன்ன விதத்தில் ராஜா கிளி கில்லி!
-சு.கணேஷ்குமார்