உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் உலகளாவிய வசூல் சாதனையுடன் பெருவெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரது ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பும் ஆர்வமும் உருவாகியுள்ளன. 1987-ஆம் ஆண்டு வெளியான க்ளாசிக்கான ‘நாயகன்’ திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குனர் மணிரத்னத்துடன் உலகநாயகன் கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ படத்தில் மீண்டும் இணைகிறார்.
வெற்றிகரமான கலைஞர்கள் பலர் இணைந்து பணியாற்றும் இந்தத் திரைப்படத்தின் நட்சத்திர அணிவகுப்பு ஒவ்வொரு நாளும் மேலும் மெருகேறி வருகிறது. தற்போது நடிகர் சிலம்பரசன் டிஆர் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாக அலையை ஏற்படுத்தியுள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவீஸ், ஆர்.மகேந்திரன், மற்றும் சிவா ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் நடிகர் கூட்டணி, இணையற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் ப்ரசாத்,சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் ஆகிய அற்புதமான கலைஞர்களுடன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்குகிறார்கள்.
இந்தத் திரைப்படத்தின் கதை விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், இதன் டீஸர் மற்றும் கமல்ஹாசனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றன. இந்த படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகவிருக்கிறது.