தங்கலான் சினிமா விமர்சனம்

‘வலிமையானவர்களை எதிர்க்கும் எளிமையானவர்கள்’ என்ற காலங்காலமாய் பார்த்துப் பழகிய கதை. அதை எடுத்துக் கொண்டு சாதி அதுஇதுவென தனது வழக்கமான டெம்ப்ளேட் சங்கதிகளை கலந்துகட்டி, மேக்கிங்கில் ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வையும் தரத்தையும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்துவிட வேண்டும் என்ற இயக்குநர் பா.இரஞ்சித்தின் முயற்சிக்கு பலனாக உருவான ‘தங்கலான்.’

தங்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டு, அதிலேயே தங்களை வேலை செய்ய வைத்து அடிமையாய் நடத்துகிற ஜமீன்தாரை விட்டு விலகி தன்னைச் சார்ந்த மக்களை திரட்டி அழைத்துக் கொண்டு, பூமியிலிருந்து தங்கம் எடுத்துக் கொடுக்கும் வேலைக்காக வெள்ளைக்காரர் ஒருவரிடம் போய் சேர்கிறான் தங்கலான்.

தங்கலானும் அவனுடன் சென்றவர்களும் கஷ்டப்பட்டு தங்கத்தை எடுத்துக் கொடுக்கும் தருணத்தில், அந்த உழைப்புக்கான பங்கைத் தர மறுக்கிறார் வெள்ளைக்காரர். இரு தரப்புக்கும் மோதல் வெடிக்கிறது. வெள்ளைக்காரர் தரப்பு துப்பாக்கிகளுடன் களமிறங்க, தங்கலான் தரப்பு ‘எங்கள் நிலம் எங்கள் உரிமை’ என கத்தி கடப்பாறை என கையிலிருக்கும் ஆயுதங்களுடன் ஆவேசமாய் சீறிப்பாய பூமி முழுக்க ரத்தம், நாலா பக்கமும் உயிரிழந்த உடல்கள்…

இப்படியாய் உண்மையான வரலாற்றுச் சம்பவங்களை கொஞ்சம் கொஞ்சம் தொட்டுக் கொண்டு சூனியக் காரியின் ஆதிக்கம், அவளது ரத்தம் தெறிக்குமிடங்கள் தங்கமாய் மாறுதல் என அதீத கற்பனைகளுடன் பயணித்திருக்கிற திரைக்கதையில்,

எடுத்த தங்கம் யாருக்கு சொந்தமானது? நில மீட்பு போராட்டத்தின் முடிவு என்ன? என்பதே நிறைவுக் காட்சி.

ஆதிவாசி காட்டுமிராண்டிகள் அணிவதைப் போன்ற உடைகளை தாறுமாறாய் சுற்றிக் கொண்டு அழுக்கேறிய மனிதராய் உருமாறியிருக்கிற விக்ரம், உயிரைத் தவிர மற்ற எல்லாவற்றையும் கொடுத்து நடித்திருக்கிறார். உடலை வருத்திக் கொண்டு நடிப்பது அவருக்கும் புதிதில்லை; பார்க்கும் நமக்கும் புதிதில்லை. உண்மையான அர்ப்பணிப்புக்கு பரிசாக விருதுகள் அணிவகுக்கும். அதற்காக சீயானுக்கு இப்போதே சியர்ஸ் சொல்லி வைக்கலாம்.

விக்ரமின் மனைவியாக வருகிற பார்வதி, சூனியக்காரியாக வருகிற மாளவிகா மோகனன், தங்கலானுடன் கடைசிவரை கை கோர்த்து நிற்கிற பசுபதி, மெட்ராஸ் ஹரி என திரும்பிய பக்கமெல்லாம் கூட்டம் கூட்டமாய் நடிகர் நடிகைகள். கிட்டத்தட்ட அத்தனைப் பேரையும் அழுக்கேற்றி, அடித்துத் துவைத்து, புழுதியில் புரட்டி, ரத்தத்தில் உருட்டி என வாட்டி வதைத்திருக்கிறது திரைக்கதை.

இசை அசுரன் என்ற அடைமொழி மீண்டுமொருமுறை உயிர் தரும் விதமாக பின்னணி இசையில் அசுரத்தனமான உழைப்பைக் கொட்டியிருக்கிற ஜீ வி பிரகாஷ் பாடல்களிலும் முத்திரை பதித்திருக்கிறார்.

கலை இயக்குநரின் குழு, சில நூற்றாண்டுகள் முன் நடக்கும் கதைக்கேற்ற களத்தை உருவாக்க பெரியளவில் பங்காற்றியிருக்கிறது.

கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு உச்சபட்ச தரம்.

தான் நினைத்தபடியே ஹாலிவுட் படங்களைப் பார்ப்பது போன்ற உணர்வை சில காட்சிகளில் தந்திருக்கிற இயக்குநர் ரஞ்சித்,

தெளிவற்ற கதையோட்டம், அதீத கற்பனை, தேவையற்ற கொள்கை திணிப்புகள் என மனம்போன போக்கில் செயல்பட்டிருப்பதால், தங்க வேட்டைக்கு முயற்சி செய்து கவரிங் நகையைக் கைப்பற்றிய கதையாகியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here