‘தந்த்ரா’ சினிமா விமர்சனம்

அமானுஷ்ய ஆர்ப்பாட்டங்களும் அழகிய காதலும் அச்சுப்பிச்சு காமெடியும் கலந்துகட்டி தாறுமாறான அனுபவம் தரும் ‘தந்த்ரா.’

மந்திர தந்திரங்களால், நரபலியால் எதையும் சாதிக்கலாம் என நினைக்கும் ஒரு பெண்மணி. அவளிடம் ஒரு பெண் சிக்குகிறாள். அவளுடைய காதலன் இந்த கதையின் நாயகனாக இருக்க, அவன் அவளைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்க, அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள் அத்தனையும் பயங்கரம்…

மந்திரவாதி எதை அடைய நினைக்கிறாள்? அவளிடம் அந்த பெண் எப்படி சிக்கினாள்? அவளது பின்னணி என்ன? அவளை உயிருடன் மீட்க முடிந்ததா? காதலர்கள், கணவன் மனைவியாக மாற முடிந்ததா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களுமாக கதையை கணிசமான பரபரப்புடன் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் வேதமணி.

கதைநாயகனாக அன்பு மயில்சாமி. ஓரு கட்டம் வரை தன் மாமனுடன் சேர்ந்து குடிப்பது, எந்த கவலையுமின்றி உற்சாகமாக திரிவது, காதலியைச் சூழ்ந்திருக்கும் ஆபத்து தெரிந்தபின் பயந்து பதறுவது என ஒவ்வொரு காட்சியிலும் அவரது இயல்பான நடிப்பு கவர்கிறது.

அபிராமியாக அழகும் இளமையும் நிரம்பியிருக்கும் பிருந்தா கிருஷ்ணன், காதல் உணர்வை வெளிப்படுத்துவதாகட்டும், அமானுஷ்ய சக்தியிடம் சிக்கிக்கொண்டு மிரள்வதாகட்டும் நடிப்பளவில் கவனிக்க வைத்து, பாடல் காட்சியில் மெல்லிய கவர்ச்சியும் காட்டுகிறார்.

மனிதர்களைப் பலி கொடுத்து பெரும் மதிப்பிலான புதையலை அடையத் துடிக்கும் மந்திரவாதி கருடேஸ்வரியாக வருகிற நிகாரிகாவின் கெட்டப் அசத்துகிறது; அவரது மிரட்டலான நடிப்பு படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஆக்கிரமித்து பய உணர்வைத் தூண்டுகிறது.

நிஹாரிகாவின் இன்னொரு அவதாரமாக வருகிற ஜாக் அடிக்கடி தனது கறை படிந்த பற்களைக் காட்டிவிட்டும், உடம்பை அப்படியும் இப்படியும் ஆட்டிவிட்டும் போகிறார்.

ஹீரோயின் பிருந்தாவின் வளர்ப்புத் தந்தையாக வருகிற சசிகுமார் சுப்ரமணியன் படம் முழுக்க அப்பாவியாக பயணித்து கிளைமாக்ஸின் நெருக்கத்தில் வேறொரு விதமான வெறித்தனம் காட்டுவது எதிர்பாராதது.

கதைநாயகனுடன் மது அருந்தி போதையில் உளறிக் கொண்டிருக்கிற ஜாலியான கேரக்டரில் ஜாவா சுந்தரேசன், தேவர் மகன் கமல்ஹாசனைப் போல் வைத்திருக்கும் முரட்டு மீசையால் கவர்கிறார்; அவரது டயலாக் டெலிவரி வ்ழக்கம்போல் கலகலப்பூட்டுகிறது. மின்னல்போல் வந்துபோகிற மனோபாலாவும் தன் பங்கிற்கு லேசாக சிரிப்பூட்டுகிறார்.

நிழல்கள் ரவி, லொள்ளுசபா சாமிநாதன் என இன்னபிற நடிகர், நடிகைகள் கதாபாத்திரங்களின் தன்மையுணர்ந்து நடித்திருக்க,

பின்னணி இசையை கதைக்களத்துக்கு பொருந்தும்படி தந்திருக்கும் கணேஷ் சந்திரசேகர் ‘அவ கண்ணு முழியால’ காதல் பாடலுக்கு வழங்கியிருக்கும் இசை ஆடியன்ஸை பரவச உணர்வுக்குள் தள்ளிவிட்டு, சிவனைப் போற்றிப்புகழும் கிளைமாக்ஸ் பாடல் சிலிர்ப்பூட்டுகிறது.

மந்திரவாதியின் நரபலிக் கூடம், பெரும்பாலான காட்சிகளில் பரவியிருக்கும் இருட்டு என அமானுஷ்ய உலகத்திற்குள் பயணிக்கும் உணர்வைக் கடத்துவதில் ஒளிப்பதிவாளர் ஹாசிஃப் எம் இஸ்மாயில் காட்டியிருக்கும் ஈடுபாட்டுக்கு பாஸ்மார்க்கும் குறைவான மதிப்பெண்களையே கொடுக்க முடியும்.

துஷ்ட சக்தியை வீழ்த்தும் போராட்டத்தில் நல்ல சக்தி சந்திக்கும் சவால்களை பல படங்களில் பார்த்துள்ள நமக்கு, எளிய பட்ஜெட் மேக்கிங்கில் மீண்டும் ஒருமுறை அதே மாதிரியான அனுபவம் கிடைக்கிறது என்பதைத் தவிர தந்த்ராவின் சிறப்பம்சமாக எதையும் சொல்ல முடியவில்லை.

‘உலகத்திலிருந்து கெட்ட சக்திகளை முழுமையாக அகற்றிவிட முடியாது; நல்ல சக்திகளை முழுமையாக வீழ்த்திவிடவும் முடியாது’ என்ற கருத்தோடு படத்தை முடித்திருப்பது ஹலைட்.

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here