நிறைய பேர் தயங்கிய ரோலில் ஹரீஷ் கல்யாண் நடித்துள்ளார்! -‘தாஷமக்கான்’ படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குநர் வினீத் வரபிரசாத் பேச்சு

ஹரீஷ் கல்யாண் _ ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், வட சென்னை பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து வினீத் வரபிரசாத் இயக்கியுள்ள திரைப்படம் ‘தாஷமக்கான்.’ இந்த படத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடந்தது.

அப்போது பேசிய நடிகர் ஹரீஷ் கல்யாண், ”தாஷமக்கான் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம், தமிழ்நாட்டிற்கு கறி சப்ளை செய்யும் இடம் தான் தாஷமக்கான்.

நான் இப்படத்தில் ராப்பராக நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்திற்கு நான் செட்டாவேனா எனச் சந்தேகம் இருந்தது. இயக்குநர் எல்லோருமே தயங்கினார்கள் என்றார், அப்போதே நாம் செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.

தமிழில் ராப் இசைக்கு பெரிய வரலாறு உள்ளது. பலர் இதற்கு முன் ராப் இசையில் கலக்கியுள்ளனர். இண்டி மியூசிக்கிலும் பலர் கலக்கி வருகின்றனர். எனக்கு அவர்கள் எல்லோரும் தான் இன்ஸ்பிரேஷன். என்னுடன் நடித்த ராப்பர்ஸ் அனைவருக்கும் நன்றி. இந்த மாதிரி திறமையாளர்களை அடையாளப்படுத்திய இயக்குநருக்கு நன்றி.

இசை இந்தப்படத்தில் மிக முக்கியம். பிரிட்டோ கலக்கியுள்ளார். ராப், பேட்டில் இசை, ரொமான்ஸ் என பல ஜானரில் பாடல்கள் உள்ளது. சூப்பராக இசையமைத்துள்ளார்.

எல்லோருமே பெரும் உழைப்பைத் தந்துள்ளனர். மதன் லப்பர் பந்துவிற்கு பிறகு என்னுடன் மீண்டும் இணைந்துள்ளார். அவருக்கு நன்றி. அமீர் நடிகராக வந்து, ஒரு பாடல் கொரியோகிராஃபும் செய்துள்ளார். அவருக்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும்.

ஸ்டண்ட் மிகச்சிறப்பாக செய்து தந்த ஓம் பிரகாஷ் மாஸ்டர், தினேஷ் சுப்பராயன் மாஸ்டர் இருவருக்கும் நன்றி. சுனில் சார், சத்யராஜ் சார் இருவரும் முக்கியமான ரோல் செய்துள்ளனர். இருவருக்கும் நன்றி. ஃப்ரீத்தி நன்றாக நடித்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்கு புது அனுபவம் தரும்” என்றார்.

இயக்குநர் வினீத் வரபிரசாத் ”இந்தப்படத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். 8 க்கும் மேற்பட்ட ராப் கலைஞர்கள் அடையாளப்பட்டுள்ளார்கள்.

ஹரீஷ் இப்படத்தில் ராப்பராக நடித்துள்ளார். அவர் ஒத்துக்கொண்டதே எனக்கு ஆச்சரியம் தான். நிறைய பேர் தயங்கிய ரோல் இது. அவர் வந்ததே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இசை சம்பந்தமான படம், நிறைய விவாதித்து, அலைந்து தேடி, இப்படத்தில் ராப் இசையைக் கொண்டுவந்துள்ளோம். எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இப்படத்தில் கொண்டுவந்துள்ளோம்.

இப்படத்தில் உழைத்த அனைத்து உதவியாளர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. அமீர் அவர் நடித்த ரோலுக்கு முதலில் வேறு வேறு நபர்களை அறிமுகம் செய்து கொண்டிருந்தார், நம்ம படத்திற்கு இவர் வேலை பார்க்கிறாரே எனக் கடைசியில் அவரையே நடிக்க வைத்துவிட்டோம். அவர் மிகச்சிறந்த கலைஞர். அவருக்கு இந்தப்படம் முக்கியமானதாக இருக்கும். இந்தப்படம் எல்லோருக்கும் பெரிய வெற்றியைத் தரட்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here