சைபர் கிரைம்களும் சமூக அக்கறை மனிதனும் சந்திக்கிற களமாக ‘இரவின் விழிகள்.’
மாஸ்க் போட்டபடி வருகிற ஒரு நபர் ஒருசிலரை கொடூரமாக கொல்ல, அந்த நபரிடம் யூ டியூபில் பிரபலமாக இருக்கிற ஜோடி சிக்குகிறது.
சிக்கியவர்கள், மாஸ்க் அணிந்த நபரிடமிருந்து தப்பினார்களா? கொலை செய்யப்பட்டார்களா? மாஸ்க்’கில் மறைந்திருப்பவர் யார்?
இந்த கேள்விகளுக்கு எளிமையான திரைக்கதை மூலம் பதிலளித்துள்ள இயக்குநர் சிக்கல் ராஜேஷ், கதையின் நாயகனாக வந்து இன்ஸ்டா யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களால் மக்கள் சந்தித்துவரும் ஆபத்துக்களைக் பட்டியலிட்டு ஆத்திரப்படுவதில் சமூக அக்கறை தெரிகிறது. பணத்துக்காக எதை வேண்டுமானாலும் வீடியோவாக்கி சமூக வலைதளங்களில் பரப்புகிறவர்களை, அதே வலைதளங்களில் தங்களை ஆபாசமாக காண்பித்து சமூகச் சீர்கேட்டுக்கு காரணமாக இருப்பவர்களை கொன்றழிக்க வேண்டும் என்று கொதித்துக் கொந்தளித்து சாம்பிளுக்கு செய்து காட்டுவது மிரட்டல். தங்கை மீதான பாசப்பிணைப்பு நெகிழ்ச்சி.
அவருக்கு தங்கையாக வருபவர் சோஷியல் மீடியாவில் துணிச்சலாக களமாடி ஒரு குறிப்பிட்ட நபரின் கேவலமான செயல்பாடுகள் பற்றி எடுத்துச் சொல்லி, சந்திக்கும் பின் விளைவு பரிதாபமாக இருக்கிறது. அவரும் அண்ணன் மீது பாசத்தை பஞ்சமின்றி பொழிந்திருக்கிறார்.
நல்லது கெட்டது பற்றி யோசிக்காமல் எதை வேண்டுமானாலும் கன்டென்ட்’டாக்குகிற, வியூஸ் வெறிபிடித்து அலைகிற யூ டியூபர்களின் ஜெராக்ஸாக வலம் வருகிற மகேந்திரன் காமெடி என்ற பெயரில் படம் முழுக்க சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவருக்கு ஜோடியாக வருகிற நீமா ரே கொஞ்சமாய் காட்டியிருக்கும் கவர்ச்சி கண்களுக்கு குளிர்ச்சி.
சேரன் ராஜ், சிஸர் மனோகர் இருவரும் படத்தில் பழக்கப்பட்ட முகங்கள் இல்லையென்ற குறையைப் போக்கி, போலீஸ் அதிகாரிகளாக கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வேலையை மனம்போன போக்கில் செய்திருக்கிறார்கள். சீனியர் நடிகர் நிழல்கள் ரவியும் ஒன்றிரண்டு காட்சிகளில் எட்டிப் பார்க்கிறார்.
அடர்ந்த காட்டுக்குள், அடர்த்தியான இருட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை ஒளிப்பதிவாளர் பாஸ்கரின் கேமரா பளீரென பதிவு செய்திருக்கிறது.
ஏ.எம்.அசாரின் இசை பாடல்களுக்கு உற்சாகமூட்டியிருக்கிறது. அஸ்மிதா குத்தாட்டம் போடும் பாடல் சூடேற்றுகிறது.
காட்சிகள் நாடகத்தனமாக இருப்பது படத்தின் பலவீனம்; படம் மூலம் சொல்ல வருகிற கருத்து ஏற்கத்தக்கதாக இருப்பது பலம்.
இரவின் விழிகள் _ சமூகக் களைகளை காவுவாங்கும் கோடரி!
-சு.கணேஷ்குமார்
