தமிழக அரசின் எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரியில் பயின்றவரும், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஜி.என்.ஆர் குமரவேலன் ஆகியோரிடம் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியவரும், சன் தொலைக்காட்சியில் தலைமை நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றியவர் என பல்வேறு அங்கீராங்களுக்குச் சொந்தக்காரரான எஸ்.கே. செந்தில் இயக்கியுள்ள குறும்படம் ‘தனித்திரு.’
ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தற்போது சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வாழ்கையில் ஜெயிக்கப் போராடும் அனைவருக்கும் தன்னம்பிக்கையை கொடுக்கும். இந்த படத்தில் விஜய் ஷங்கர் புதுமுகமாக அறிமுகமாகி உள்ளார்.
இக்குறும்படத்தில் ஊர்வசி அர்ச்சனா, இயக்குனர் சமுத்திரகனி, இயக்குனர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், எம். எஸ். பாஸ்கர் ஆகியோருடன் திரையுலகின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை தந்திருக்கின்றனர்!
இந்த படத்தின் வெளியீட்டு விழா எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில் மாணவர்கள் மற்றும் கல்லூரியின் தலைவர் நடிகர் ராஜேஷ் முன்னிலையில் இயக்குனர் தயாரிப்பாளர் கேயார் வெளியிட இனிதே நடந்தது.
படத்தை பார்த்த மாணவர்கள் ‘இந்த படம் எங்கள் வாழ்வில் தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறது’ என இயக்குநர் செந்திலிடம் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
எஸ்.கே. செந்தில் விரைவில் திரைப்படம் இயக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்!
‘தனித்திரு’ குறும்படம் பற்றி…
புறக்கணிப்பின் வலி இளம்வயதில் மிகக்கொடியது. அதை கடந்து வெல்வது என்பது பெரும் போராட்டம். அதிலும் சினிமாவில் சாதிப்பது மரணப் போராட்டம். பல கோடி கனவுகளில் ஒன்றிரன்டே நனவாகும். மற்றவை தொடர் அவமானங்களால் மரித்துப் போகும்.
அப்படியிருந்தும் சினிமாவில் சாதிக்க மட்டும் ஏன் இத்தனை துடிப்பு? மற்ற எந்த துறையினரையும் விட இதில் வெல்பவர்கள் அடையும் அங்கீகாரமும், பெரும் செல்வமும், இறவாப் புகழுமே காரணம்.
அந்த வகையில் யார் உன்னை புறக்கணித்தாலும் தன்னம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம். நீ வென்ற பிறகு உன்னை ஒதுக்கியவர்களே உன் தயவைத் தேடி வருவார்கள் என்பதை பொட்டில் அடித்தாற் போல் சொல்லவரும் குறும்படம் இது.
கிளைமேக்சில் வரும் திருப்புமுனை காட்சி படத்தின் நாயகனுக்கு மட்டுமல்ல, கொஞ்சம் ரூட்டை மாற்றி வண்டியை திருப்பினால் யார் வேண்டுமானாலும் வெல்லலாம் என்ற ஆகப் பெரும் நம்பிக்கையை நமக்குள் விதைக்கும்.
ஆசைப்பட்டது கிடைக்காமல் போனால் என்ன? செத்தா விட்டோம்? விரும்பிய ஒன்று கைகூடா விட்டால் வாழ்க்கை அதோடு முடிந்துவிடப் போவதில்லை! சற்று மாற்றி யோசித்தால் உலகையே நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கலாம் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, தற்கொலை எண்ணமே நமக்குள் வேண்டாம் என்றும் சொல்கிறது!

