ஏழு கொலைகளை மறைக்க நடந்த 76 கொலைகள்… உயிரை உலுக்கும் கதைக்களத்தில் தடம் பதித்திருக்கிற ‘தடயம்.’
எஸ் ஐ அதியமான போலீஸ் ஸ்டேசனில் இருப்பதைவிட டீக்கடையில்தான் அதிக நேரம் இருப்பார். புதிதாக ஸ்டேஷனுக்கு வந்த இன்ஸ்பெக்டர் ‘இங்க இருக்கிற அக்யூஸ்ட்ங்களவிட உங்க மேலதான் கம்ப்ளைண்ட் அதிகமா இருக்கு’ என்று சொல்லி கண்டிக்கிற அளவுக்கு நடந்து கொண்டிருப்பவர். அவரை அவரது துறை சார்ந்தவர்கள் அப்படி மாற்றி வைத்திருக்கிறார்கள். மனிதர் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் துப்பறிவதில் கில்லாடி. அவரை வைத்துக்கொண்டு, தொடர்ச்சியாக நடக்கும் கொடூர கொலைகளைச் செய்வது யார், என்ன காரணம் என கண்டறிய களமிறங்குகிறார் இன்ஸ்பெக்டர் லெஷ்மி.
டி எஸ் பி ‘அவனுக்கு மனசுல பெரிய ஜேம்ஸ்பாண்ட்னு நினைப்பு’ என கேலி கிண்டல் செய்கிற அளவிலிருக்கிற எஸ் ஐ அதியமான், தொடர் கொலைகளின் பின்னணியை எப்படி கண்டுபிடிக்கிறார், கொலையாளியை எப்படி நெருங்குகிறார் என்பதே, 1999-ல் தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த தொடரின் திரைக்கதை… இயக்கம் நவீன்குமார் பழனிவேல்
அதியமானாக, நேர்மையான போலீஸாக சமுத்திரகனி. உயரதிகாரிகளுக்கு சல்யூட் அடிக்காமல் ஒருவித தெனாவட்டோடு வலம்வரும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அவரை ‘கொஞ்சம் ஒரு மாதிரியான ஆளாக இருப்பாரோ’ என்று நினைக்க வைத்தாலும் துப்பறிவதில் தீவிரமானபிறகு காட்டும் ஈடுபாடும் புத்திசாலித்தனமாக நகர்வுகளும் உடல்மொழியும் அசத்துகின்றன. ஒரு கட்டத்தில் நாமும் அவரோடு இணைந்து பயணிப்பது போன்ற உணர்வு உருவாகிவிடுகிறது.
இன்ஸ்பெக்டராக ஷிவதா. காக்கி உடைக்கேற்ற கம்பீரத்தைக் கச்சிதமாக காட்டியிருப்பவர், திருமணம் நிச்சயமான பெண்ணாக சேலையணிந்து வரும்போது வசீகரிக்கிற புன்னகையும் சேர்ந்துகொள்ள அழகு அள்ளுகிறது.
மேலிட உத்தரவுக்காக, அதிகார வர்க்கத்துக்காக யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்கிற ஆந்திர காவல்துறை உயரதிகாரியாக சுந்தர்பாண்டியன் மனிதாபிமானம் தொலைத்தவராக நடந்துகொள்வது அதிரடியாக இருக்கிறது. டி எஸ் பி’யாக மூணாறு ரமேஷ் அளவாக கெத்து காட்டி நகர்கிறார்.
போலீஸாரின் சூழ்ச்சிக்கு பலியாகி, அதற்கு பழிவாங்க ஊரையே சுடுகாடாக்கும் முடிவோடு யார் யாரையோ கொன்று தீர்க்கும் அண்ணன் தம்பி இருவரில் அண்ணனாக வருகிற ராஜ் திரந்தஸு காட்டும் கொலைவெறி மிரட்டல். அவர்கள் செய்யும் சம்பவங்கள் பயங்கரம்.
போலீஸ் ஜீப் டிரைவராக வருகிற புலிப்பாண்டி போலீஸாரின் கோழிக்கறிக்கு ஆசைப்பட்டு ‘மாமுல்’ புத்தியைக் காட்டுவது ரசிக்க வைக்கிறது.
கதைக்களம் ரணகளமாக இருக்க, அது தரும் பய உணர்வையும் பரபரப்பையும் அதிகரித்துத் தருகிறது பின்னணி இசை. எளிய பட்ஜெட்டில் உருவான படம்தான் என்றாலும் ஒளிப்பதிவின் தரத்தால் பிரமாண்டமாக மாறியிருக்கிறது.
70க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தபிறகும் கொலையாளிகள் யார் என கண்டறியாமலிருக்கிறது ஆந்திர காவல்துறை. நான்கைந்து கொலைகளிலேயே குற்றவாளிகளை சுற்றி வளைக்கிறது தமிழக காவல்துறை. அப்படியிருக்க குற்றவாளிகளை தாங்கள்தான் தண்டிக்க வேண்டும்; தமிழக காவல்துறை பெயரெடுத்து விடக்கூடாது என மல்லுக்கட்டி காரியம் சாதிக்கும் காட்சிகள் காவல்துறைக்குள் இருக்கும் போட்டி பொறமைகளுக்கு சான்று.
போலீஸாரின் அராஜகப் போக்கால் உயிரிழந்த, உயிரிழந்து கொண்டிருக்கிற மக்களின் எண்ணிக்கைக்கு பஞ்சமில்லை. அப்படி அதிகாரத்தில் உள்ள ஒருவரின் சுயநலத்துக்கு போலீஸ் துணைபோனதன் விளைவாக ஏராளமானோர் கொலை செய்யப்படுகிற இந்த பரபர தொடரில் சைக்கோ பாணியில் கொலை செய்பவர்களிடம் நியாயம் கொஞ்சமாகவும் அநியாயம் அதிகமாகவும் இருக்கிறது.
தடயம் – காவல்துறையின் கறுப்புப் பக்கங்கள் மீது பாய்ந்திருக்கும் துளி வெளிச்சம்!
-சு.கணேஷ்குமார்


