தணல் சினிமா விமர்சனம்

அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற பதற்றத்தை உருவாக்கும் காட்சிகளின் தொகுப்பாக, ஆக்சன் அதிரடியில் அனல் பறக்கும் ‘தணல்.’

ஒரு இளைஞனும் அவனுடன் சிலருமாக சேர்ந்து காவல்துறை உயரதிகாரி ஒருவரை கொடூரமாக கொல்கிறார்கள். அந்த சம்பவம் நடந்து ஒன்றிரண்டு வருடங்கள் கழிந்த நிலையில், ஆறு இளைஞர்கள் காவல்துறை பணியில் இணைகிறார்கள். இணைந்த அன்றே, அவர்கள் அப்போது காவல்துறை அதிகாரியை கொன்றவர்களின் கையில் சிக்குகிறார்கள். சிக்கியவர்களை ஒவ்வொருவராக அந்த குழுவினர் கொல்கிறார்கள். அத்தோடு விட்டுவிடாமல் ஒட்டுமொத்த காவல்துறையினரையும் கொல்வது அவர்களின் லட்சியமாக இருக்கிறது. அதற்காக பெரியளவில் திட்டமிடுகிறார்கள்.

கதை இப்படி சூடுபிடிக்க, காவல்துறை பணியில் சேர்ந்த ஆறுபேரில் ஒருவர் ஹீரோ என்கிறபோது அவர் அந்த சதியை தடுக்காமல் விடமாட்டார் என்பதை யூகிக்க முடிகிறது. அவர் எப்படி தடுக்கிறார் என்பது கதையின் மீதி…

அந்த சதிகார கும்பலின் நோக்கம் என்ன? அவர்கள் ஏன் காவல்துறையினரை குறி வைத்து கொல்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கு பதில் தருகிறது திரைக்கதை… இயக்கம் ரவீந்திர மாதவா

பணியில் சேரும் நாளிலேயே கொலைகாரக் கும்பலிடம் சிக்குவது, உடன் வந்தவர்கள் ஒவ்வொருவராக பலியாக அதிர்ச்சிக்குள் விழுவது, அந்த அதிர்ச்சி தந்தவர்களை சந்தர்ப்பம் பார்த்து வேட்டையாடுவது என பரபரக்கும் காட்சிகளில் அதற்கேற்ற வித்தியாசத்தை காட்டி ஃபெர்மாமென்ஸில் அசத்துகிறார் அதர்வா.

போலீஸ்காரர்களை கொல்வதை லட்சியமாக வைத்து கொண்டு அதற்காக ஸ்கெட்ச் போடுகிற கதாபாத்திரத்தில் அஸ்வின் காகுமனு. ஒருசிலர் செய்க தவறுக்கு அந்த துறை சார்ந்த அத்தனைப் பேரையும் போட்டுத்தள்ள முடிவெடுப்பது தவறானதாக இருந்தாலும், கொடூர வில்லன்கள் போல் களமாடியிருப்பதில் குறையில்லை.

ஹீரோவை காதலிக்கிறார்; அதனால் சில பிரச்சனைகளைச் சந்திக்கிறார். எளிமையான வேலைதான். அதை படம் பார்ப்பவர்களுக்கு திருப்தி ஏற்படும் விதத்தில் செய்திருக்கிறார் லாவண்யா திரிபாதி.

கதையின் போக்கு உலகமகா சீரியஸாக இருக்க, ஐடியா கொடுக்கிறேன் என்ற பெயரில் ஷாரா செய்யும் அலப்பறைகள் கொஞ்சம் கொஞ்சம் சிரிப்பூட்டுகிறது.

ஹீரோவின் அப்பாவாக வருகிற அழகம் பெருமாள், ஹீரோயினின் அப்பாவாக வருகிற அருள் டி சங்கர், ‘பிக் பாஸ்’ பரணியிலிருந்து ஹீரோவுடன் கொலைகாரர்களின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள், காவல்துறை அதிகாரிகளாக வருகிற செல்வா, போஸ் வெங்கட், கனிவான முகம் காட்டி திடீரென அதிர்ச்சி தருகிற விதமாக மாறுகிற லெஷ்மிபிரியா என இன்னபிற நடிகர் நடிகைகள் கதையின் தேவைக்கேற்ப நடித்திருக்க, விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி பாய்ந்தோடும் காட்சிகளுக்கு பொருத்தமான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.

இரவு நேரம், தகரங்களால் கூரை அமைக்கப்பட்ட குடியிருப்புகள், வங்கிகளை கொள்ளையடிப்பதற்காகவும் போலீஸாரை ஒரே இடத்தில் திரட்டுவதற்காகவும் உருவாக்கப்பட்ட பிரமாண்ட சுரங்கப்பாதை என பலவற்றிலும் புகுந்து புறப்பட்டு படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது சக்தி சரவணனின் ஒளிப்பதிவு.

படத்தின் கதை எளிய மக்களிடமுள்ள வளமான நிலங்களை சூழ்ச்சி செய்து அபகரித்து தொழிற்சாலை துவங்கும்  கார்ப்பரேட் நிறுவனம், அதற்கெதிராக போராடும் மக்கள் என பல படங்களில் பார்த்ததுதான் என்றாலும், அந்த சூழ்ச்சிகளால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸாரை மட்டும் விரோதிகளாக கருதும்படி கதையை நகர்த்தியிருப்பது தணலின் தனித்துவம்.

அஸ்வின் தலைமையிலான குழு ஓரு பெரிய குடியிருப்பையே தன் கட்டுப்பாட்டில் வைத்து இயங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அதர்வாவும் அவரது நண்பர்களும் அந்த குழுவினரின் செயல்திட்ட கட்டுப்பாட்டு அறையில் வெகு சுலபமாக நுழைந்து ரகசியங்களை கண்டுபிடிக்கும் காட்சிகள் திரைக்கதை வலுவிழந்து பயணிப்பதன் சாட்சியாக இருக்கின்றன.

குறைகள் சிலவற்றை தாண்டி, வங்கியில் கொள்ளையடித்தவர்களை போலீஸார் என்கவுண்டர் செய்யும் ஆரம்பக் காட்சியில் பற்றிக்கொள்கிற பரபரப்பை கிளைமாக்ஸ் வரை கொண்டு சென்ற விதத்தை பாராட்டலாம்!

-சு.கணேஷ்குமார்

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here