‘உம்ஹூம்… சான்ஸே இல்ல. அவளுக்குத்தான் அந்தம்மா உயில்ல பங்கு எழுதி வெச்சுட்டாங்கள்ல. அதுவே அவளுக்கு செம ஜாக்பாட். அப்படியிருக்கிறப்போ அவ ஏன் கொலை பண்ணப் போறா?’
‘அதுவும் சரிதான்; அவளோட லவ்வரை பாத்தா நல்லவன் மாதிரியே தெரியல; அவனாத்தான் இருக்கும்.’
‘அந்த பட்லருக்கு பணத்தேவை அதிகம். அதனால அவன்தான் கொலை செஞ்சிருப்பான். ஆனா, கோர்ட்ல அவன் பேசுறதெல்லாம் பச்சப்புள்ளயாட்டம் இருக்கு.’
‘அந்தம்மாவோட சொந்தக்காரப் பையன்னு ஒருத்தன காட்டுனாங்கள்ல; அவன்தான் கொலைகாரன். கிளைமாக்ஸ்லதான் அது ரிவில் ஆகும்.’
‘நீ வேணா பாரேன்; எலீஸா செத்திருக்க வாய்ப்பில்ல. எல்லாமே ஏதோ டிராமா மாதிரி இருக்கு.;
மேலேயிருப்பதெல்லாம் ‘தி வெர்டிக்ட்’ படத்தின் இன்டர்வலில் பாப்கார்ன் கொறித்தபடியும், கோக்கை ருசித்தபடியும் ஒருசிலர் பேசிக்கொண்டிருந்தவை…
அப்படி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக யோசிக்க வைத்து, எதிர்பார்ப்பை எகிறச் செய்து விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தியிருந்தார் இயக்குநர் கிருஷ்ணா சங்கர்.
இருக்கட்டும், கதை இதுதான்…
விபத்தில் சிக்கி கால்கள் செயலிழந்துபோன பணக்காரப் பெண்மணி எலீஸா, வீல் சேரோடும் தன்னைக் கவனித்துக்கொள்ளும் மூன்று பேரோடும் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் இறந்துபோகிறார்.
அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலான வழக்கு விசாரணையில், எலீஸாவை கவனித்து கொண்டவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு ஆளாகிறார்கள். விசாரணையின் முடிவில் எலீஸாவின் உதவியாளர்களில் ஒருவரும் நிதி ஆலோசகருமான நம்ரதா மீது சந்தேகம் அதிகரிக்கிறது.
கொலையாளி யார் என்பது கிளைமாக்ஸ்.
எலீஸாவாக சுஹாசினி. ஹேர் ஸ்டைல் துவங்கி வீல் சேரில் அமர்ந்தபடி பேசும் விதம் வரை அத்தனையிலும் பணக்காரத்தனத்தைக் கொண்டு வந்திருப்பவர், தன்னுடன் இருக்கிற மனிதர்கள் மீது பிரியம் செலுத்தும்போது கண்களில் கருணை பொங்க வழியும் எளிய மனுஷியாய் மாறியிருக்கிறார். கணவரைப் பிரிந்த துக்கத்திலிருந்து மீண்டு வர முடியாமல் பழைய நினைவுகளுக்குள் பயணிக்கும்போது உணர்வுகளின் கலவையாய் மாறி அனுபவ நடிப்பை அள்ளித் தெளித்திருக்கிறார்.
சுஹாசினிக்கு ஷேர் மார்க்கெட் முதலீட்டு ஆலோசகராக பங்களிப்பைத் தொடங்கி, அவர் தன் சொந்த மகளாக நினைத்து பாசம் காட்டுகிற அளவுக்கு நெருக்கமாகி, சொத்தில் பங்கு எழுதிவைக்கிற அளவுக்கு நல்ல பெயரைச் சம்பாதிப்பவராக ஸ்ருதி ஹரிஹரன். நீதிமன்ற விசாரணையில் தான் கொலை செய்யவில்லை என்பதை எடுத்துச் சொல்லும்போது கண்களும் உதடுகளும் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்புக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் தரலாம். காதல் உணர்வில் மிதக்கும்போது தனது உற்சாகத்தில் நம்மையும் இழுத்துப் போடுகிறார்.
ஸ்ருதி ஹரிஹரனை நிரபராதி என நிரூபிக்க புத்திசாலித்தனமாக ஆதாரங்களை, விவாதங்களை நீதிமன்றத்தில் எடுத்துவைக்கும் வழக்கறிஞராக கம்பீரம் காட்டியிருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
ஸ்ருதி ஹரிஹரனின் காதலனாக வருகிற பிரகாஷ் மோகன்தாஸின் அலட்டலில்லாத அடாவடித்தனங்கள் இடைவேளைக்குப் பிறகான காட்சிகளுக்கு சுறுசுறுப்பு ரத்தம் பாய்ச்சியிருக்கிறது.
கொலைக் குற்ற வழக்கின் விசாரணை ஆணைய உறுப்பினர்களில் ஒருவராக, மனதில் எழுந்த குழப்பங்களைத் தீர்த்துக்கொள்ளத் துடிப்பவராக வித்யூலேகா கவனம் ஈர்க்கிறார்.
சுஹாசினியின் கால் நூற்றாண்டு கால உதவியாளராக வருகிறவரிலிருந்து வழக்கறிஞர்கள், நீதிபதி என மற்ற கதாபாத்திரங்களை ஏற்றிருக்கும் ஹாலிவுட் நடிகர்கள், நடிகைகளின் நடிப்பில் நேர்த்தி தெரிகிறது.
கொரோனா காலகட்டத்தில் நகரும் காட்சிகள் படத்தின் பரபரப்பை பல மடங்காக்கியிருக்க, அதற்கு பொருத்தமாக பின்னிப் பிணைந்திருக்கிறது ஆதித்யா ராவின் பின்னணி இசை.
வளவள சங்கதிகள் படத்தின் நீளத்தை ஆக்கிரமித்துவிடாதபடி எடிட்டிங் பணியை கையாண்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா.
அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு தரம்.
பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்துக்குள்ளேயே சுற்றிச்சுழன்றாலும் அமெரிக்க நீதிமன்ற நடைமுறைகள் நம்மூர் சினிமாக்களில் இடம்பெறுவது போலில்லாமல் வேறொரு விதமாக, வித்தியாசமாக இருப்பதால் சலிப்பு தட்டவில்லை.
ஐட்டம் டான்ஸ், காமெடி கலாட்டா, ஃபேமிலி சென்டிமென்ட், அடிதடி வெட்டுக்குத்து, வன்முறை வெறியாட்டம் என கமர்சியல் மசாலாக்கள் இல்லாத குறையை கதையம்சமும், அதிலிருக்கும் திருப்பங்களும், டிவிஸ்ட்களும், ஹாலிவுட் படத்தை தமிழ் நடிகைகளின் நடிப்பில் பார்க்கிற புதுமையான அனுபவமும் தீர்த்துவிடுகிறது.
தி வெர்டிக்ட் _ டோட்டலி டிபரெண்ட்!
-சு.கணேஷ்குமார்
