சோனி லிவ் (SonyLIV) ஓ.டி.டி. தளத்தில் விரைவில் வெளியாகவிருக்கிற தமிழ் ஒரிஜினல் படைப்பு ‘தமிழ் ராக்கர்ஸ்‘ வலைத் தொடர். இந்த வலைத்தொடர் (Web Series) பைரஸி சைபர் கிரைம்க்கு பின்னணியிலிருக்கும் இருள் பக்கங்களை காட்சிப்படுத்தும் விதத்தில் உருவாகியுள்ளது.
தற்போது இந்த தொடரின் டீஸர் வெளியாகி எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
தொடர் பற்றி… காவல்துறை அதிகாரி ருத்ரா, கட்டுக்கடங்காத ரசிகர்களைக் கொண்ட நடிகரின் மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவான படம் மோசடிப் பேர்வழிகளால் இணையத்தில் வெளியிடப்படுவதை எதிர்த்துப் போராடுகிறார். அந்த குற்றச் செயலுக்குப் பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள் என கண்டுபிடிக்க முயல்கிறார்.
அருண் விஜய் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த தொடரில் நடிகை வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அறிவழகன் இயக்கும் இந்த தொடரை, மனோஜ் குமார் கலைவாணன் எழுத, புகழ்மிகு ஏவிஎம் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தொடர் குறித்து இயக்குநர் அறிவழகன், “ஏவிஎம் புரடக்சன்ஸ் மற்றும் சோனிலிவ் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொடரை உருவாக்குவது மிகுந்த மகிழ்ச்சி. சோனிலிவ் தளம் பார்வையாளர்கள் விரும்பும் வகையில், சிறந்த உள்நாட்டு படைப்புகளை வெளியிட்டு வருகிறது, தமிழ் ராக்கர்ஸ் காவலதிகாரி ருத்ராவின் கதை. இந்த தொடர் சைபர் க்ரைமின் இருண்ட பக்கத்தையும், பொழுதுபோக்குத் துறை அதனுடன் எவ்வாறு போராடுகிறது என்கிற உண்மையையும் வெளிப்படுத்தும். இந்த தொடரில் அருண் விஜய் நடித்தது பெருமையாக உள்ளது. சோனிலிவ் தளத்தில் விரைவில் இந்த தொடரை வெளியிட ஆவலாக உள்ளேன்” என்றார்.
ஏவிஎம் புரடக்சன்ஸ் தயாரிப்பாளர் அருணா குகன், ” ‘தமிழ் ராக்கர்ஸ்’ எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நெருக்கமான தொடராகும், ஏனெனில் எங்களின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளது. இந்த தொடர் மூலம் ஏவிஎம் புரடக்சன்ஸ் முதல் முறையாக ஓடிடி தளத்தில் கால்பதிக்கிறது. திறமை மிகுந்த இயக்குநர் அறிவழகனுடன் பணிபுரிந்ததால், இக்கதையை ஆழமாகவும், அபார திறமையுடனும் காட்சிப்படுத்த முடிந்துள்ளது. அருண் விஜய் சார் நடித்தது இந்த தொடருக்கு மிகப்பெரும் பலத்தை தந்ததுள்ளது. சமீப காலங்களில் அதிகம் பேசப்படும் தொடர்களை, ரசிகர்கள் கொண்டாடும் படைப்புகளை அளித்து வரும் சோனிலிவ் தளத்தில் எங்களது தமிழ் ராக்கர்ஸ் வெளியாவதை காண ஆவலோடு உள்ளோம்” என்றார்.
அறிவழகன் இயக்கி மெகா ஹிட்டான ‘குற்றம் 23′ படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக, காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். அறிவழகன் இயக்கிய பார்டர்’ படத்திலும் அருண் விஜய்தான் ஹீரோ. இப்போது மூன்றாவது முறையாக அறிவழகன் – அருண் விஜய் இருவரும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.