‘உடன்பிறப்பே’ சினிமா விமர்சனம்
‘சாமியே தப்பு செஞ்சாலும் சட்டையபிடிச்சு கேட்டுடணும்’ என சத்தியத்தின் பாதையில் பயணிக்கிற சண்டியர்ப் பேர்வழி சசிகுமார்.
‘எதையுமே சட்டப்படி செய்யணும்’ என்ற கொள்கையைத் தூக்கிச் சுமக்கும் பிடிவாதக்காரர் சமுத்திரகனி.
அண்ணனாய் சசிகுமார் – கணவராய் சமுத்திரகனி. இருவருக்குமிடையில் சிக்கித் தவிப்பவராய் ஜோதிகா…
சசிகுமாரின் போக்கால் சமுத்திரகனி – ஜோதிகா தம்பதியின் வாழ்க்கையில் சிலபல அசம்பாவிதங்கள் நடந்தேற உறவில் விழுகிறது விரிசல். இது கதை… இடையிடையே உறவுகளுக்குள் கல்யாணப் பேச்சுவார்த்தை, ஊர்ப்பெரிய மனிதரின் மகன் அரங்கேற்றும் காமவேட்கை, ஊரின் வளம் கெடுக்க ஆயிரம் அடிக்கு ஆழ்துளைக் கிணறு தோண்ட அடிபோடும் கார்ப்பரேட் நயவஞ்சகம் என நகர்வது திரைக்கதை.
இயக்கம் இரா. சரவணன். ‘கத்துக்குட்டி’ தந்தவரிடமிருந்து அண்ணன் – தங்கை சென்டிமென்டில் கனமான கதையம்சத்துடன் ‘உடன்பிறப்பே.’
ஜோதிகாவுக்கு 50-வது படம்! கதையின் கனமான அம்சங்களை அவர் மட்டுமே தூக்கிக் சுமக்கும்படியான திரைக்கதை. அந்த காட்சிக்கு கண்கள் விரிய வேண்டும், இந்த காட்சிக்கு கன்னங்கள் அதிர வேண்டும், தேவைக்கேற்ப உதடுகள் துடிக்க வேண்டும் என முகத்துக்கு பயிற்சி கொடுத்து பழக்கியபின் படப்பிடிப்புக்குத் தயாராகியிருப்பார் போலும். பாசத்தில் தென்றல், கோபத்தில் சூறாவளி என அம்மணி வருகிற காட்சிகளில் தருகிற நடிப்பு ஆசம்!
ஆழமான கிணற்றுக்குள் இரண்டு உயிர்களைக் காப்பாற்றப் போராடி, ஒரு உயிரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற நிலையில் ஜோதிகா எடுக்கும் முடிவில் எவருக்கும் ரணமாகிவிடும் மனம்!
சசிகுமாருக்கு அடாவடி ஆசாமிகளை அடித்துத் துவைத்தல், அராஜகத்திற்கெதிராய் அரிமா பாய்ச்சல் என உடல்மொழியில் ஆக்ரோஷம் கலந்து விழிகளில் அனல் கக்குகிற பல படங்களில் பார்த்த அதே பாத்திரம். பாசக்கார அண்ணன் என்பது அவரது பாத்திரம் வகிக்கும் கூடுதல் பொறுப்பு; அதற்கான நடிப்புப் பங்களிப்பு சிறப்பு!
நீதி போதனை வகுப்பெடுக்கச் சொன்னால் சமுத்திரகனிக்கு அல்வா சாப்பிடுவது போல். அவருக்கு ஆசிரியர் வேடம் கொடுத்து திருநெல்வேலி இருட்டுக் கடைக்குள் தள்ளி கதவைச் சாத்தியிருக்கிறார்கள்! மனிதர் புகுந்து விளையாடுகிறார்.
போலீஸ் உயரதிகாரியிடம் அடிவாங்கி உதடு கிழிந்து ரத்தம் சொட்டச் சொட்ட வசனம் பேசும்போது, சூரிக்குள் இருக்கும் குணச்சித்திர நடிகர் அட்டனன்ஸ் போடுகிறார். சீரியஸான கதையோட்டத்தில் வியர்த்த உடம்பில் சட்டென காற்று உரசுவதுபோல் அங்கங்கே சிந்துகிறது அவரது டிரேட்மார்க் சிரிப்பு சிப்ஸ்!
கலையரசன், ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி என தேர்ந்த நடிகர்களுக்கு பொருத்தமான பாத்திரங்கள். தீபா சங்கர் ஒரு காட்சியில் வந்துபோனாலும் மனதில் நிற்கிறார்.
‘இசைக்கு கண்ணீரைத் திறந்துவிடும் சக்தியுண்டு; அதற்கான சாவி என்னிடமுண்டு’ என நிரூபிக்கிறார் இசையமைப்பாளர் இமான். பாடல்களில் இனிமையும் இதமும் நிரம்பித் தளும்புகிறது!
கதை நிகழும் புதுக்கோட்டையின் நீள அகலங்களை தனது கேமரா கண்கள் வழி சுற்றிச் சுழன்று பிரமாண்டமாய் காட்சிப்படுத்தியிருக்கிற வேல்ராஜ், போலீஸாக நடித்தும் கம்பீரம் காட்டியிருக்கிறார். படத்தொகுப்பும் கச்சிதம்!
குடும்பத்தோடு பார்க்கலாம். சென்டிமென்ட் பிரியர்களிடமிருந்து சென்டம் மார்க் கேரன்டி!