நகைச்சுவை நாயகன் சதீஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில் உருவாகியுள்ள வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம் ‘வித்தைக்காரன்.’
படம் ஒரு கொள்ளையும் அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்களுமாக, முழுக்க முழுக்க பிளாக் காமெடி சப்ஜெக்டில் உருவாகியுள்ளது.
படத்தின் நாயகி சிம்ரன் குப்தா. ஆனந்த்ராஜ், மதுசூதனன் ராவ், சுப்பிரமண்ய சிவா, ஜான் விஜய், ஆஷிஃப் அலி, பாவெல், ஜப்பான் குமார், சாம்ஸ், சாமிநாதன், மாரிமுத்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் பிப்ரவரி 23-ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் வெங்கி பேசியபோது, ”சதீஷ் பல காலமாக நண்பர், ஹீரோவாகிவிட்டார். இந்தக் கதை சொன்னேன் அவருக்குப் பிடித்திருந்தது. உடனே ஒத்துக் கொண்டார்.
தயாரிப்பாளர் நான் கேட்ட அனைத்தையும் தந்தார். படம் பார்த்தால் உங்களுக்கு தெரியும்.
சிம்ரன் குப்தா என் படத்தின் கதாபாத்திரத்திற்கு மிகச்சரியாக இருந்தார். சுத்தமாக தமிழ் தெரியாது ஆனால் டயலாக்கை தயார் செய்து கொண்டு மிக அர்ப்பணிப்போடு செய்தார். நடித்த அனைவரும் நன்றாக செய்துள்ளனர். நானும் இந்த படத்தில் ஒரு சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் நிறையப் புதுமுகம் தான் வேலை செய்துள்ளனர். அனைவருக்கும் என் நன்றி. படம் உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன்” என்றார்.
நடிகர் சதீஷ் பேசியபோது, ”தமிழக மக்கள் என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டு படம் பார்த்ததற்கு நன்றி. தளபதி விஜய் சார் தான் இந்த படத்தை துவங்கி வைத்தார். அவருக்கு என் முதல் நன்றி. என்னைச் சமீபத்தில் சந்தித்த போது கான்ஜூரிங் கண்ணப்பன் பார்த்ததாகச் சொன்னார். அவர் பாராட்டியது மிகப்பெரிய சந்தோஷம். இயக்குநர் வெங்கி தளபதி விஜய்யின் தீவிர ரசிகர். ‘V’ செண்டிமெண்ட் எங்களுக்கு ஒர்க் அவுட் ஆகி வருகிறது. படம் ஆரம்பித்து வைத்த விஜய் சார், இயக்குநர் வெங்கி, பட டைட்டில் வித்தைக்காரன் என எல்லாம் ‘V’ தான். இப்படம் வெற்றியாக அமையுமென நம்புகிறேன். ஆனந்தராஜ் சார், இயக்குநர் சுப்பிரமணிய சிவா என எல்லோரும் நல்ல ரோல் செய்திருக்கிறார்கள். ஆனந்தராஜ் சாரை எல்லாம் சின்ன வயதில் பார்த்து பயந்திருக்கிறேன். இப்போது அவருடன் நடிப்பது மகிழ்ச்சி. சிம்ரன் குப்தா தமிழே தெரியாமல், டயலாக் மக்கப் பண்ணி அத்தனை அர்ப்பணிப்புடன் நடித்தார், அவருக்கு வாழ்த்துக்கள். இந்தப் படம் நல்ல ஒரு முயற்சியாக செய்துள்ளோம். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது” என்றார்.
நிகழ்வில் நடிகை சிம்ரன் குப்தா, ஒளிப்பதிவாளர் யுவ கார்த்திக், எடிட்டர் அருள் இ சித்தார்த், நடிகர் ரகு, நடிகர் மதுசூதனன், இயக்குநர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோரும் பேசினார்கள்.