திருப்பூர் குருவி சினிமா விமர்சனம்

பொள்ளாச்சி சம்பவத்தில் தொடங்கி இப்போதைய அரக்கோணம் சம்பவம் வரை பெண்கள் மீதான வன்முறைகளுக்கு பஞ்சமேயில்லை. அதே மாதிரியான அதிரவைக்கும் உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திய படைப்பாக ‘திருப்பூர் குருவி.’

பெரிய தொழிற்சாலைகளுக்கு கிராமங்களிலிருந்து பணியாளர்களை தேர்வு செய்து அழைத்துப் போவது, அவர்களுக்கு உணவுடன் தங்கும் வசதி செய்து கொடுப்பது என்பதெல்லாம் பல இடங்களில் நடக்கும் சகஜமான நிகழ்வு. அதேபோன்ற நடைமுறையில், திருப்பூரிலுள்ள துணிமணிகள் தைத்து ஏற்றுமதி செய்யும் நிறுவனத்துக்கு சில இளம்பெண்களையும் இளைஞர்களையும் அழைத்துப் போகிறார்கள். போன இடத்தில் அந்த நான்கு பெண்களை அந்த நான்கு இளைஞர்கள் காதலிக்க, அவர்களின் நாட்கள் உற்சாகமாக நகர்கிறது. இது ஒருபுறமிருக்க அந்த நிறுவனத்தின் சூப்பர்வைசர் பணிப் பெண்களிடம் சில்மிஷத்துடன் பழகி வருகிறார்.

ஒரு கட்டத்தில் அந்த நான்கு பெண்களும் கர்ப்பிணியாகிவிட, கதையில் பற்றிக்கொள்கிறது பரபரப்பு.

தாங்கள் கர்ப்பம் தரித்ததற்கு காரணம் யார் என்பது அவர்களுக்கே தெரியவில்லை என்பது அடுத்தடுத்த காட்சிகளில் ரசிகர்களுக்கு கிடைக்கிற அதிர்ச்சி…

இப்படி, ‘அந்த நிறுவனத்தில் ஏதோவொரு மாபெரும் சம்பவம் நடந்திருக்கிறது’ என்பது நமக்கு புரியும்போது வருகிறது இடைவேளை. அதற்கு பிறகு தெரியவருவதெல்லாம் அதிர்ச்சியின் உச்சத்துக்கு நம்மை கொண்டு செல்லும் சமாச்சாரங்கள்…

குடும்பத்தின் சூழ்நிலையால் தங்களின் ஊரை விட்டு வேறொரு ஊருக்கு வேலைக்குப் போவது, போன இடத்தில் வேலையைக் கற்றுக்கொண்டு சுறுசுறுப்பாக செயல்படுவது, ஜோடி கிடைத்ததும் உற்சாகத்தில் மிதப்பது, கர்ப்பம் தரித்திருப்பது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்து மனம் உடைவது, நடந்த விபரீதம் புரிந்தபின் அதைவிட விபரீதமாக முடிவெடுப்பது என அந்தந்த தருணங்களுக்கேற்ற பொருத்தமான நடிப்புப் பங்களிப்பை தந்திருக்கிறார் நான்கு கதைநாயகிகளில் முதன்மை நாயகியாக வருகிற, அழகும் இளமையும் சரிவிகிதத்தில் கலந்திருக்கிற, புன்னகையால் மனதைக் கொள்ளை கொள்கிற திருக்குறளி. அவர் செய்திருப்பதை காப்பி பேஸ்ட் செய்திருக்கிற தர்ஷினி, இந்து, சுபிக்‌ஷாவின் நடிப்பில் குறையில்லை.

கதைநாயகர்களாக வருகிற கே.எம்.ஆர், விஜயன், சரவணன், ரஞ்சன் என நான்கு பேரும் தங்கள் காதலிகளுடன் நேரத்தைச் செலவிடும்போது உற்சாக முகம் காட்டுகிறார்கள். செய்யாத தவறுக்கு தண்டனையாக கடுமையான உடலுழைப்பு பணியில் ஈடுபடும்போது பரிதாபத்தைச் சம்பாதிக்கிறார்கள். குற்றவாளியை தண்டிக்கும் வாய்ப்பு கிடைத்து ஆத்திர ஆவேசத்தை வெளிப்படுத்தும்போது கண்களில் அனல் கக்குகிறார்கள்.

சிரிக்கும்போது இரு கன்னங்களிலும் குழி விழுகிற பிரியராஜாவுக்கு; சந்தர்ப்பம் பார்த்து குழி பறிக்கும் கதாபாத்திரம். தன் கட்டுப்பாட்டில் பணிபுரியும் பெண்களை கண்டபடி தொட்டுரசுவது, கண்களாலேயே கற்பழிப்பது என கதாபாத்திரத்துக்கேற்ற வில்லங்கமான நடவடிக்கைகளை அப்பாவித்தனத்துடன் செய்திருக்கிற அவர் தனது ‘திருநங்கை’த்தனமான நளினமான உடல்மொழியால் அதிக கவனம் பெறுகிறார்.

‘அருவா சண்ட’ பட நாயகன் இசக்கிராஜாவுக்கு கதையின் முக்கியமான பகுதியை தாங்கிப்பிடிக்கிற பொறுப்பு. அதை கெத்தாக செய்து கடந்துபோகிறார்.

ஜெ.கதிர் தந்திருக்கும் பின்னணி இசை, அரக்கோணம் யுவாவின் ஒளிப்பதிவு படத்தின் பலமாகியிருக்க, பார்த்த காட்சிகளையே மீண்டும் மீண்டும் பார்க்க வைத்திருப்பது பொறுமையைச் சோதிக்கிறது.

கதாபாத்திரங்களில் நல்லவர் ஒருவரை வில்லனாக கருதும்படி ஆரம்பக் காட்சியை அமைத்திருப்பதிலிருந்து பல நாடகத்தனங்கள் படத்தில் உண்டு. நடிகர் நடிகைகள் புதுமுகங்கள் என்பதும் ஆங்காங்கே தெரிகிறது. அதையெல்லாம் தாண்டி திருப்பூரில் நடக்கிற, தான் அறிந்த கொடூரத்தை மக்களின் பார்வைக்கு கொண்டு சேர்க்க முயற்சி செய்திருக்கிற இயக்குநர் ஜெயகாந்தன் ரெங்கசாமியின் துணிச்சல் பாராட்டுகுரியது!

திருப்பூர் குருவி _ சமூக அவலத்தின் சாட்சி!

-சு.கணேஷ்குமார் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here