Home சினிமா நாட்டில் எல்லா திசைகளிலிருந்தும் திரண்டு வந்த உறுப்பினர்கள்; ஆடல் பாடல் கொண்டாட்டம்; ‘விட்பா’ அமைப்பின் இசையமைப்பாளர்...

நாட்டில் எல்லா திசைகளிலிருந்தும் திரண்டு வந்த உறுப்பினர்கள்; ஆடல் பாடல் கொண்டாட்டம்; ‘விட்பா’ அமைப்பின் இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு ‘மியூஸிக்கல் டயமண்ட்’ விருது வழங்கும் விழாவில் உற்சாகம்!

உலகம் முழுவதும் இருக்கிற தமிழ் சினிமா ஆர்வலர்களை ஒருங்கிணைப்பதற்காக திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.எம்.ரஷீம் அவர்களை தலைவராக கொண்டு ‘விட்பா’ (World International Tamil Film Association – WITFA) என்கிற சர்வதேச அளவிலான அமைப்பு சென்னையை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டு, அதன் முதல் மாநாடு கடந்த ஏப்ரல் மாதத்தில் சென்னையில் நடந்தது.

அதையடுத்த பிரமாண்ட நிகழ்வு ‘விட்பா’வின் முதலாவது புத்தக வெளியீட்டு விழாவாகவும், இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு ‘மியூஸிக்கல் டயமண்ட்’ விருது வழங்கும் விழாவாகவும் சென்னை அம்பத்தூரில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெற்றது. விட்பா அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெரியளவில் இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் ‘விட்பா’வின் புத்தகத்தை வெளியிட்டு, விருதினை பெற்றுக்கொண்ட கங்கை அமரன், விட்பா அமைப்பைத் தொடங்கி நடத்திவரும் ஏ.ஆர்.எம்.ரஷீம் அவர்களையும் அவர் இயக்கி விரைவில் வெளிவரவுள்ள திரைப்படத்தைப் பாராட்டியும் தன் பேச்சைத் துவங்கினார்.

‘விடுதலைப் புலிகள்’ தலைவர் பிரபாகரன், வைகோவை சந்தித்து தங்களது அமைப்புக்கு நிதி உதவி கேட்டது, எம் ஜி ஆரை சந்திக்க விரும்பியது, வைகோ கவிஞர் புலமைப் பித்தன் மூலமாக எம் ஜி ஆரை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தது, எம் ஜி ஆரை சந்தித்த பிரபாகரன் உலகின் பல நாடுகளிலுள்ள தமிழர்கள் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் நிதி திரட்டலாம் என்ற யோசனையை தெரிவித்தது, எம் ஜி ஆர் ‘அதையெல்லாம் அமர் (கங்கை அமரன்) பார்த்துப்பார்’ என்று சொல்லி தன்னிடம் பொறுப்பை ஒப்படைத்தது, தான் எஸ் பி பி, சித்ரா, சைலஜா, மலேசியா வாசுதேவன் உள்ளிட்டோருடன் குழுவாக லண்டன், பாரிஸ், டென்மார்க், ஸ்விட்ச்ர்லாந்து, நார்வே, ஸ்வீடன், ஜெர்மன் என பல நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தியது, வெளிநாட்டில் நிகழ்ச்சி நடத்தியபோது சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் நிகழ்ச்சிக்கு வந்ததைவிட தன் நிகழ்ச்சிக்கு அதிக கூட்டம் திரண்டது, அப்படி நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்காக பணம் பெற்றுக்கொள்ளாதது என பல சம்பவங்களை எடுத்துச் சொல்லி இலங்கைத் தமிழர்கள் மீது தனக்கிருந்த பற்றை வெளிப்படுத்தினார். அதையடுத்து, அகதிகளாக இருக்கிற இலங்கைத் தமிழர்களுக்காக இப்போதுகூட அதேபோல் நிகழ்ச்சிகளை நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தனது அண்ணன் இளையராஜா இசையில் உருவான ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ பாடல் தங்களின் தாயார் பாடிய பாடலிலிருந்து உருவானது என்பது தொடங்கி பல சுவாரஸ்ய தகவல்களை சொல்லி, பாடல்களைப் பாடி உறுப்பினர்களை உற்சாகப்படுத்தினார்.

இயக்குநர் பேரரசு ‘விட்பா’வின் முயற்சிகளை ஊக்குவித்து பின்னர் கங்கை அமரந் எழுதிய, இசையமைத்த பாடல்களைப் பற்றி, திரையுலகில் அவரது சாதனைகளை பற்றி விரிவாக பேசி கெளரவித்தார்.

‘விட்பா’வின் தலைவர் தனது பேச்சில் தன்னுடைய வாழ்க்கைப் பயணம் பற்றியும் தனது தந்தை பற்றியும் பேசியது உருக்கமாக அமைய பலரது கண்கள் கலங்கியதை பார்க்க முடிந்தது. 

கங்கை அமரனுக்கு நினைவுப் பரிசாக அவரது உருவம் ஓவியமாக வரையப்பட்டு, அதில்  ஏராளமான விட்பா உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வழங்கப்பட்டது.

விட்பா உறுப்பினர்கள் நிகழ்வுக்கு முன்னும் கங்கை அமரன் முன்னிலையிலும் திரையிசைப் பாடல்களைப் பாடி அசத்தினார்கள்.

விட்பா அமைப்பில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து இணைந்துள்ள ஏராளமான உறுப்பினர்கள் துரத்தைப் பொருட்படுத்தாமல் வந்திருந்து நிகழ்வை கொண்டாட்டமாக மாற்றினார்கள்.

*விட்பா பற்றி:-*

விட்பா கூட்டமைப்பாக இருந்து திரையுலகப் பணிகளை மேற்கொள்கிறது. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். 40 பேர் அமைப்பின் முக்கிய நிர்வாகத்திலும், 150 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். உறுப்பினர்கள் மற்றும் அமைப்பின் ஃபேன்ஸ் கிளப் உறுப்பினர்களாக லட்சக்கணக்கானோர் இணையவிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 1000 பேர் என 50 ஆயிரம் பேர் விட்ஃபா’வில் இணையவிருக்கிறார்கள்.

விட்பாவின் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சொந்த சகோதரர் சத்யநாராயணா நடித்த ’மாம்பழ திருடி’ வரை என் ஆறு திரைப் படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கும் ஏழாவது படம், விட்ஃபா தயாரிக்கும் முதல் படமாக உருவாகி வருகிறது. இந்த படம் மூலம் இலங்கையில் பிரபலமாக இருக்கும் ஒருவர் அறிமுகமாகிறார்.

விட்ஃபா ஒவ்வொரு வருடமும் இரண்டு படங்களை தயாரிப்பதோடு, பத்து படங்களை வெளியிடவிருக்கிறது. இதன் மூலம், இரண்டு தயாரிப்பாளர்கள், இரண்டு இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என பல புதுமுகங்கள் திரையுலகில் அறிமுகப்படுத்தபடுவர்.

விட்ஃபா அமைப்பின் மூலம் வெளியாகும் படங்களைப் பார்க்க உறுப்பினர்களுக்கு, 50 சதவிகித கட்டணச் சலுகை வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்