நடிகர் விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ரசிகர்கள் என்றால் ஏதோ படம் வெளியாகும் போது போஸ்டர் ஒட்டுவது, முதல் நாள் முதல் காட்சியை பார்த்து கொண்டாடுவது என்று மட்டுமில்லாமல், பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்வதோடு, பல சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் செய்யும் சமூக பணிகளும், அவர்கள் பற்றியும் அவ்வபோது செய்திகள் வெளியாவதுண்டு. அதேபோல் வெளிநாட்டில் இருக்கும் விஜய் ரசிகர்கள், ஒரு இயக்கமாக மக்கள் பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் கனடா நாட்டிலிருக்கும் விஜய் ரசிகர்கள்!
கனடா நாட்டில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருவதோடு, கனடா தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கனடா தளபதி விஜய் மக்கள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர், பிரபல தமிழ் சினிமா இசையமைப்பாளர் பரத்வாஜின் மருமகன் கார்த்திக்.